SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீலகிரி மாவட்டத்தில் 10 கோடியில் புதிய பூங்கா உள்பட வேளாண் துறைக்கு 128 கோடியில் புதிய அறிவிப்புகள்: முதல்வர் எடப்பாடி வெளியிட்டார்

2018-06-15@ 01:37:49

சென்னை: நீலகிரி மாவட்டத்தில் ரூ.10 கோடி செலவில் புதிய பூங்கா உள்பட ரூ.128 கோடியில் வேளாண் துறைக்கு புதிய அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி வெளியிட்டார்.
சட்டப்பேரவையில் நேற்று 110வது விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை படித்தார். அதில் கூறி இருப்பதாவது:
தமிழக அரசு சூரிய சக்தி கொள்கை’’ ஒன்றை 2012ம் ஆண்டில் உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. இதுவரை, தமிழகத்தில் 3,112 சூரிய சக்தி பம்ப் செட்டுகளும், 181 சூரிய உலர்ப்பான்களும், ரூ.117 கோடியே 24 லட்சம் மானியத்தில் நிறுவப்பட்டுள்ளன. இலவச மின் இணைப்பை ஏற்கனவே பெற்றுள்ளவர்கள் மின் இணைப்பை துறப்பதற்கு முன்வந்தால், இத்திட்டத்தின் கீழ், 90 சதவீத மானியத்தில் சூரிய சக்தி மோட்டார் பம்ப் செட்டுகள் அமைத்து தரப்படும். அதன்படி, டெல்டா மாவட்டங்கள் அல்லாத பிற பகுதிகளுக்கு 500 சூரிய சக்தி மோட்டார் பம்பு செட்டுகள் என மொத்தம் 1,000 சூரிய சக்தி மோட்டார் பம்பு செட்டுகள் ரூ.50 கோடி செலவில் 90 சதவீத மானியத்தில் நிறுவப்படும்.
* காய்கறி மற்றும் பழங்களுக்கு ஆதாரமாக பந்தல் அமைத்தல், நிலப்போர்வை அமைத்தல் போன்ற தொழில்நுட்பங்களை மேற்கொள்ள ரூ.10 கோடி நிதி வழங்கப்படும்.
* கிருஷ்ணகிரி மாவட்டம் தளியில் செயல்பட்டு வரும் தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்திலும், திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தில் இயங்கி வரும் காய்கறி மகத்துவ மையத்திலும், தோட்டக்கலை அறிவியல் சார்ந்த ஈராண்டு பட்டய படிப்பு நடப்பு கல்வி ஆண்டில் துவங்கப்பட்டு, 50 மாணவர்கள் சேர்க்கப்படுவர்.
* ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள் இதுவரை 146 வட்டாரங்களில் ரூ.219 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளன. நடப்பாண்டில், மேலும் 9 வட்டாரங்களில் இம்மையங்கள் ரூ.18 கோடி செலவில் கட்டப்படும்.
* உதகமண்டலம் தாவரவியல் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதை கருத்தில்  கொண்டு, நடப்பாண்டில், நீலகிரி மாவட்டத்தில் 80 ஏக்கர் பரப்பளவில்  புதிதாக `இருநூற்றாண்டு பசுமை புல்வெளி’ எனும் புதிய பூங்கா ஒன்று ரூ.10 கோடி செலவில் அமைக்கப்படும். ஆண்டுதோறும், சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் அரசு ரோஜா பூங்காவிற்கு வருகை புரிவதால், போக்குவரத்து நெரிசல் அதிகமாகி, வாகனம் நிறுத்துவதற்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. இதனால் நீலகிரி நகரத்தில் 500 வாகனங்களை நிறுத்தும் வகையில் வாகன நிறுத்துமிடம் ரூ.3 கோடி செலவில் அமைக்கப்படும்.
ஆக மொத்தம் ரூ.127 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் அறிவித்துள்ள இத்திட்டங்கள் மூலம் தமிழ்நாடு வேளாண்மையும், விவசாயிகளின் வாழ்வாதாரமும் மேலும் செழிக்க வழிவகை ஏற்படும். இவ்வாறு கூறினார்.

எம்எல்ஏக்களுக்கு பலாப்பழம்

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது நெய்வேலி தொகுதி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் பேசும்போது, தனது தொகுதியில் முந்திரி மற்றும் பலாப்பழம் அதிக அளவில் கிடைக்கிறது. அதனால் இதற்கு தனி தொழிற்சாலையை அரசு அமைக்க வேண்டும். பலாப்பழத்தில் நிறைய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கலாம். அதற்குரிய பயிற்சி பெண்களுக்கு அளிக்க வேண்டும். இதன்மூலம் ரூ.200க்கு விற்கப்படும் பலாப்பழத்துக்கு ரூ.500 வரை கிடைக்கும் என்றார்.இதற்கு பதில் அளித்து பேசிய ஊரக தொழில்துறை அமைச்சர் பென்ஜமின், போதிய அளவு உற்பத்தி இல்லாததால் அதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால் அங்கு உற்பத்தியாகும் பலாப்பழம் சுவை மிகுந்தது என்றார். உடனே எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் பேசும்போது, “சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தினசரி என்னென்னவோ ஒரு பொருள் வழங்குகிறீர்கள். அதேபோன்று எம்எல்ஏக்களுக்கு ஒரு பலாப்பழம் கொடுத்தால் அதன் சுவை பற்றி தெரிந்து கொள்ளலாம்” என்றார். அமைச்சர் பென்ஜமின்: நீங்கள் (துரைமுருகன்) பலாப்பழம் சாப்பிடுவதாக இருந்தால் கொடுக்க தயாராக இருக்கிறோம் என்றார். இந்த விவாதத்தால் சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • chennai_pkankatchui1

  சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

 • israelmoonshuttle

  சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

 • chennai_laksh1

  திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

 • chinadance

  சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

 • Autoshow2019

  கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்