SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலக புகையிலை ஒழிப்பு தினம் 2018

2018-05-31@ 14:26:17

* நான் விட்டாலும் அது என்னை விடவில்லை...

- எழுத்துச்சித்தர் பாலகுமாரன்

தன் எழுத்துக்களால் வாசகர்களை கட்டி வைத்திருந்த எழுத்தாளர் பாலகுமாரன் சில நாட்களுக்கு முன்பு காலமானார். புகைப்பழக்கம்தான் பலருக்கும் பிடித்த எழுத்தாளரை நம்மிடம் இருந்து பறித்துள்ளது. பல ஆண்டுகளாக ‘சிகரெட்டுக்கு கட்டுண்டு இருந்தால் தான் பட்ட வலி, வேதனைகளை’ வார்த்தைகளில் வடித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு  தினகரனில் வெளியான அவரது கட்டுரை மீண்டும் உங்களை எச்சரிக்கைப்படுத்த... இதை படிப்பவர்களுக்கு சிகரெட் பிடிக்கும் எண்ணம் வராது. பழக்கம் இருந்தால் விட்டு விடுவது உறுதி.

இந்த சிகரெட்தான் என்னை குனிய வைத்து சுருள வைத்து இடையறாது இரும வைத்து மூச்சு திணற வைத்து மரணத் தறுவாயில் இருக்கும் பிராணியை போல மாற்றும் என்று அப்போது தெரியவில்லை. சிகரெட்டில் நிகோடின் என்ற நஞ்சு இருக்கிறது.. அந்த நஞ்சு நரம்புகளில் பாய்ந்து நரம்பு மண்டலத்தை சேதப்படுத்தும் என்று பத்திரிகை வாயிலாக தெரிந்தபோது, எனக்கெல்லாம் அது நடக்காது என்று முட்டாள்தனமாக நினைத்துக் கொண்டேன்.

நாலைந்து சிகரெட்டில் நரம்பு மண்டலம் என்ன ஆகிவிடும் என்ற அலட்சியமும் இருந்தது. நாலைந்து சிகரெட் மெல்ல மெல்ல பெருகி ஒரு பாக்கெட் என்றாகி பத்து இருபது என்றாகி ஒரு நாளைக்கு நூற்றியிருபது சிகரெட்டுகளாக மாறிவிட்டால் வேறென்ன நடக்கும்? நிகோடின் என்பது வெறும் புகையல்ல. அதுவொரு போதையான ரசாயனம். அது என்ன செய்யும்? கன்னக் கதுப்புகளில், உதடுகளில், ஈறுகளில் அந்த ரசாயனம் தாக்கும்போது ஒரு விறுவிறுப்பு ஏற்படுகிறது.

ஒரு குணமாற்றம் ஏற்படுகிறது. சிகரெட் புகையை இழுத்து நுரையீரலில் தேக்கும்போது அங்கிருந்து உடம்பிலுள்ள எல்லா ரத்த அணுக்களுக்கும் பரவி எல்லா இடங்களிலும் ஒரு அமைதி படர்கிறது. கண் கிறக்கமான ஒரு நிலைமை ஏற்படுகிறது. இது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உதவியும் செய்தது. என்ன உதவி? சுற்றுப்புறம் எவ்வளவு மோசமாக இருந்தாலும் எத்தனை இரைச்சல் இருந்தாலும் உள்ளடங்கி ஆழ்மனதில் அமிழ்ந்து சிந்திக்க சிகரெட் உதவி செய்வதாக நினைத்துக் கொண்டேன்.

அப்படி சிந்திப்ப தால்தான் கதை எழுதுகிறேன் என்று நினைத்துக் கொண்டேன். காலை, மாலை, இரவு என்று எல்லா நேரங்களிலும் சிகரெட் வேண்டியிருந்தது. சிகரெட் பிடிப்பதற்காகவே பலமணி நேரம் கூட்டங்களில் உட்காருவதை தவிர்த்தேன். அரை மணிக்குமேல் யாரோடும் அமர்ந்து அமைதியாக பேச முடியவில்லை. வெகு விரைவாக சாப்பிட்டு விடுவேன். குழம்பு சாதம் நாலு கவளம், தயிர் சாதம் நாலு கவளம் மடமடவென்று சாப்பிட்டுவிட்டு வயிறு நிறைந்ததும் வெளியே போய் ஒரு சிகரெட் பற்ற வைத்து புகை இழுத்தால்தான் சாப்பிட்டதன் நிறைவு பூர்த்தியாகும்.

இது மிகமிக கேவலமான நிலைமை. ஆரோக்ய குறைவான சிந்தனை. உடம்பிலுள்ள நரம்பு மண்டலத்தை அறுத்தெறிகின்ற மிகப்பெரிய காரியம்.
பத்தொன்பது வயதில் தொடங்கிய சிகரெட் பழக்கம் மெல்ல மெல்ல வளர்ந்து நாற்பத்தைந்தாவது வயதில் உச்சகட்டத்தை அடைந்தது. இழுத்து இழுத்து புகையை உள்வாங்கியதால் புகை நுரையீரலுக்கு மட்டுமல்லாது இரைப்பைக்கும் போயிற்று. இரைப்பையில் புகை தங்கி மேல் வயிறு பெரிதானது. மேல் வயிறு பெரிதாக இருந்ததால் நடக்கும்போது மூச்சு வாங்கியது. மாடிப்படி ஏறும்போது சிரமமாக இருந்தது.

எது பற்றியும் கவலைப்படாமல் இடையறாமல் சிகரெட் பிடித்தபடி இருந்தேன். என் வீட்டிலுள்ளவர்கள் ‘இவனை மாற்ற முடியாது’ என்று கைகழுவி என் போக்கிலேயே விட்டார்கள். நிச்சயம் ஒருநாள் நீங்களாக விட்டுவிடுவீர்கள் என்றும் சொன்னார்கள். அது நேர்ந்தது. திருமணத்திற்காக ஒரு மகள் இருக்கிறாள். வளர்ந்து படிக்க வேண்டிய ஒரு மகன் இருக்கிறான். இருந்தும் கவலையின்றி இத்தனை செலவு செய்கிறோமே, உடம்பு பாழாகிறதே என்று கவலைப்பட்டு என் குருநாதரை மனமுருக வேண்டி இந்த சிகரெட்தான் கடைசி என்று சொல்லி ஒரு பாக்கெட் சிகரெட் முழுவதும் வீட்டு வாசலில் நின்றே அமைதியாக பிடித்து முடித்த பிறகு அந்த பெட்டியை கசக்கி குப்பைத் தொட்டியில் எறிந்தேன்.

மறுநாளிலிருந்து சிகரெட் பிடிக்கவில்லை. முதல் ஒரு மணி நேரம் தவிப்பாக இருந்தது. பல் கடித்து பொறுத்துக் கொண்டேன். இன்னும் அரை மணி… இன்னும் அரைமணி… என்று தள்ளிப் போட்டேன். அரை நாள் சிகரெட் பிடிக்காமல் இருந்தது ஆரோக்யமாக தெரிந்தது. அன்று முழுவதும் பிடிக்காமல் இருந்தால் என்ன என்று நினைத்தேன். இருந்தேன். நெஞ்சு விசாலமானது. அதற்கு பிறகு இரண்டு நாட்கள், மூன்று நாட்கள் சிகரெட் பிடிக்கவில்லை. நான்காவது நாள் சிகரெட் தேவைப்படவில்லை.

