SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

10 ஆண்டுகளில் 1137 நபர்களிடம் 6481 உடல் உறுப்புகள் இலவசமாக வாங்கி கோடிக்கணக்கில் விற்பனை: ரேட் பிக்சிங்

2018-06-13@ 21:51:01

சென்னை: உடல் உறுப்பு தானம் தொடங்கப்பட்டு கடந்த 10 ஆண்டுகளில் 1137 நபர்களிடம் பெறப்பட்ட 6481 உடல் உறுப்புகளை பல கோடி ரூபாய்களுக்கு விற்பனை செய்துள்ள அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் கடந்த அக்டோபர் 2008ம் ஆண்டு உடல் உறுப்பு தானம் தமிழகத்தில் முதன் முதலாக தொடங்கி வைக்கப்பட்டது. இந்தத் திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் ஆன நிலையில்  தற்போது 2018 மார்ச் வரை 1137 நபர்களிடம் இருந்து மொத்தம் 6481 உடல் உறுப்புகள்  தானமாக பெறப்பட்டு உள்ளது. இதில் இருதயம் 430, சிறுநீரகம் 2059, கல்லீரல் 1060, நுரையீரல் 292,  கண்கள் 1731, தோல் 100  என  இவ்வளவு உறுப்புகள் பெறப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலும் ஏழைகளுக்கு சென்றடையாமல் பணக்காரர்களுக்கும் வசதி படைத்தவர்களுக்கும் சென்றடைந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எந்தெந்த உறுப்புக்கு எவ்வளவு விலை? குடிக்கும் கலாசாரம் தற்போது அதிகரித்துள்ளதால் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு  கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை  அதிகளவில் நடக்கிறது. அதன்படி, ஒரு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய  அதிகபட்சமாக 40 லட்சத்திலிருந்து 50 லட்சம் வரை விலை  நிர்ணயம் செய்து வசூலிக்கின்றனர். அவ்வாறு பார்த்தால் தனியாருக்கு கிடைத்த 1060 கல்லீரல்களில்  குறைந்தபட்சமாக 30 லட்சம் மட்டும் வைத்தாலும் 300 கோடிகளை தொட்டுள்ளது இந்த வியாபாரம். அடுத்தப்படியாக கிட்னி 30 லட்சம் முதல் 70 லட்சம் வரை நிர்ணயம் செய்துள்ளனர். இதில், ஒரு கிட்னிக்கு 30 லட்சம் வைத்தாலும் 2059 கிட்னிகளுக்கு 600  கோடிகளுக்கு மேல் விற்பனை செய்துள்ளனர்.
 
இதில் தானமாக  உடல் உறுப்புகளை கொடுக்கும் நபர்களுக்கு  நூறு ரூபாய் கூட கொடுப்பதில்லை. ஆனால் உடல் உறுப்புகளை  தானமாக  வாங்கும் நபர்களிடம் லட்சக்கணக்கில் அறுவைச் சிகிச்சை பணம் என்று வசூல் செய்து வருகிறார்கள்.  இவ்வாறு நடக்கும் அறுவை சிகிச்சைகளுக்கு  தனியார் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பில் தரமாட்டார்கள். பெரும்பாலும் கணக்கில் வராமல் காட்டுவதாக கூறப்படுகிறது. இதனால், பெரும்பாலும் கறுப்புப் பணமாக பெறப்படுகிறது. நோயாளிகள் உயிரைக்  காப்பாற்றினால் போதும் என்கிற மனநிலையில் இருப்பதால் இந்த விவகாரம் வெளிச்சசத்திற்கு வருவதில்லை என்று நேர்மையான மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

ரேட் பிக்சிங்: விபத்தில் தலையில் அடிப்பட்டு உயிருக்கு போராடுபவர்களை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு  சென்றுவிட்டால் போதும் அந்த நபர் மூளைச்சாவு அடைந்துள்ளாரா என்று உறுதிபடுத்துவதில் அதீத அக்கறை கொள்வார்கள். அடுத்து உறவினர்களின் சம்மதம், போலீஸ், அரசு மருத்துவ நிபுணரின் ஒப்புதல் என்று ஜெட் வேகத்தில் சில நிமிடங்களிலேயே அனைத்து நடைமுறைகளையும் முடித்து விடுகின்றனர். அடுத்த கனமே ஒவ்வொரு உறுப்புகளும் எங்கெங்கு அனுப்பப்படவேண்டும் என்றும் எந்த  மருத்துவமனையில் உடல் உறுப்பிற்காக காத்திருக்கும் நபர்களின் பட்டியலில் வந்து விடும். இது ஒரு பெரிய நெட் ஒர்க் என்பதால் இதை எளிதில் கண்டுபிடிக்க முடியாது.

மேலும் எந்த உறுப்பு தக்கவைத்துகொள்ளவேண்டும் என்ற விபரத்தினை தமிழக அரசிடம் பெற்று கொண்டு அடுத்த கனமே அறுவை சிகிச்சை  செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். இதற்கு பெயர்தான்  ரேட் பிக்ஸிங். உடல் உறுப்பு அறுவைச் சிகிச்சை  செய்யும் இடவசதியோ அல்லது மருத்துவ வசதிகளோ அரசு மருத்துவமனைகளில்  இல்லாத சூழல் இருப்பதால் தனியார் மருத்துவ மனைகளில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை  செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதுவரை ஒரு அரசு மருத்துவக்  கல்லூரி மருத்துவமனைகளில் ஒரு உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை  கூட நடக்கவில்லை.
மதுரையில் ஒரே ஒரு இதயம் மாற்று அறுவை சிகிச்சையை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு  செய்தனர்.

ஆனால் அறுவை சிகிச்சை  நடந்த  அடுத்த நாளே இறந்து விட்டார் அந்த பயனாளி. ஆகவே இது பெயிலியர் என்று கூறுவதுண்டு. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தானமாக பெறப்பட்ட ஆயிரக்கணக்கான உடல் உறுப்புகள் ஒன்று கூட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்கு வழங்கவில்லை என்பதுதான் நிதர்சன உண்மை.   வெளிநாடுகளுக்கு இந்த உறுப்புகள் அனைத்தும் விற்பனை செயப்பட்டுள்ளதாக தற்போது புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில்தான் அரசே இதற்கு ஒரு வாரியம் அமைத்து அதை வெளி மாநிலங்களில் உள்ள வசதிபடைத்தவர்களுக்கெல்லாம் உடல் உறுப்புகளை வாரி வழங்கியுள்ளனர்.

மேலும் உடல்  உறுப்புகளை  இலவசமாக பெற்று அதை கோடிக்கணக்கில் விற்பனை செய்ததோடு இதை ஒரு கொடை வள்ளல் மாநிலம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்வதாக அரசு சீனியர் மருத்துவர்களே  கூறுகின்றனர். எனவே, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு எழை மக்களின் உறுப்புகளை உரிய பயனாளிகளுக்கு பொருத்தாமல், வியாபார நோக்கில் பல கோடி முறைகேடு நடந்து உள்ள உடலுறுப்பு தான மோசடி குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • iraqbikersride

  ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

 • niagarafallssnow

  கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

 • SiddhagangaSivakumarasamy

  பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

 • govindpmawards

  பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

 • 23-01-2019

  23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்