SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழக அரசியலில் மாற்றத்தை உருவாக்கும் 18 எம்எல்ஏ வழக்கில் நாளை தீர்ப்பு: சென்னை உயர் நீதிமன்றத்தில் பரபரப்பு

2018-06-13@ 18:50:15

சென்னை: எடிப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆளுநரிடம் மனு கொடுத்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து 18 எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு வெளியிடப்படுகிறது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பதவியிலிருந்து நீக்கக்கோரி டிடிவி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததையடுத்து 18 எம்எல்ஏக்களை பேரவைத் தலைவர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். இதை எதிர்த்து டிடிவி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேர் சார்பில் மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வி ஆஜராகி வாதிட்டார். தமிழக அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தஹி ஆஜராகி வாதிட்டார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி சார்பில் மூத்த வக்கீல் சி.எஸ். வைத்தியநாதன் ஆஜராகி வாதிடும்போது, கட்சி தாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க பேரவைத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது என்று வாதிட்டார்.
இதையடுத்து, 18 எம்எல்ஏக்கள் சார்பில் மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன் பதிலளித்து வாதிடும்போது, எடியூரப்பா வழக்கில் கர்நாடக எம்.எல்.ஏ-க்கள் கொடுத்த கடிதத்தை போலதான் நாங்களும் மனு கொடுத்தோம். இதுகட்சி தாவல் இல்லை. எடியூரப்பா வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு இதுவரை உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்படவில்லை என்று வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை தலைமை நீதிபதி கடந்த ஜனவரி 24ம் தேதி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்நிலையில், கடந்த 5 மாதங்களாக இந்த தீர்ப்பு வெளியிடப்படாததால், தீர்ப்பை விரைவில் வெளியிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதைக் கேட்ட தலைமை நீதிபதி, இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும். எப்போது தீர்ப்பு வழங்க வேண்டும் என்பது நீதிபதிகளுக்குத் தெரியும் என்று தெரிவித்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியுடன் சேர்ந்து விசாரித்த நீதிபதி சுந்தர், தற்போது  உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குகளை விசாரித்து வருகிறார். இதனால் 18 எம்எல்ஏக்கள் வழக்கில் தீர்ப்பு வழங்க வேண்டுமானால், நீதிபதி சுந்தர் சென்னைக்கு வரவேண்டும்.
 
இந்நிலையில், நீதிபதி சுந்தர் நாளை சென்னைக்கு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அவர் ஏற்கனவே தனது தரப்பு தீர்ப்பை எழுதிவிட்டார் என்று கூறப்படுகிறது. தலைமை நீதிபதியும் தீர்ப்பை எழுதிவிட்டார் என்றும் கூறப்படுகிறது. எனவே, நீதிபதி சுந்தர் நாளை சென்னை வரும் பட்சத்தில் 18 எம்எல்ஏக்கள் வழக்கில் நாளை தீர்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தீர்ப்பு அளிக்கப்பட்டால் தமிழக அரசியலில் பெரம் பரபரப்பு ஏற்படும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

எடப்பாடி அரசு தப்புமா?
18 எம்எல்ஏ-க்கள் பதவி பறிப்பு செல்லாது என்று தீர்ப்பானால் எடப்பாடி அரசு கவிழும். 234 பேர் கொண்ட சட்டசபையில் தற்போது எடப்பாடிக்கு ஆதரவு 111 எம்எல்ஏ-க்கள் உள்ளனர். திமுக அணி 98, டிடிவி ஆரவு 4, கருணாஸ் அணி 3, மொத்தம் 105 எம்எல்ஏ-க்கள் உள்ளனர். 18 பேர் பதவி செல்லும் என்றால் எடப்பாடி எதிர்ப்பு 123 ஆகிவிடும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • birdfestivalcanada

  கனடாவில் வான்கூவர் நகரில் நடைபெற்ற பறவை திருவிழாவில் பறவைகள் போல உடையணிந்து தன்னார்வலர்கள் பங்கேற்பு

 • militaryparangimalai

  ராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், யானை தந்தங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம்

 • guwahatidiadhani

  குவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

 • koreanwarmeet

  கொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு

 • srilankakitefestival

  இலங்கையில் பட்டம் திருவிழா கோலாகலம் : பல்லாயிரக்கணக்கானோர் வண்ணமயமான பட்டங்களுடன் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்