நடுவே ஒரு சிகரெட் பிடித்திருந்தாலும் கால் இடறி மறுபடியும் புகைக்குழியில் விழுந்திருப்பேன். முற்றிலும் மாறுபட்ட மனிதனாக... நன்கு சுவாசிக்கிறவனாக... மற்றவர்கள் சிகரெட் பிடித்தால் மூக்கை பொத்திக் கொள்பவனாக மாறினேன். ஆனால் என்ன, செய்த பாவங்கள் விடுமா? சிகரெட்டை விட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இதயத்தை பலமாக தாக்கியது. அடைப்புகள் ஏற்பட்டன. இரண்டாயிரத்தில் பைபாஸ் ஆபரேஷன் செய்து கொண்டேன். அப்போதும் சிகரெட் பிடிப்பவனாக இருந்தால் மரணம் அன்றே குறிக்கப்பட்டிருக்கும். சிகரெட்டை நிறுத்தி ஆரோக்யத்தை அதிகப்படுத்தியதால் அந்த ஆபரேஷனை சமாளிக்க முடிந்தது.

பிறகு பத்து வருடங்கள் எந்தவித இம்சையும் இல்லாமல் அழகாக வாழ்க்கை ஓடியது. இரண்டாயிரத்து பதினொன்றில் நீரிழிவு காரணமாக ரத்தக்கொதிப்பின் காரணமாக மறுபடியும் அடைப்பு ஏற்பட, இரண்டாம் முறை பைபாஸ் செய்து கொண்டேன். சுவாச பயிற்சி செய்திருந்ததால், மூச்சு பற்றிய ஞானம் இருந்ததால், தினந்தோறும் காலையும் மாலையும் வேகமாக நடந்ததால், மெல்லிய உடற்பயிற்சிகள் செய்ததால் இரண்டாவது பைபாஸையும் தாண்டிவர முடிந்தது.
ஆனால், இரண்டாயிரத்து பன்னிரெண்டில் அடுத்த சோதனை.

பத்தொன்பது வயதில் பிடித்த சிகரெட்டுகள் அறுபத்தாறு வயதில் தன் விஷத்தன்மையை காட்டியது. தன் வக்கிரத்தை நிரூபித்தது. நுரையீரலின் அடிப்பக்கம் முழுவதும் நிகோடினால் ஏற்பட்ட சளி அடைப்புகள். நுரையீரல் முழு திறனோடு வேலை செய்யவில்லை. அதற்கான திறனை மெல்ல மெல்ல இழந்தது. அதோடு சளி அடைப்பும் சேர்ந்து பழிவாங்கியது. மூச்சுத் திணறல் ஏற்பட்டது. ஒருபிடி சாதத்திற்கு அவஸ்தை படும் நிலைமை. முகம் முழுவதும் மூடி ஆக்சிஜனை வேகமாக செலுத்தினால்தான் உயிரோடு இருப்பேன் என்கிற நிலைமை.

என்.ஐ.வி என்கிற அந்த விஷயத்தோடுதான் இரவு தூங்க முடியும் என்ற நிலைமை. பிராங்கோஸ்கோபி என்று மூச்சுக்குழலுக்குள் கருவியை விட்டு சோதனை செய்து அங்கே அடி நுரையீரலில் அடர்த்தியாக அசைக்க முடியாதபடிக்கு கெட்டியாக சளி இருப்பதை தெரிந்துகொண்டார்கள். இதை எப்படி சரி செய்வது?
வலியை பொறுத்துக் கொள்ளலாம். வேறு ஏதேனும் பத்தியமாக இருந்தால் அவ்விதமே நடந்து கொள்ளலாம். மூச்சு இழுத்து பிராணவாயு உள்ளே போய் வெளியே வருவதே கடினமானால் எப்படி சமாளிப்பது? தினசரி மரண போராட்டமாக மாறிவிட்டது.

மூச்சு வேகமாக இழுத்து இழுத்து இன்னும் சில நிமிடங்களில் பாலகுமாரன் செத்து விடுவான் என்ற எண்ணத்தை மற்றவருக்கு ஏற்படுத்தியது. வீடு தவித்தது. வீட்டிற்குள் மூன்று நான்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் வைக்கும்படி நேரிட்டது. வேகமாக காற்றை செலுத்தக்கூடிய கருவி தனியாக இருந்தது. ஆஸ்பத்திரியிலிருந்து வீடு வந்தவுடன் வீடு ஆஸ்பத்திரியாக மாறியது. எப்பொழுதும் மூக்கில் ஆக்சிஜன் இருக்கும்படி ஒரு அவஸ்தை. ஸ்கூட்டர் எடுத்துக்கொண்டு மயிலாப்பூர் முழுவதும் சுற்றித் திரிந்தவனுக்கு சிறைத் தண்டனை போல வீட்டில் அதே அறையில் இருக்கும்படி நேரிட்டது.

மிகப்பெரிய வலியில்லை. ஜுரம் இல்லை. ஆனால், ஆக்சிஜன் குழாயை எடுத்துவிட்டால் மூச்சுத்திணற ஆரம்பிக்கும். அது இல்லாமல் நடக்க முடியாது, பேச முடியாது, உண்ண முடியாது, எதுவும் செய்ய முடியாது. காலில் சங்கிலி கட்டி கையில் இரும்பு குண்டை கொடுத்ததுபோன்ற மிகப்பெரிய தண்டனை. வேறு எந்த வழியும் இல்லாமல் அமைதியாக உட்கார்ந்து கொண்டேன். ஒருநாளைக்கு நூற்றியிருபது சிகரெட் பிடிக்க வேண்டும் என்கிற நிலையில் இருந்ததை நினைத்து சிரித்துக்கொண்டேன். அப்படி புகைத்தால்தான் கதை எழுத வரும் என்று முட்டாள்தனமாக நம்பியதை நொந்து கொண்டேன்.

மரணம் எல்லோருக்கும் வரும். எப்பொழுது வேண்டுமானாலும் வரும். எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரும். ஆனால், மூச்சு திணறி இதோ… இதோ… என்று பயம் காட்டுகின்ற ஒரு நிலைமை யாருக்கும் வரக்கூடாது. நெஞ்சு வலித்தது. ஐந்து நிமிடம் துடித்தார். உயிர் நீங்கியது என்பது பரவாயில்லை. மூச்சு விட முடியாமல் உள்ளுக்குள் போன மூச்சை வெளியே செலுத்த முடியாமல், வெளியே இருக்கின்ற பிராண வாயுவை உள்ளே இழுக்க முடியாமல் திணறி கதறுகின்ற வேதனை யாருக்கும் வரக்கூடாது. சிகரெட் பிடிக்கலாம் என்கிற ஆசையுள்ளவர்கள் தயவு செய்து அந்த எண்ணத்தை அழித்து விடுங்கள்.

