SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குமரி மாவட்டத்தில் கணக்கு காட்டுவதற்காக தூர்வாரப்படும் பாசன கால்வாய்கள் : விவசாயிகள் குற்றச்சாட்டு

2018-06-14@ 21:05:29

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் கணக்கு காட்டுவதற்காகவே பாசன கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் நடப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர். குமரி மாவட்டத்தில் 2,167 பாசன குளங்கள் உள்ளன. 763 கிலோ மீட்டரில் பாசன கால்வாய்கள் அமைந்துள்ளன. இந்த பாசன கால்வாய்கள் பொதுப்பணித்துறையின் நீர் வள ஆதார அமைப்பு சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது தென் மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் மாவட்டத்தில் சாகுபடி பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் தற்போது பாசன கால்வாய்கள் தூர்வாரும் பணிகளும் நடக்கின்றன.

மழை தொடங்கி உள்ள நிலையில் பாசன கால்வாய்கள் தூர்வாரப்பட்டு வருவது விவசாயிகளை கலக்கம் அடைய செய்துள்ளது. கோடை காலத்தில் செய்ய வேண்டிய கால கட்டத்தில் மிகவும் அலட்சியமாக இருந்த அதிகாரிகள், இப்போது மழை காலத்தில் கால்வாயை தூர்வாரி வருகிறார்கள்.
இவ்வாறு தூர்வாரும் மணலை கரை ஓரங்களில் குவித்து வருகிறார்கள். தூர்வாரிய சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கி விடுவதால், அந்த மணல் அப்படியே கரைந்து மீண்டும் பாசன கால்வாய்க்குள் சென்று விடுகிறது. இதனால் தூர்வாரியும் எந்த பலனும் இல்லாத நிலை உள்ளது. தூர்வாரப்படும் மணல், மீண்டும் கால்வாய்க்குள் விழுவதை தடுக்கும் வகையில் கான்கிரீட் கற்கள் கரைகளில் அடுக்கப்பட வேண்டும்.

ஆனால் அதற்கான நிதி ஆதாரங்கள் பொதுப்பணித்துறையிடம் இல்லை. இப்போது நடைபெறும் பணிகளை கடந்த ஆண்டு வர  வேண்டிய நிதியை கொண்டு தான் கணக்கு காட்டுவதற்காக தூர்வாரும் பணிகள் நடப்பதாக விவசாய சங்கங்கள் குற்றம் சாட்டி  உள்ளன. கள பணியாளர்கள் சோகம் : இதற்கிடையே கால்வாயில் ஏற்படும் அடைப்புகள் சீரமைப்பு, ஷட்டர்கள் திறப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் கள பணியாளர்களுக்கு கடந்த 5 மாதங்களாக சம்பளம் வழங்கப்பட வில்லை. இதனால் தொழிலாளர்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். குடும்ப செலவுக்கு கூட வருமானம் இல்லாமல் கடன் வாங்கி இப்போது அந்த கடனுக்கும் வட்டி கட்ட முடியாமல் தவிப்பதாக ஊழியர்கள் கண்ணீர் மல்க கூறினர்.

பள்ளிகளில் குழந்தைகளுக்கு கல்வி கட்டணம், புதிய சீருடைகள் உள்ளிட்டவை எல்லாம் வாங்க  கூட போதிய பணம் இல்லாமல், அக்கம் பக்கத்தில் வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய நிலையில் தவித்து வருகிறார்கள். தற்போது தென் மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால், இனி நாள் தோறும் வேலைப்பளு இருக்கும். விடிய, விடிய கால்வாய்கள், பாசன குளங்களை கண்காணிக்க வேண்டும். எந்த நேரத்தில் எங்கு உடைப்பு ஏற்படுகிறது என்பதை கண்டறிய மழை பொருட்படுத்தாமல் பணியாற்றிட வேண்டும். இவர்களுக்கு ஏற்கனவே அரசின் விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்பட வில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் கடந்த 5 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் இருப்பதால் இந்த தொழிலாளர்களின் குடும்பங்களின் நிலை பரிதாபமாக மாறி உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட கலெக்டரின் கவனத்துக்கும், பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளுக்கும் மனு அனுப்பியும் எந்த பலனும் இல்லை. அடுத்த கட்டமாக குடும்பத்துடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்த உள்ளோம் என இத் தொழிலாளர்கள் கூறி உள்ளனர். எனவே உடனடியாக சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • thaneerrr_kaari

  தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

 • gold_navaratchri11

  நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

 • balore_arrrres1

  சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது

 • gasa_vanvali111

  காசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி

 • hondu_aaas1

  அதிக வறுமை, ஊழல் நிலவும் ஹோண்டுராஸ் நாட்டில் இருந்து சுமார் 1,500 குடியேறிகள் அமெரிக்கா நோக்கி பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்