SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

6 நாட்களாக உணவின்றி மணல் திட்டில் தவிப்பு பவானி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய தம்பதி மீட்பு

2018-06-14@ 00:44:38

மேட்டுப்பாளையம்: மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்து ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பவானி ஆற்று வெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடிய தம்பதி 6 நாட்களுக்கு பின் நேற்று மீட்கப்பட்டனர்.தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன்காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையொட்டியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, தேனி, நீலகிரி, கோவை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் மலை பகுதிகளில் இரவில் விடிய, விடிய மழை பெய்கிறது. இதனால், ஆறுகள், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தமிழக-கேரள எல்லையில் அட்டபாடி கிராமம் உள்ளது. இங்கு பட்டிமாளம் பகுதியை சேர்ந்த சுகுணன்(70), அவரது மனைவி வல்சம்மா(65) ஆகியோர் ஒரு ஏக்கர் நிலத்தில் மரவள்ளி கிழங்கு விவசாயம் செய்து வருகின்றனர். இவர்கள் தோட்டத்துக்கு பவானி ஆற்ைற கடந்துதான் செல்லவேண்டும். கடந்த 8ம் தேதி இருவரும் தோட்டத்தில் இருந்தபோது, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. உடனே, இருவரும் வெளியேற முடியாததால் ஆற்றின் நடுவில் உள்ள மணல் திட்டில் நின்று கொண்டனர்.

இந்தநிலையில், 9ம்தேதி பில்லூர் அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டு பவானி ஆற்றில் அதிகளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், இவர்கள் இருவரும் சிக்கிக் கொண்டது யாருக்கும் தெரியவில்லை. செல்போனும் இல்லாததால் யாரையும் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. நேற்று முன்தினம் மாலை அப்பகுதி மக்கள் மறுகரையில் நின்று பார்த்தபோது தம்பதியினர் ஆற்றின் நடுவே உள்ள மண் திட்டில் அமர்ந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அட்டபாடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சென்று  இருவரையும் கயிறு மூலம் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், ஆற்றில் தண்ணீர் வேகம் அதிகமாக இருந்ததாலும், இரவு நேரம் என்பதாலும் மீட்பு பணியை தொடர முடியாமல் திரும்பினர். நேற்று காலை மீண்டும் மீட்பு பணியை தொடங்கினர். 2 மரங்களுக்கிடையில் கயிறு கட்டி இருவரையும் பத்திரமாக மீட்டனர். இதனை தொடர்ந்து 6 நாட்களாக சாப்பிடாமல் சோர்வுற்றிருந்த தம்பதிக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டது.

கரையோர மக்களுக்கு எச்சரிக்கை:  பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் 5-வது நாளாக நேற்று காலையும்  அணையிலிருந்து 19,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுள்ளது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் உயரம் 105 அடி உயரம், 32.8 டிஎம்சி கொள்ளளவு ஆகும். இந்த அணைக்கு பவானி மற்றும் மாயாறு என இரு ஆறுகள் வழியாக தண்ணீர் வருகிறது. கடந்த 4 தினங்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 55 அடியாக இருந்தது. தொடர்மழையால். நீர்மட்டம் 67.30 அடியாகவும், நீர் இருப்பு 9.9 டி.எம்.சி.யாகவும் உள்ளது. கடந்த 4 நாட்களில் அணையின் நீர்மட்டம் 12 அடி உயர்ந்துள்ளது.கால்வாயின் கரைகளில் உடைப்பு: நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து செங்களாகுறிச்சி கால்வாய் செல்கிறது. தொடர்மழையால் தண்ணீர்வரத்து அதிகரித்து கால்வாயின் கீழசேனி, நடுசேனி பகுதியில் 2 இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நம்பியாற்றில் காட்டாற்று வெள்ளம் அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி  கடந்த 9ம் தேதி தலையணை  மற்றும் திருக்குறுங்குடி நம்பி கோயில் நுழைவாயில்கள் மூடப்பட்டன. தற்போது, நம்பியாற்றில் வெள்ளம் தணிந்ததையடுத்து திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு பின் நேற்று முதல் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது. திருக்குறுங்குடியில் மூடப்பட்டிருந்த வனத்துறை சோதனையும் சாவடி திறக்கப்பட்டது.3 அணைகள் நிரம்பியது: குமரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பெருஞ்சாணி, சிற்றார்-1, சிற்றார்-2 ஆகிய அணைகளில் நீர்மட்டம் வெள்ள அபாய அளவை எட்டியுள்ளது. இதனால், 3 அணைகளுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணைகளில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்படும் தருவாயில் தண்ணீர் பாயும் ஆறுகளின் கரையோர பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-08-2018

  20-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 19-08-2018

  19-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-08-2018

  18-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • lastfinaldest111

  21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்

 • finaldesti000

  மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்