சிகரெட் பிடிப்பவர்கள் உடனடியாக அந்த பழக்கத்தை கைவிடுங்கள். சிகரெட் உங்களை இன்றல்ல… பிற்பாடு ஒருநாள் மிக நிதானமாக கொல்லுகின்ற ஒரு விஷயம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். இந்த இருமல், இந்த முதுகு குனியல், இந்த தளர்வு, இந்த வேதனையெல்லாம் சிகரெட் பிடிப்பதால் விரைவாக ஒரு மனிதனுக்கு வரும். நல்லபடியாக சுவாசம் செய்து கொண்டிருந்தால் எழுபத்தைந்து வயது வரை ஆரோக்யமாக நிச்சயம் இருக்கலாம்.

அறுபத்தாறு வயதில் தள்ளாடுகின்ற நிலைமை - எழுத முடியாத நிலைமை - பேச முடியாத நிலைமை - ஒரு மனிதனுக்கு வருகிறதென்றால் அது வேதனைக்குரியது. அது தவிர எந்நேரமும் நம்மைச் சுற்றி தாங்கும்படியாக நம் உறவினர்களுக்கு நாம் சுமையாக இருக்கிறோம் என்பது இன்னும் இம்சையான விஷயம். வீட்டிலுள்ள முக்கியமான ஒரு நபர் நோய்வாய்ப்பட்டால் அந்த வீடே நோய்வாய்ப்படும்.

எனவே எது விஷமோ, எது மிக கொடூரமாக நம்மை தாக்குமோ அதிலிருந்து நாம் விலகி நிற்க வேண்டும். புகை பிடித்தல் உடல்நலத்திற்கு தீங்கானது அல்ல, உங்கள் குடும்பத்திற்கு தீங்கானது. உங்கள் வாழ்க்கையை சிதறடிக்கப் போவது. உங்கள் வளர்ச்சியை அறுத்தெறியப் போவது. உங்கள் ஞானத்தை பொசுக்கப் போவது. எனவே, சிகரெட்டை மனதாலும் நினையாமல் நன்கு மூச்சு இழுத்து வெளியே விடுகின்ற பிராணாயாமம் கற்றுக் கொள்ளுங்கள். சிகரெட் ஆசையே வராது. நான் விட்ட பிறகும்.. அது விடவில்லையே…

* மாதவராவ் டைரி குறிப்புகள்

- இ.மதன்குமார்

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களான மாவா, ஜர்தா, குட்கா, ஹான்ஸ், கஞ்சா, போதை பாக்குகள் தமிழகத்தில்  தடையின்றி விற்கப்படுகின்றன. போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் துணையுடன் விற்பனை செய்வதாக அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்  குற்றம்சாட்டின. அதற்கு வலுச்சேர்ப்பது போல சிக்கினார் மாதவராவ். தமிழகம் முழுவதும் குட்கா மற்றும் போதை பொருட்கள் தயாரித்து விநியோகம் செய்து வந்த இவரது  செங்குன்றம் தொழிற்சாலை, குடோன்களில் கடந்த 2016ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

அந்த சோதனையில் கட்டுக்கட்டாக பல லட்சம் ரூபாய் ரொக்கம்,  போதை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சோதனையில் மாதவ ராவின் ரகசிய டைரி ஒன்றும் சிக்கியது. அந்த டைரியில் தமிழக அமைச்சர்கள் முதல் காவல் துறை உயர் அதிகாரிகள், மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் வரை யார் யாருக்கு மாதா மாதம் எவ்வளவு பணம் லஞ்சமாக வழங்கப்பட்டது என்ற விவரங்கள் இருந்தன. மாதவராவ் டைரியில் இருந்த அதிகாரிகள் குறித்து  வருமான வரித்துறை அதிகாரிகள் தமிழக தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதினர்.

அந்த கடிதத்தின் படி உள்துறை செயலாளர், ‘சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும்’ என்றார். அதைதொடர்ந்து தமிழகத்தில் குட்கா விவகாரம் பூதாகரமாக வெடித்தது. குட்கா விவகாரத்தில் அன்றைய சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், இன்றும் காவல்துறை தலைவராக தொடரும் ராஜேந்திரன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட பல அதிகாரிகள் மீது புகார்கள் எழுந்தன. தமிழக தலைமைச் செயலாளருக்கு அனுப்பிய கடிதம் அடுத்த சில நாட்களில்  திடீரென மாயமானது.

புகாரில் உண்மை இருப்பதை உணர்ந்த அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடத்தின. திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணை கோரி சென்னை நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். குட்கா வழக்கை  சிபிசிஐடி விசாரிக்கும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால் தமிழக டிஜிபியாக உள்ள டி.கே.ராஜேந்திரன் மீதும் குட்கா வியாபாரியிடம் லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு உள்ளது.  அதனால் சிபிசிஐடி விசாரணை செய்ய பலரும் எதிர்த்தனர்.

அதனை சமாளிக்க சென்னை மாநகர காவல் துறை சார்பில் 2017ல் அவ்வப்போது  பெட்டிக்கடைகள், சந்தேகத்திற்குரிய இடங்களில் தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் கைதானவர்கள் அனைவரும் பெட்டிக் கடைக்காரர்கள், சிறு வியாபாரிகள் தான். குட்கா தயாரிக்கும் உரிமையாளர்கள், விற்பனைக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் யாரும் கைதாகவில்லை.  குட்கா விவகாரம் எழும் போதெல்லாம் போலீசார் தமிழகம் முழுவதும் இப்படி அதிரடியாக சோதனை செய்வது வாடிக்கை.

இந்த சோதனைகளால் குட்கா உள்ளிட்ட போதை பொருள்கள் விற்பனையில் எந்த பாதிப்பும் இல்லை.  முன்பு வெளிப்படையாக விற்றனர். இப்போது மறைத்து விற்கின்றனர்.  அதுமட்டுமல்ல ரூ.15க்கு விற்ற குட்கா, ஹான்ஸ் இப்போது ரூ.80க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையில் குட்கா வழக்கை  விசாரித்த உயர்நீதிமன்றம், ‘சிபிசிஐடியிடம் இருந்து வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

அதை எதிர்த்து சுகாதார ஆய்வாளர் சிவகுமார் உச்சநீதிமன்றத்தில் முறையிடு செய்தார். ஆனால் உச்சநீதி மன்றம் சில நாட்களுக்கு முன்பு ‘குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை’ என்று தீர்ப்பளித்தது. அதனால் சிபிஐயிடம் சிக்கிவிடுவோமோ என்ற புகைச்சலில் இருக்கின்றனர் விஐபிகள். குற்றத்தை செய்பவர்களை விட குற்றத்துக்கு துணையாக நிற்கும் அதிகாரிகள் இருக்கும் வரை தமிழகத்தில் புகையிலை பொருள்களை ஒழிப்பது மிகவும் கடினம்.

