SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி அரசாணை வெளியிடாமல் மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் ஆணைக்கு ஒப்புதல் அளித்து முதல்வர் நாடகம் : திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

2018-05-29@ 02:12:05

சென்னை : ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி அரசாணை வெளியிடாமல், கண் துடைப்புக்காக மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் ஆணைக்கு ஒப்புதல் அளித்து முதல்வர் நாடகம் நடத்தியிருக்கிறார் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று தொடங்குவதை முன்னிட்டு நேற்று இரவு அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டம் இரவு 7.15 முதல் 8 மணி வரை சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். சட்டமன்ற துணை தலைவர் துரைமுருகன் முன்னிலை வகித்தார். துணை பொது செயலாளர் வி.பி. துரைசாமி, ஐ.ெபரியசாமி ெகாறடா சக்கரபாணி, துணை கொறாடா பிச்சாண்டி மற்றும் எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் என்ன முடிவெடுக்கப்பட்டது? இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் என்னென்ன பிரச்னைகளை மையமாக வைத்து, யார் எந்தெந்த மான்ய கோரிக்கையில் பேசுவது, எப்படி நடந்து கொள்வது என்பது குறித்தெல்லாம் ஆலோசனை செய்தோம். ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு ஆணையிட்டு, ஆலைக்கு சீல் வைத்திருக்கிறார்களே? மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆணைக்கு அரசின் சார்பில் ஒப்புதல் அளித்து இருக்கிறார்களே தவிர, அது தமிழக அரசின் ஆணையல்ல. ஒருவேளை 13 உயிர்களை கொல்லாமல் இந்த முடிவை எடுத்திருந்தால், உள்ளபடியே இந்த அரசின் நல்லெண்ணத்தை பாராட்டியிருக்கலாம். ஆனால், 13 பேரை கொன்றுவிட்டு, பல நூற்றுக்கணக்கான மக்களை பலவித கொடுமைகளுக்கு உள்ளாக்கிவிட்டு, அதன்பிறகு இந்த முடிவை எடுத்திருப்பதில் ஏதோ உள்நோக்கம் இருப்பது தெரிகிறது.

நியாயமாக, அமைச்சரவையை கூட்டி இப்படியொரு தீர்மானத்தை நிறைவேற்றி, அதை அறிவித்திருந்தால் பாராட்டுக்குரியதாக இருந்திருக்கும். அதனால், மக்களும் திருப்தி அடைந்திருப்பார்கள். ஆனால், இந்த அரசாணை அமைச்சரவையின் முடிவாக அறிவிக்கப்படவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆட்சி காலத்தில், 2013 ம் ஆண்டு, இதேபோன்ற நிலை ஏற்பட்டு, கண் துடைப்புக்காக அப்போது ஆலையை மூடுவதாக சொன்னார்கள். பிறகு, அதே மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆலையை ஆய்வு செய்து, ஆலை பாதுகாப்பாக இருக்கிறது, என்று அறிக்கை கொடுத்தது. எனவே, நாங்கள் மூடப்போகிறோம் என்று சொல்கிறோம், நீதிமன்ற உத்திரவு பெற்று ஆலையை திறந்து கொள்ளுங்கள், என்று கண் துடைப்புக்காக ஒரு நாடகத்தை எடப்பாடி பழனிசாமி நடத்தியிருக்கிறார். ஒருவேளை, முதலமைச்சருக்கு உள்நோக்கம் எதுவுமில்லை என்றால், 13 பேர் படுகொலைக்கு காரணமாக இருந்த டி.ஜி.பி. ஐ.ஜி. டி.ஐ.ஜி. உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கைகளை இந்த நேரத்தில் எடுத்திருக்க வேண்டும். ஆனால், அதை அவர் செய்யவில்லை.

எனவே, சட்டமன்றத்தில் இந்தப் பிரச்னைகளை எல்லாம் நாங்கள் எழுப்பவிருக்கிறோம். சட்டமன்ற கூட்டத்தை முன்னிட்டு இப்போதிருந்தே போலீஸ் குவிக்கப்பட்டு வருவதால், சட்டமன்றம் இயல்பாக நடந்து எதிர்கட்சிகள் கேள்வி எழுப்ப முடியுமா? முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை விட அதிகமான பாதுகாப்பு எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்கப்படுகிறது. எனவே, அவர் கோட்டைக்கு வருவதற்காக பலத்த பாதுகாப்பு செய்யப்படுகிறது. ஆளுநர் தூத்துக்குடிக்கு செல்வதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறதே? ஆளுநர் கூட செல்வதாக கூறப்படுகிறது. ஆனால், முதல்வர் இதுவரையிலும் தூத்துக்குடிக்கு செல்லவில்லை. ஏற்கனவே, சில அமைச்சர்கள் சென்றார்கள். சட்டமன்றம் கூடவிருப்பதால், துணை முதல்வரை அனுப்பியுள்ளனர். அப்படி சென்ற துணை முதல்வர் ஆட்சி தலைவர் அலுவலகத்தில் உட்கார்ந்து, அதிகாரிகளுடன் ஆலோசனை செய்துவிட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளில் ஓரிருவரை பெயருக்காக சந்தித்துவிட்டு வந்திருக்கிறார்.

அதற்காக, அவர்களின் உறவினர்களை அடித்து விரட்டியடித்து விட்டு, உதவியாளர்கள், செவிலியர்கள் யாரும் பக்கத்தில் இருக்கக்கூடாது என்று சொல்லி விரட்டிவிட்டு, பத்திரிகையாளர்கள் பிரச்னைகளை சொல்லி, எதிர்த்துக் கேள்வி கேட்பார்கள், அதெல்லாம் வீடியோவில் பதிவாகி விடக்கூடாது என்பதற்காக, அவர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்காமல், திட்டமிட்டு ஒரு நாடகத்தை நடத்திவிட்டு வந்திருக்கிறார். அதுமட்டுமல்ல, பிரதமர், குடியரசு தலைவர் போன்றவர்கள் நிகழ்ச்சிகளுக்கு வரும்போது, ஒருநாள் முன்பாக யார் யார் பேச வேண்டும், கார் எங்கு வந்து நிற்க வேண்டும் என்று சோதனையோட்டம் செய்து பார்ப்பது போல, துணை முதல்வர் அங்கு சென்றபோது, பல சோதனைகளை மேற்கொண்டு இருக்கிறார்கள்.

தனி வட்டாட்சியர்களின் உத்தரவுப்படி துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறதே? தூத்துக்குடியில் 13 பேர் படுகொலை தொடர்பாக, முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், திமுக சார்பில் நீதிமன்றத்தை நாடி, அவர்கள் மீது வழக்கு தொடர்ந்து, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார். சட்டமன்றம் கூடவிருப்பதால், துணை முதல்வரை அனுப்பியுள்ளனர். அப்படி சென்ற துணை முதல்வர் ஆட்சி தலைவர் அலுவலகத்தில் உட்கார்ந்து, அதிகாரிகளுடன் ஆலோசனை செய்துவிட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளில் ஓரிருவரை பெயருக்காக சந்தித்துவிட்டு வந்திருக்கிறார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-07-2019

  22-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 21-07-2019

  21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 20-07-2019

  20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hotairballoonchina

  சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

 • CornwallJellyfishEncounter

  இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்