SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒரு பொம்மலாட்டம் நடக்குது.. இன்றும் புதுமையாக இருக்குது...

2018-05-29@ 14:23:35

விருதுநகர்: தமிழக பொழுதுபோக்கு கலைகளுக்கான வரலாற்று காலத்தை யாராலும் நிர்ணயம் செய்ய இயலாத அளவிற்கு தொன்மையானது. இவற்றில் இயல்,  இசை, நாடக வடிவங்களின் மூலமாக தெருக்கூத்து கருதப்படுகிறது. பாரம்பரிய நடனங்களாக அம்மாணை ஆட்டம், கும்மி ஆட்டம், கோலாட்டம், பரத நாட்டியம்,  பாம்பராட்டம், பொம்மலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, காவடி ஆட்டம் என பலவித வடிவங்களுடன் இடம் பெற்றள்ளது. இவற்றில் அன்று  முதல் இன்று வரை பலரையும் கவரும் பொம்மலாட்டம் குறித்து பார்ப்போமா? திருக்குறள், தேவாரம், திருவாசகத்திலும் பொம்மலாட்டம் பற்றி  குறிப்பிடப்பட்டிருக்கின்றன. பொம்மலாட்டம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாக கருதப்படுகிறது.

மன்னர் ஆட்சியில் அரண்மனை அந்தப்புரங்களுக்குள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், ராணிகளின் பொழுதுபோக்கிற்காக திரைகள் கட்டி பொம்மைகளை  கலைஞர்கள் வெளியில் இருந்து இயக்கி புராண கதைகள் மற்றும் வெளியுலக நடப்புகளை அரண்மனை பெண்களுக்கு தெரிவித்து வந்துள்ளனர்.  பொம்மலாட்டத்தை ‘பாவை கூத்து’ எனவும் அழைக்கின்றனர்.மரப்பொம்மைகளில் கயிறுகள் கட்டி திரைக்கு பின்னால் இருந்து கயிறுகளை இழுத்து அசைவுகள்  கொடுத்து இயக்கி கதைகளை விளக்குவதே பொம்மலாட்டம். இதற்காக பயன்படுத்தப்படும் மரப்பொம்மைகள் கல்யாண முருங்கை, அத்தி மரங்களில் 3 முதல் 5  அடி உயரத்திற்கு செய்து வர்ணம் தீட்டப்படுகிறது. உடைகள் அணிவிக்கப்பட்டு தத்ரூப காதாபாத்திரங்களை திரைக்கு முன்பாக கயிறுகள் மூலம் கட்டி நிலை  நிறுத்தப்படுகிறது.

இந்த பொம்மைகள் ஒவ்வொன்றும் 3 முதல் 8 கயிறுகள் மூலம் திரைக்கு பின் இருக்கும் கலைஞர்கள் மூலம் இயக்கப்படுகிறது. கதாபாத்திரத்தின் இயக்கத்திற்கு  தகுந்தபடி கம்பி, கயிறுகள் இழுத்து கதைக்கு ஏற்ற அசைவுகள் அளிக்கப்படுகிறது. ராமாயணம், மகாபாரதம், வள்ளி திருமணம், ஹரிச்சந்திரா, பக்த பிரகலாதன்  என புராண கதைகள் பொம்மலாட்டத்தில் நடித்து காட்டப்பட்டன. தற்போது சமூக கதைகள், விழிப்புணர்வு கதைகள் பொம்மலாட்டத்தின் மூலம்  வெளிப்படுத்தப்படுகிறது. கோயில் திருவிழாக்களில் இன்றளவும் கந்தபுராணம், சத்தியபாமா சபதம் என தெய்வ கதைகள் இடம் பெறுகின்றன. கந்தபுராண  கதையில் முருகன், பார்வதி, சிவன், பிரம்மா, நாரதர், இந்திரன், சூரபத்மன், கார்த்திகை பெண்கள் என சுமார் 15க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் திரைக்கு  முன்பாக கொண்டு வரப்படுகிறது. கதையினை விளக்கும் ஆண், பெண் குரல்கள், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தகுந்தபடி குரல்களை ஏற்றி, இறக்கி, மாற்றி  பேசி பார்வையாளர்களை கட்டுக்குள் வைத்திருக்கின்றனர்.

பொம்மலாட்ட கலைஞரான மயிலாடுதுறை சேந்தங்குடியை சேர்ந்த கலைச்சுடர்மணி விருது பெற்ற சோமசுந்தரம் கூறுகையில், ‘‘4 தலைமுறையாக  பொம்மலாட்டம் மூலம் விழிப்புணர்வினையும் 10க்கும் மேற்பட்ட கலைஞர்களுக்கு வாழ்வாதாரத்தையும் அளித்து வருகிறோம். கோயில் திருவிழா காலங்களான  பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் ஆர்டர்கள் வருகின்றன. கலையை கற்றுத்தர நாங்கள் தயாராக இருக்கும் நிலையில் வருமானம் குறைவு  என்பதால் இளைஞர்கள் யாரும் முன்வருவதில்லை. பொம்மலாட்டத்தை பார்க்க இன்றளவும் பார்வையாளர்கள் குறைவின்றி வருகின்றனர். சென்னை, மதுரை,  கோவை, கடலூர் நகரங்களில் திருமண நிகழ்ச்சிகளிலும் பொம்மலாட்டம் நடத்த அழைப்புகள் வருகிறது. அழிந்து வரும் கலையை காப்பாற்ற தமிழக அரசு  அறநிலையத்துறை கோயில்களில் பொம்மலாட்டம் கட்டாயம் நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-11-2018

  18-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 17-11-2018

  17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 3rdthiruvanamalai

  திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

 • pudukottaikaja

  கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

 • NagaiGajaStorm

  நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்