* தமிழகத்தில் தடையின்றி கிடைக்கும் குட்கா

- ச.விஜயகுமார்

புகையிலை பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள், தமிழகத்தில் புகையிலை பொருள்கள், அவை சந்தையில் தடையின்றி கிடைப்பது குறித்து பல்வேறு ஆய்வுகள் மூலம் கிடைத்த விவரங்களை பட்டியலிடுகிறார் புற்றுநோய் உளவியல் துறை மற்றும் புகையிலை தடுப்பு மையத்தின் உதவிப் பேராசிரியர் டாக்டர் சுரேந்திரன்(அடையாறு புற்றுநோய் மருத்துவமனை):

* புகையிலை பயன்பாடு என்பது உலகளவில் அதிக இளம் வயது மரணங்கள் ஏற்பட மிக முக்கியமான காரணியாக உள்ளது.
* புகைக்கும் புகையிலையில் 4000 விதமான நச்சுப்பொருள்களும், மெல்லும் வகை புகையிலையில் 3000 விதமான நச்சுப்பொருள்களும் உள்ளன. இவற்றில் 200 வகையான வேதிப்பொருள்கள் நேரிடையாகவே புற்றுநோயை உண்டாக்குபவை.

* நமது நாட்டில் புகையிலைப் பழக்கம் பொதுமக்களிடையே மிக அதிகளவில் காணப்படுகிறது. உலக புகையிலை ஆய்வு (GATS-1)  2009-10 ன் படி இந்திய  மக்கள் தொகையில் 35 சதவீதம் பேர் புகையிலையை பயன்படுத்துவதாக கூறுகிறது.

* உலக புகையிலை ஆய்வு (GATS-2) 2015-16 ன்படி 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களில் 28.6 சதவீதம் பேர் எல்லா வகை புகையிலை பொருள்களையும் பயன்படுத்துகின்றனர். இதில், கிராமப் பகுதிகளில் 19.9 சதவீதம் பேரும், நகரத்தில் 6.8 சதவீதத்தினரும்  புகையிலையை பயன்படுத்துகின்றனர்.

* புகையிலை பழக்கம் உள்ள ஆண்களில்,  கைனியை 8.5 கோடி பேரும், பீடியை 6.7 கோடி பேரும், குட்காவை 5.1 கோடி பேரும் பயன்படுத்துகின்றனர். பெண்களில் வெற்றிலையுடன் கூடிய  புகையிலையை 2 கோடி பேரும், வாய்வழியாக பயன்படுத்தக்கூடிய புகையிலையை 2 கோடி பேரும், கைனி எனப்படும் புகையிலையை 1.9 கோடி பேரும் பயன்படுத்துகின்றனர்.

* ஒருவர் புகைப்பதால் வரக்கூடிய புகையை புகையிலை பழக்கமற்றவர்கள் சுவாசிப்பதால் ஏற்படும் உடல்நிலை பாதிப்பு குறித்த விழிப்புணர்வு 83லிருந்து 92சதவீதமாக உயர்ந்துள்ளது. பொது இடங்களான அரசு கட்டிடங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் உணவகங்களில் சிகரெட்/பீடி பிடிக்கும் போக்கு 29லிருந்து 23 சதவீதமாக குறைந்துள்ளது.

* வீட்டில் இருக்கும் நபர்களிடம் மற்றவர் வெளியிடும் புகையின் பாதிப்பு   (சாத்வீக புகை) 52 சதவீதத்திலிருந்து 39சதவீதமாக குறைந்துள்ளது. அதேநேரத்தில்  பணியிடங்களில் வேலை செய்பவர்களில் 10ல் 3 நபர்கள் மற்றவர்கள் சிகரெட் குடிப்பதினால் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர்.

* தமிழ்நாடு  புகையிலை ஆய்வில் தமிழகத்தில் மட்டும் 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் 28,64,400 பேர் புகையிலையை ஏதேனும் ஒரு வகையில் பயன்படுத்துகின்றனர். இங்கு புகையிலை பயன்பாடு 5.2 சதவீதமாக உள்ளது. ஆண்கள் 4.3சதவீதத்தினரும். பெண்கள் 0.9 சதவீதத்தினரும் புகையிலை பொருள்களை பயன்படுத்துகின்றனர்.

* புகைக்கும் வகை புகையிலை பயன்பாடு 3.3 சதவீதமாகவும், அதில் சிகரெட் பயன்பாடு 1.7 சதவீதமாகவும், பீடி பயன்பாடு 1.4 சதவீதமாகவும், மெல்லும் மற்றும் நுகரும் வகை புகையிலை 2.1 சதவீதமாகவும் உள்ளது. இதில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாநிலத்தில் 19.9சதவீதமாகவும், குறைந்தபட்சமாக தஞ்சாவூர் மாநிலத்தில் 1. 2சதவீதமாகவும் புகையிலைப் பயன்பாடு உள்ளது. புகையிலை பயன்பாடானது கிராமங்களில் 2.6 சதவீதமாகவும் நகரங்களில் 2.5 சதவீதமாகவும் பெரிய அளவில் வித்தியாசம் இன்றி காணப்படுகின்றன.

* புகையிலை பழக்கம் உள்ளவர்களில் 47 சதவீதத்தினர் தூங்கி எழுந்தவுடன் அரை மணி நேரத்திலேயே புகையிலையைப் பயன்படுத்துகின்றனர்.
* புகைப்பவர்களில் 54சதவீதத்தினர் தங்களின் அதை நினைத்து கவலைப்படுகின்றனர். இதில் 17.2சதவீதம் பேர் அப்பழக்கத்தை நிறுத்துவதற்கு எண்ணுகின்றனர். மேலும் 38.9சதவீதத்தினர் இப்பழக்கத்தை கைவிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

* குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தாலும் 90.3சதவீதம் பேர் தமிழ்நாட்டில் மெல்லும் வகை புகையிலை பொருள்கள் தடையின்றி தாராளமாக கிடைப்பதாக சொல்கின்றனர். ஆனால் மெல்லும் வகை புகையிலை தடைக்கு பின்பு மெல்லும் வகை புகையிலை பொருள்கள் 2 மடங்கு விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

* புகைக்க 96.6 சதவீத வீடுகளில் அனுமதி தருவதி்ல்லை. இருப்பினும் 15 சதவீத வீடுகளில் மக்கள் தினமும் புகைக்கின்றனர். ஆய்வில் பங்கேற்றவர்களில் 15.7 சதவீதத்தினர் தங்கள் பணியிடங்களில் புகைக்க தடை ஏதுமில்லை என்று கூறியுள்ளனர். மேலும் 5.7 சதவீத அலுவலகங்களில், பணியிடங்களில் புகையிலை பயன்பாடு அனைத்து இடங்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

* புகையிலை பொருட்களை பயன்படுத்துவது குறித்த ஆய்வில்  கடுமையான நோய்கள் ஏற்படும் என 95 சதவீதத்தினரும், புற்றுநோய் ஏற்படும் என 80 சதவீதத்தினரும், மலட்டுத் தன்மை ஏற்படும் என்று 4.6 சதவீதத்தினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.


