SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இன்று சர்வதேச சுற்றுச்சூழல் தினம்: மாசு தவிர்த்து மாண்பு காப்போம்

2018-06-05@ 17:39:22

இன்று ஜூன் 5 சர்வதேச சுற்றுச்சூழல் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. உயிர் வாழ்க்கைக்கு சுற்றுச்சூழல் மாசு இன்றி இருத்தல் மிக அவசியம். அன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தனர். இதனால் சுற்றுச்சூழல் மாசு இன்றி காணப்பட்டது. இதனால் பல்லுயிர்களும் பல்கி பெருகின. ஆனால் இன்று உயிர் வாழ்வதே பெரும்பாடாக உள்ளது.
இன்றோ இயற்கையை அழித்து செயற்கை வாழ்க்கை வாழ்கிறான் மனிதன். இதனால் காற்று மாசு, நீர் மாசு, மண் மாசு, விண் மாசு, ஒலி மாசு என எங்கு திரும்பினும், எங்கு காணினும் மாசு. நம்மை சுற்றி சுற்றுச்சூழல் மாசடைந்து விட்டது. விளைவு... புதுப்புது நோய்கள். மனிதனுக்கு மட்டுமின்றி உலக உயிர்கள் அனைத்தும் சுற்றுச்சூழல் சீர்கேட்டால் பெரும் பாதிப்பை அடைந்து வருகின்றன.

ஏற்கனவே பசுமை வீட்டு வாயுக்களால் பூமியின் வெப்பம் உயர்ந்து, துருவ பனி உருகி கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. அதுபோல காற்று மாசு காரணமாக வளிமண்டல ஓசோனில் ஓட்டை விழுந்து சூரிய கதிர்களின் நேரடி தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனால் உயிரினங்களுக்கு பலவித பாதிப்புகள், நோய்கள் என அவலம் தொடர்கிறது. இதுபோல இன்று பிளாஸ்டிக் பயன்பாடு மிகவும் அதிகரித்து விட்டது. எங்கும், எதிலும் பிளாஸ்டிக் இன்றி வாழ முடியாது என்ற நிலையில் மக்கள் உள்ளனர். ஆனால் இதன் விபரீதமாக எங்கும் பிளாஸ்டிக் குப்பைகள் நிறைந்து மண் மட்டுமின்றி கடல் உட்பட நீர்நிலைகளும் மாசடைந்து வருகின்றன. பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் பல்வேறு உபாதைகள், நோய்கள் மனிதனுக்கு ஏற்படுகின்றன.

பிளாஸ்டிக் கவர்களில் சூடாக ஊற்றப்படும் டீ, காபி, குழம்புகள், பிளாஸ்டிக் பேப்பர்கள், பிளாஸ்டிக் தட்டுகளில் சூடாக உணவருந்தும்போதும், அதனுடன் சிறிதளவு பிளாஸ்டிக்கையும் உண்கிறோம். விளைவு வயிற்று வலி உட்பட பல்வேறு உபாதைகள். கேன்சர் உள்ளிட்ட பல்வேறு நோய்கள். தூக்கியெறியும் பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் உயிர்களும் மடிகின்றன. மேலும் இந்த குப்பைகள் மட்காமல் நிலத்தில் நீர்சென்று சேராமல் தடுத்து விடுகின்றன.
அரசுகள் எவ்வளவோ எடுத்து கூறியும், பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதித்தும், சொற்ப லாபத்துக்காக, எளிதான செயலுக்காக தொடர்ந்து பிளாஸ்டிக்கை பயன்படுத்துகின்றனர்.

பொதுமக்கள் உடனடியாக விழிப்புணர்வு அடைந்து, தங்கள் நிலையை மாற்றிக்கொள்ளாவிடில் மிகப்பெரும் ஆபத்தை பிளாஸ்டிக் மூலம் நாம் சந்திக்க வேண்டிய நிலை விரைவில் ஏற்படும். அதுபோல செயற்கை உரங்கள், பூச்சி கொல்லி மருந்துகளால் மண் மற்றும் நீர் மாசடைந்து வருகின்றன. ேமலும் இவை உணவு பொருட்களில் கலந்து, இவற்றை பயன்படுத்தும் மனிதன் உட்பட உயிரினங்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் இன்று பல்வேறு உயிரினங்களை பார்க்க முடியவில்லை. உழவனுக்கு நன்மை செய்யும் பூச்சிகளும் காணாமல் போய்விட்டன.

அந்நாட்களில் வயல்களில் நடந்தால் நண்டுகள், நத்தைகள், தவளைகள், தலைப்பிரட்டைகள், தட்டான்கள், சிறுசிறு குருவிகள் என பல உயிரினங்கள் சகஜமாக நடமாடுவதை பார்க்கலாம். ஆனால் இன்று மண் மற்றும் நீர்நிலைகள் மாசடைந்து பல உயிர்கள் அழிந்து வருகின்றன. இவற்றை எங்கும் காணவில்லை. இன்று உழவனின் நண்பனான மண் புழுக்களைக்கூட மண்ணில் அரிதாகத்தான் பார்க்க முடிகிறது. இதுபோல மணல், கல், மரங்கள் என குமரி மாவட்ட இயற்கை வளம் சுரண்டப்பட்டு கடத்தப்பட்டு வருகின்றன. இதனால் வருங்காலங்களில் நாம் பேரிழப்புகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். காடுகள் அழிப்பால் இன்று மழையின்றி வறட்சியால், வெப்பத்தின் தாக்கத்தால் தவிக்கிறோம்.

அதுபோல விளைநிலங்கள் இன்று வீட்டு மனைகளாகி வருகின்றன. பல்வேறு நீராதாரங்கள் அழிக்கப்பட்டு விட்டன. இதுபோல பல்வேறு விஷயங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். இயற்கையில் ஒவ்வொரு செயலுக்கும், நிலைக்கும் ஒரு சங்கிலி பிணைப்பு உள்ளது. இதில் ஒன்று பாதிக்கப்பட்டாலும் மற்றவை அழிந்து விடும். எனவே இயற்கையை நாம் அழித்தால் இயற்கை நம்மை அழித்து விடும். இதற்கு நாம் பல்வேறு உதாரணங்களை கண்முன் கண்டுள்ளோம். எனவே, இயற்கையை பாதுகாத்து சுற்றுச்சூழல் பராமரித்து உயிர்களை வாழவிடுவோம். வருங்கால தலைமுறைக்கு இந்த பூமியை நல்லமுறையில் விட்டுச்செல்வோம். சுயநலம் தவிர்த்து பொதுநலம் பேணுவோம் என்பதே இயற்கை ஆர்வலர்களின் ஒருங்கிணைந்த குரலாக ஒலிக்கிறது. சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தில் இதற்காக சபதமேற்போம்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 16-06-2019

  16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-06-2019

  15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • china

  சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

 • oaman_thee11

  மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

 • AftermathProtestHK

  ஹாங்காங்கில் அரங்கேறும் தொடர் போராட்டங்களால் அலங்கோலமாகும் நகரும்..: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்