* புகை புன்னகைக்கு பகை

- ஒவியப்ரியா

எந்த வகையான புகையிலை பொருளை பயன்படுத்தினாலும் அவை வாய் வழியாகத்தான் பயன்படுத்துகிறோம். அதனால் புகையிலையில் இருக்கும் நச்சு பொருள்களால் முதலில் பாதிப்பதும், அதிகமாக பாதிப்பதும் வாய், பற்கள்தான். வாய்ப்புற்று நோய்தான் உலக அளவில் ஆண்களுக்கு ஏற்படும் பொதுவான நோயாக இருக்கிறது. இது குறித்து பல் மருத்துவர் டாக்டர்.அருண்குமார் கூறியதாவது: புகையிலையை புகைத்தல், மெல்லுதல், வாயில் அடக்கி வைத்திருப்பது போன்றவை வாயையும், பற்களையும் பாழாக்கும்.

புகையிலை பொருள்களை பயன்படுத்த ஆரம்பித்த சில நாட்களிலேயே பற்களில்தான் அந்த பாதிப்பு முதலில் தெரியும். பளிச் பற்கள் எல்லாம் நிகோடின் நச்சு படிந்து நிறம் மாறும். புகையிலை பயன்படுத்துவோரின் பற்கள் பழுப்பு மற்றும் மஞ்சள் நிறமாக மாறி பின்னர் கருப்பு நிறமாக மாறிவிடும். துர்நாற்றம் மற்றும் பல்வலி, போன்றவை புகையிலை பழக்கம் உள்ளவர்களுக்கு பொதுவாக இருக்கும். புகைப் பழக்கம் உள்ளவர்களுக்கு நாக்கின் சுவையில் மாற்றம் ஏற்படும். வாசனை அறியும் திறனும் குறையும்.

அதேபோல் பல் ஈறுகளில் அழுகல் வருவது, பல் ஈறுகள் மற்றும் அதை சார்ந்த எலும்பு பாதிப்பு, உள்ளிட்ட பல் ஈறு நோய்கள் புகைபிடிப்பதால் வருகிறது. இந்த நோய்களை கட்டுப்படுத்துவது கடினம். வாயில் உள்ள சளிச்சவ்வுகளில் பயங்கர புண்களை உண்டாக்கி ஆபத்தை ஏற்படுத்துவது லுக்ேகாபிளாக்கியா என்னும் நாக்கில் வரும் வெண்படை போன்ற புற்று. புகைப் பழக்கம் உள்ளவர்களுக்கு மேல் அண்ணத்தில் நிக்கோடின் படிந்து மேல் அண்ணம் வெண்மை நிறமாவது, உதடு மற்றும் வாய்ப்புறத் தோலின் நிறம் கருமை அடைவது, வாயில் பூஞ்சை படர்தல்போன்றவை அதிக அளவில் உருவாகும்.

புகைபிடிப்பவர்களுக்கு வாயில் வேறு காரணங்களுக்காக அறுவை சிகிச்சை செய்வதால் ஏற்படும் புண்களை ஆற்றுவது கடினம். ரத்தக் கசிவையும் நிறுத்துவதும் கடினம். புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு பற்கள் விழுந்துவிட்டால், அவற்றை மீண்டும் பல்லை பொறுத்தும் சிகிச்சை அளிப்பது சிரமம். நல்வாழ்வும், பளிச் புன்னகையும் வேண்டுமென்றால் புகையிலையை பகையாக நினைக்க வேண்டும்.

* புகையில் பொசுங்கும் பீடித் தொழிலாளிகள்

- முனைவர். இ.விதுபாலா

இன்று வரையில், புகையிலைக் கட்டுப்பாட்டுக்கு அரசியல்வாதிகளோ, அரசாங்கமோ பெரிய அளவில் ஆர்வம் காட்ட வில்லை. அதற்கு பல காரணங்கள் இருந்தாலும், முதல் மற்றும் முக்கிய காரணமாக சொல்லப்படுவது, புகையிலை கட்டுப்பாடு கொண்டு வந்தால், பீடி தொழிலாளர்கள் அவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து விடுவார்கள் என்பதுதான். உலக சுகாதார நிறுவனத்தின் 2009-10ம் ஆண்டு ஆய்வு அறிக்கையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் முன்னுரையில் கூட இதைப் பற்றி தான் குறிப்பிட்டுள்ளார்.

புகையிலை நிறுவனங்களும் பீடித்தொழிலாளர்களை முன்னிறுத்தி அதன் பின் ஒளிந்து கொள்கின்றன. எந்த ஒரு புகையிலை கட்டுப்பாடு விதி முறைகள் கொண்டு வந்தாலும் பீடி தொழிலாளர்களைத் தூண்டிவிட்டு அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடும் என்று அவர்களை வைத்து போராட்டம் செய்வதையே இந்த நிறுவனங்கள் வாடிக்கையாக கொண்டுள்ளன. அரசியல்வாதிகளும், அரசாங்கமும் ஒரு முழுமையான புகையிலை கட்டுப்பாட்டை அமல்படுத்துவதற்கு பதிலாக புகையிலை நிறுவனங்களுடன் கை கோர்த்து கொண்டு பெயரளவிலேயே திட்டங்களை செயல்படுத்துகின்றன.

இந்திய புகையிலை நிறுவனத்தை 100 ஆண்டுகளாக இந்தியாவின் சிறந்த நிறுவனமாக நடத்துவதற்காக அதன் தலைவர் யோகேஷ்வருக்கு நாட்டின் உயரிய விருதான பத்ம விபூஷண் வழங்கி கவுரவித்தது.  இதன்மூலம்  நம்முடைய அரசுக்கு புற்றுநோய் மற்றும் புகையிலை ஒழிப்பின் மீதுள்ள ஈடுபாட்டை உணரலாம்.
தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பீடி தொழிலாளர்கள் இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் கணக்குப்படி சுமார் 3 லட்சம் இருப்பதாக கூறப்படுகிறது.

அவர்களுக்கு பீடித்தொழில் தான் வாழ்வாதாரம், அது இல்லையென்றால் அவர்களுக்கு வேறு வழியே இல்லை என வாதாடப்படுகிறது. உண்மையில், பீடித்தொழிலில் ஈடுபடுபவர்கள் மிகுந்த வறுமையிலும், வாழ்க்கைத் தரம் மிக மோசமான நிலையிலும் இருக்கின்றார்கள். பீடி பிடிப்பவர்களுக்கு மட்டுமல்ல, பீடிதொழிலில் ஈடுபடுபவர்களுக்கும் பல் வேறு விதமான நோய்கள் வருகிறது. பீடி தொழிலாளர்களுக்கு காச நோய் வருவதற்கான அபாயம் அதிகம்.

ஒரே இடத்தில் இருந்து பல மணி நேரம் அமர்ந்து சுற்றுவதாலும், புகையிலைத் தூள்களை தொடர்ந்து கையாள்வதாலும் உடல் அசதி, தோள்பட்டை, கழுத்து மற்றும் முதுகு வலியால் அவதிப்படுகின்றனர். எந்த பாதுகாப்பும் இல்லாமல் புகையிலையை கையாள்வதால், கண் எரிச்சல், ஆஸ்த்மா, தொண்டை மற்றும் நுரையீரல் எரிச்சல் ஏற்படுகிறது. ஒருவர் 1000 பீடி சுற்றினால் தான்  சுமார் 150 ரூபாய் கிடைக்கும். எல்லோராலும் ஒரு நாளைக்கு 1000 பீடி சுற்ற முடிவதில்லை. ஒரு குடும்பத்தில் 3 அல்லது 4 பேர் சேர்ந்தால் தான் 1000 பீடி சுற்ற முடியும்.

மேலும் தரம் இல்லை, எனக் கூறி நிறுவனங்கள் சுற்றிய பீடிகளை கழிப்பதும் உண்டு. இலை மற்றும் புகையிலை தூள் குறைவாக கொடுப்பதனால், சில நேரங்களில், இவர்களே விலை கொடுத்து வாங்கி சமாளிக்க வேண்டி உள்ளது. பெரும்பாலும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளே இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர். பீடி தொழிலால் நல்ல நிலையை எட்டிய குடும்பத்தை பார்க்க முடியாது. அவர்களை வறுமையில் வைத்திருக்கும் வரையில் தான் பீடி நிறுவனங்களுக்கும் குறைந்த கூலியில் ஆட்கள் கிடைப்பார்கள்.

அடிக்கடி அந்த தொழில் சார்ந்த நோய்களால் பாதிக்கப்படுவதால் பீடித்தொழிலாளர்களுக்கு அரசு தனி மருத்துவமனை தொடங்கியது. ஆனாலும், பெரும்பான்மையான பீடி தொழிலாளர்கள் அதற்கான எந்த அடையாள அட்டையும் இன்றி இந்த தொழிலில் ஈடுபட்டிருப்பதால், அந்த மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு தகுதியற்றவர்களாகிறார்கள். பல பீடித் தொழிலாளர்களுக்கு தாங்கள் எந்த நிறுவனத்திற்கு வேலை செய்கிறோம் என்றே தெரிவதில்லை. மஞ்சள் நூல், பச்சை நூல் கம்பெனி என்றே குறிப்பிடுகிறார்கள்.

அடையாறு புற்றுநோய் மருத்துவமனை திருநெல்வேலி மாவட்டத்தில் நடத்திய ஆய்வில் 96சதவீத பீடி தொழிலாளர்கள் வேறு வழியில்லாமல் இந்த தொழிலில் ஈடுபட்டிருப்பதாகவும், மாற்று தொழில்கள் இருந்தால் மாறுவதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும், மாற்று தொழிலுக்கு பல்வேறு காரணங்களால் மாறிப் போனவர்களை ஆய்வு செய்ததில், பொருளாதார ரீதியாகவும், ஆரோக்கியத்திலும், வாழ்க்கைத்தரத்திலும் பீடித் தொழிலிலிருந்து மாறிய பிறகு மேம்பட்டு இருப்பதாக தெரிவித்தனர்.

பீடித் தொழில் சமுதாயத்தில் ஒரு கவுரவமான தொழிலாக இல்லை என்பது பெரும்பான்மையான தொழிலாளர்களின் கருத்து. புகையிலையைக் கட்டுப்படுத்தும் விதமாக இந்தியா உலக சுகாதார நிறுவனத்தின் புகையிலை கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தில் 2005-ம் ஆண்டு கையொப்பமிட்டது. அதன்படி, புகையிலை பயன்பாட்டை குறைப்பது, புகையிலை கட்டுப்பாட்டு சட்டங்களை அமல்படுத்துவது, பீடி தொழிலாளர்களுக்கு மாற்றுதொழில் வழங்குவது போன்றவற்றை அரசாங்கம் செயல்படுத்த வேண்டும்.

ஆனாலும் பெயர் அளவிலேயே இவை செயல் படுத்தப்படுகின்றன. தமிழகத்தில் திருநெல்வேலி, வேலூர் மாவட்டங்களில்தான் பீடி தொழிலாளர்கள் அதிகளவில்  உள்ளனர். எவ்வளவு தொழிலாளர்கள் உள்ளனர் என ஒவ்வொருவரும் ஒரு கணக்கு சொன்னாலும் சரியான எண்ணிக்கை யாரிடமும் இல்லை என்பதே உண்மை. ஆனாலும் ஏழை பீடித் தொழிலாளிகளுக்கு மாற்று தொழில் ஏற்பாடு செய்து, மூன்று நேர உணவை உறுதி செய்யும் எண்ணிக்கைதான் அவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

தற்பொழுது தொழிலாளர் நலத்துறையின் கீழ் ஒரு கமிட்டி அமைத்து அதற்கான முயற்சிகளை ஆரம்பித்துள்ளனர். ஆனாலும், இதை துரிதப்படுத்த வேண்டியது அவசியம். தொண்டு நிறுவனங்களும் பீடித் தொழிலாளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன. இப்படி பல நிறுவனங்களும், அரசும் இணைந்து செயல்பட்டால் பீடி தொழிலாளர்களுக்கு ஒரு கவுரவமான தரமான வாழ்க்கைத்தரம் சாத்தியப்படும். இதை செய்யவில்லையெனில் புற்று நோய் கட்டுப்பாடு என்பது என்றைக்கும் சாத்தியமில்லை.

* உயிரை குடிக்கும் பொருள்களை விற்று மக்களை கொன்று விட்டு யாரிடம் பொருள்களை விற்பது

- த.வெள்ளையன் காட்டம்

கடந்த ஆண்டு கோடை காலத்தின் போது, குடிநீர் பஞ்சம் அதிகமாக இருந்த நிலையில் வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்ய எதிர்ப்புகள் எழுந்தன. அதேபோல் அந்த குளிர்பானங்களில் பூச்சிக்கொல்லிகள் இருப்பதால் எற்படும் பாதிப்புகளும் இந்த எதிர்ப்புக்கு காரணம். அதனால் தமிழகத்தின் முக்கிய வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் தங்கள் உறுப்பினர்களின் கடைகளில் வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்பனை செய்வதில்லை என்று முடிவெடுத்தனர்.

அதைத்தொடர்ந்து வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்பனை குறைந்தது. இதனால் அந்த இரண்டு குளிர்பான நிறுவனங்கள், தங்களுக்கு ஓராண்டில் ரூ.1,400 கோடி இழப்பு ஏற்பட்டதாக இந்திய குளிர்பான உற்பத்தியாளர் சங்கத்தில் முறையிட்டன. வெளிநாட்டு குளிர்பானங்களை விற்பனையை தவிர்த்தது போல் புகையிலை பொருள்களை விற்பனையும் தவிர்த்தால் மக்கள் பயன் பெறுவார்கள். இது குறித்து எப்போதும் சமூக நலனில் அக்கறைக் கொண்ட   வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையனின் கேட்டோம்.

அதற்கு அவர், ‘‘ புகையிலை பொருள்கள் பயன்படுத்துவதினால் ஏற்படும் பாதிப்புகளை நாங்கள் உணர்ந்து இருக்கிறோம. அதனால் எல்லா கடைகளிலும் சிகரெட் எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய விளம்பரத்தை ஒட்ட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம். சிலநேரங்களில் கடைகளுக்கு நேரில் சென்றும்   எடுத்துக்கூறி வருகிறோம். சிகரெட், புகையிலை பழக்கத்துக்கு அடிமையானவர்கள் தான், தொடர்ந்து அவற்றை வாங்குகிறார்கள். அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுப்பதன்மூலம், சிகரெட், புகையிலை விற்பனையை குறைக்கலாம்.

முடிந்தால் அவற்றின் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும். அப்போது அடுத்தடுத்த தலைமுறைக்கு இந்த பழக்கம் தொற்றாது. வியாபாரிகள் தங்களாகவே கடைகளில் சில கட்டுப்பாடுகளை பின்பற்றலாம். அவர்களுக்கும் சமூக பொறுப்பு இருக்க வேண்டும். குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிந்தும் அவற்றை கூடுதல் லாபம் கிடைக்கிறது என்பதால் சிலர் விற்பனை செய்கிறார்கள்.

அப்படி லாபம் மட்டுமே குறிகோளாய் வைத்து தடை செய்யப்பட்ட பொருட்களை வியாபாரம் செய்யக் கூடாது என்று  எங்கள் வியாபாரிகளிடம் வலியுறுத்தியுள்ளோம். இப்படி உயிரை குடிக்கும் பொருள்களை விற்று மக்களை அழித்துவிட்டு யாரிடம் பொருட்களை விற்பனை செய்வது? எனவே வியாபாரிகள் மட்டுமல்ல மக்கள், அரசு என நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால், சிகரெட், புகையிலை பொருட்கள் விற்பனையை தடுத்து நிறுத்தி, புகையிலையால் ஏற்படும் மரணங்களை தடுக்க முடியும்’ என்றார்.

- பார்த்தசாரதி

* புகையிலை வர்த்தகம் புரையோடிய பண்பாடும், வாழ்வும்

- கோவலூர் வி.புகழேந்தி

புகை கொல்லும் என்று ஒருப்பக்கம் பிரச்சாரம் தீவிரமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. புகையிலை பொருள்களின் மீது அதன் பாதிப்புகளை எச்சரிக்கை வாக்கியங்களாவும், படங்களாகவும் அச்சிட அரசும், நீதிமன்றமும் உறுதி காட்டுகின்றன. சினிமாவில், தொலைக்காட்சியில் புகை பிடிக்கும் காட்சிகளில் ‘புகை கொல்லும்’ வாக்கியம் காட்டப்படுகிறது. இந்தக் கட்டாயங்களுக்கு காரணம் புகையிலை பொருள்கள் உடலை உருக்கி, உயிரை உலுக்கிக் கொல்லும். இத்தனை கொடூரங்களுக்கு காரணமான புகையிலை பயிரிட மட்டுமல்ல, புகையிலை பொருள்களை உற்பத்தி செய்யவும் அரசு ஏனோ தடை விதிக்கவில்லை.

அதனால்தான் புகையிலை உற்பத்தியில் இந்தியா உலக அளவில் 2வது இடம் வகிக்கிறது. இந்தியாவில் 2014ம் ஆண்டு 7 லட்சத்து 20 ஆயிரத்து 725 டன் உற்பத்தி செய்யப்பட்டது. முதல் இடத்தில் உள்ள சீனா கடந்த 2014ம் ஆண்டு மட்டும் 29 லட்சத்து 95 ஆயிரத்து 400 டன் புகையிலையை உற்பத்தி செய்தது.
ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் சுமார் 6.7 மில்லியன் டன்கள் புகையிலை உற்பத்தி செய்யப்படுகிறது.

இதில் முக்கிய உற்பத்தி நாடுகளான சீனா 39.6 சதவீதம், இந்தியா 8.3 சதவீதம், பிரேசில் 7.0 சதவீதம், அமெரிக்கா 4.6 சதவீதம் புகையிலை புற்பத்தி செய்கின்றன. அறிவியல் மற்றும் ஆயுதங்களை வைத்துக் கொண்டு உலக நாடுகளை மிரட்டும் அமெரிக்கா புகையிலை உற்பத்தியில் மட்டும் பின்தங்கியுள்ளது. அமெரிக்கா முதலில் செவ்விந்தியர்களிடம் இருந்து புகையிலை செடிகளை பறித்துச் சென்று பயிரிட்டது.

அது மனிதனுக்கு சுறுசுறுப்பை உண்டாக்கும் பொருள் என்று கருதி, விற்பனையிலும் இறங்கியது. பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் வகுப்புகள் தொடங்வதற்கு முன் சிகரெட் புகைக்க கட்டாயப்படுத்திய கதைகள் அமெரிக்காவில் உண்டு. அந்த அளவுக்கு புகையிலையில் அதிக ஆர்வம் கொண்டு இருந்த அமெரிக்கா அதன் தீமைகள் குறித்து அறியத் தொடங்கியது அதன் உற்பத்தியை குறைத்துக் கொண்டது. ஆனால் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள் குறைக்கவில்லை.

அதனால் புகையிலையால்  ஏற்படும் உயிரிழப்புகளும் இங்கு ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கின்றன. ஆந்திர மாநிலம் குண்டூரில் புகையிலை உற்பத்தி மையங்களின் தலைமையகம் உள்ளது. இந்தியாவில் 3120 புகையிலை உற்பத்தி மையங்கள் நாடு முழுவதும் செயல்படுகின்றன. சுமார் 96 ஆயிரத்து 865 அங்கீகரிக்கப்பட்ட விவசாயிகள் புகையிலை உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு லைசென்ஸ் முறை இருந்தாலும், பலர் அனுமதி இல்லாமல் புகையிலை உற்பத்தி செய்கிறார்கள்.

புகையிலை மிகப்பெரிய வர்த்தகப் பொருளாக உருவெடுத்த பிறகு பல்வேறு வகையான புகையிலை பொருள்கள் உலகம் முழுவதும் நடமாடி வருகின்றன. புகையிலையில் இருந்து சுருட்டு, சிம்லி, கைனி, பீடி, சீவல், துருவல், சிகரெட், தூள், ஹூக்கா, குட்கா, மூக்குப் பொடி, களிம்பு, புகையிலை நீர், புகையிலை துண்டு, பான்மசாலா, சாக்லெட் என விதவிதமாக தயாரிக்கின்றனர். இப்படி வகை வகையாக சந்தைக்கு வந்து அதை பயன்படுத்துபவர்களை மட்டுமல்ல அவர்களின் உறவு, நட்புகளையும் பலியாக்கிக் கொண்டிருக்கின்றன.

தினமும் சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளை விட புகையிலையால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். ஒவ்வொரு 6 வினாடிக்கும்  உலகில் ஒரு உயிரிழப்பு புகையிலையால் ஏற்படுகிறது. இயல்பான இறப்பு விகிதத்தை விட 60 முதல் 80 சதவீதம் இறப்பு அதிகமாக நடக்கிறது. ஆண்டுவாரியாக கணக்கெடுத்துப் பார்த்தால் சுமார் 50லட்சம் மக்கள்  புகையிலை  பொருள்களை பயன்படுத்துவதால் இறப்பதாக மருத்துவப் புள்ளி விவரம் கூறுகிறது.

புகையிலையின் தீவிரத்தால் புற்றுநோய் ஏற்படுவதாக மருத்துவர்கள் பல காலமாக கூக்குரலிட்டு வருகின்றனர். ஆனாலும் புகையிலை பொருட்கள் வர்த்தகம் உலகம் முழுவதும் பரபரப்புடன் நடக்கிறது. காரணம் அதில் அதிக வருவாய் கிடைப்பதால் ஆரோக்கியத்தைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. இந்தியாவில் புகையிலை பொருட்களின் மீது புகையிலை அபாயம் குறித்த படங்கள் இடம் பெற வேண்டும் என்று சட்டம் போட்டும், விற்பனை குறையவில்லை என்பதுதான் சோகம்.

இளைய சமூகம் ‘சிகரெட்’ பயன்படுத்துவதை ஒரு ‘ஸ்டைல்’ என்றும், அது பெண்களை கவரும் என்றும் நினைக்கின்றனர். தொழிலாளர்களோ பான், புகையிலை, வெற்றிலை புகையிலை சுவைப்பதும் வாழ்வோடு இணைந்த ஒரு பழக்கமாக கொண்டுவிட்டனர். ஏழை எளியோர் தங்கள் வசதிக்கு ஏற்றதாக தேர்வு செய்துள்ளது பீடியைத்தான். மது அருந்துவோர் அதற்கு துணையாக புகைப்பதையும் பழக்கமாக வைத்துள்ளனர். துக்க வீடு, திருமண வீடு, மற்ற நிகழ்வுகளிலும் புகையிலை, புகை இல்லாத விழாக்களே இல்லை என்ற அளவுக்கு நமது பண்பாட்டுடன் புகையிலை பின்னிப் பிணைந்துவிட்டது.

தமிழகத்தில் சமீபத்தில் குட்கா விற்பனை விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததும், கோவையில் குட்கா தயாரிப்பு குடோன் கண்டுபிடிக்கப்பட்டதும் தமிழகத்தில் புகையிலையின் வர்த்தகம் எந்த அளவுக்கு காலூன்றி இருந்தது தெரியும். ஆனால் இவையெல்லாம் உற்பத்தியாளர்களுக்கும், மருத்துவ மனைகளுக்கும் தான் வருவாய் கொடுக்கும். பயன்படுத்தும் மக்களின் பண்பாட்டையும், வாழ்வையும் அழிக்கும் என்பது ஏனோ சம்பந்தப்பட்டவர்களுக்கு புரிய மறுக்கிறது.

* ஒரே ஒரு நாடு புகைக்கு தடைபோட்ட பூடான்

- வள்ளி சுந்தர்

முதல்முதலில் புகையிலைக்கு முழுமையாக  தடை விதித்த ஒரே நாடு பூடான். இந்தியாவுக்கு பக்கத்தில் இமயமலை தொடரில் அமைந்துள்ள சிறிய நாடு. அந்நாட்டின் நிலப்பரப்பு தமிழ்நாட்டின் நில பரப்பில் 3ல் ஒரு பங்குதான். அங்கு 1950ம் ஆண்டுகளில் கிராமப்புற மக்களில் 50 சதவீதம் பேர் புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருந்தார்கள். அரசு, புத்த பிட்சுக்களின் விழிப்புணர்வு நடவடிக்கைகள் புகையிலை பயன்பாடு கொஞ்சம் குறைய உதவியது.
ஆனாலும் பூடானில் பீடி, சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருள்கள் சர்வசாதாரணமாக புழக்கத்தில் இருந்தது.

அத்தியாவசிய பொருள்களாக பீடி, சிகரெட் இருந்தன. புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்ட பகுதிகளில் கூட, மறைமுகமாக சிகரெட் விற்பனை தாராளமாக இருந்தன. இந்நிலையில் பூடான் அரசு 2004ம் ஆண்டு புகையிலை பொருள்களுக்கு முழுமையாக தடை விதித்து சட்டமியற்றியது. இந்தச் சட்டமும் கொஞ்சம் வேலை செய்தது. உற்பத்தி இல்லாததால் புகையிலையை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறைந்தது. அதேநேரத்தில் கூடுதல் வரி செலுத்தி, சொந்த உபயோகத்துக்கு இறக்குமதி செய்து பயன்படுத்திக்கொள்ள பூடான் அரசு அனுமதி வழங்கியது.

அதனால் இறக்குமதி அதிகரித்தது. ஆனால் கூடுதல் வரி, கெடுபிடிகள் காரணமாக பீடி, சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கான கள்ளச்சந்தை உருவானது. பல மடங்கு விலை வைத்து விற்கப்பட்டன. அதைத்தொடர்ந்து 2010ம் ஜூன் மாதம் 16ம் தேதி மீண்டும் புகையிலை பொருள்களை உற்பத்தி, விற்பனை, தயாரிப்பு, விநியோகம், விளம்பரம் செய்ய முழுமையாக தடை விதித்தது பூடான் அரசு. ஆனால் இந்த முறை சட்டத்தை அமல்படுத்துவதில் அரசு தீவிரம்காட்டியது.  

கள்ளச்சந்தையில் புகையிலை விற்பனை செய்த பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். புத்த மதத்தை பின்பற்றும் பூடானில், புகையிலை பொருள்கள் வைத்திருந்ததற்காக புத்த பிட்சு ஒருவர் கைது செய்யப்பட்டார். எதிர்ப்புகள் எழுந்தாலும் புகையிலை  விவகாரத்தில், பூடான் அரசு பின் வாங்குவதாக இல்லை. இன்றுவரை பின் வாங்கவில்லை. புகையிலை பொருள்களை பயன்படுத்த வேண்டாம் என்று விழிப்புணர்வு செய்வதற்கு பதில் நம் நாட்டிலும் புகையிலை பொருள்களுக்கு தடை விதித்தால் பாராட்டலாம்.... கொண்டாடலாம்.....

தொகுப்பு: சஞ்ஜெயா இரகுநாதன்


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • deepam 9 fest

  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா 9-வது நாள் உற்சவத்தில் மாடவீதிகளில் சாமி உலா.

 • 10-12-2019

  10-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hongkiong_1211

  அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் 6 மாத கால நிறைவை முன்னிட்டு ஹாங்காங்கில் பிரம்மாண்ட பேரணி : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

 • northesat_masothaa1

  குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டங்களால் போர்க்களமாகி உள்ள வடகிழக்கு மாநிலங்கள்

 • dragon_shapes_chinaa1

  40 மீட்டர் நீள டிராகன், பாண்டா.. சீன புத்தாண்டை முன்னிட்டு எஸ்டோனிய தலைநகரை அலங்கரித்த ஒளிரும் உருவங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்