SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கூட்டுச்சதி செய்த போலீஸ் அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும் : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

2018-05-28@ 01:56:51

சென்னை: “தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கூட்டுச்சதி செய்த முதல்வர், மற்றும் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி, உளவுத்துறை ஐ.ஜி., உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மீது உடனடியாக கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும்” என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து 99 நாட்களாக ஜனநாயக ரீதியில் அமைதியாகப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த அப்பாவி மக்கள் மீது, 100வது நாளன்று  திடீரென்று துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரை பட்டப்பகலில் படுகொலை செய்துவிட்டு, அந்தக் கோரப் படுகொலைகளில் நேரடியாகத் தொடர்புடைய அதிகாரிகள் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கும் துணிச்சல் இல்லாமல், “துப்பாக்கிச்சூட்டை” வெட்கம் சிறிதுமின்றி, நியாயப்படுத்திப் பேசிக்கொண்டிருக்கும் அதிமுக அரசுக்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“டி.ஐ.ஜி.யின் ஸ்டிரைக்கிங் போர்ஸில்”, உள்ளவர்கள் சீருடை அணியாமல் போலீஸ் வாகனங்கள் மீது ஏறி நின்று, நீண்ட தூரத்தில் உள்ளவர்களை குறிபார்த்து துப்பாக்கிகளால் சுடும் வீடியோ காட்சிகளும் வெளி வந்துள்ளன. தமிழ்நாடு “போலீஸ் ஸ்டாண்டிங் ஆர்டருக்கு”, விரோதமாகவும், “என்கவுன்டர்கள்” குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மீறும் வகையிலும்  ஸ்டெர்லைட் போராட்டத்தை முன்நின்று வழி நடத்தியவர்கள் குறிவைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள்.

போலீசாரின் நடவடிக்கை இந்திய தண்டனைச் சட்டம் சொல்லும் தற்காப்பு நடவடிக்கைகளுக்கு முற்றிலும் எதிரானது மட்டுமல்ல, கூட்டத்தைக் கட்டுப்படுத்தத் தேவையானதற்கும் அதிகமான “போர்ஸும்”, “துப்பாக்கிகளும்” திட்டமிட்டுப் பயன்படுத்தப்பட்டுள்ளதால், துப்பாக்கிச் சூட்டை தற்காப்பு நடவடிக்கையையும் தாண்டி முக்கிய போராட்டக்காரர்களைக் குறிவைத்துக் கொல்லும் “ஆப்ரேஷன்” ஆகவும் மாறிவிட்டது. இதன்மூலம் அமைதிப் பேரணியை முறையாகக் கட்டுப்படுத்துவதை விட, போராட்டத்தை முன்நின்று நடத்துபவர்களை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று முன் கூட்டியே ஒரு சதித்திட்டமும், அதை நிறைவேற்றிக் கொள்வதற்கான நடைமுறையும் உருவாக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது.

பொதுமக்களை எதிரிகளாக நினைத்து வஞ்சம் தீர்த்துக் கொள்ள, இப்படியொரு சதித்திட்டம் அடங்கிய துப்பாக்கிச்சூடு உளவுத்துறை ஐ.ஜி, சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு தெரியாமலோ, பேரணியைக் கையாண்ட தூத்துக்குடி போலீஸ் கண்காணிப்பாளர் மகேந்திரன், நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில் சரத்குமார், தென்மண்டல ஐ.ஜி. மகேஸ்குமார் அகர்வால் ஆகியோருக்கு தெரியாமலோ நடைபெற்றிருக்க எள்ளளவும் வாய்ப்பு இல்லை.

ஆனால், இவ்வளவு பயங்கரமான-கோரமான துப்பாக்கிச்சூட்டை நடத்த உத்தரவிட்ட போலீஸ் அதிகாரிகள் மீதோ, யூனிபார்ம் இல்லாமல் நின்று சுட்ட காவல்துறையினர் மீதோ இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் அனைவரும் திரைமறைவில் காப்பாற்றப்பட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளரை மாற்றி, சென்னையில் முக்கியப் பதவி கொடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டு இருப்பது பொதுமக்கள் சந்தேகிக்கும், “சதித் திட்டத்தை” மேலும் உறுதி செய்யும் விதத்தில் இருக்கிறது.

ஆகவே, துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் முழு உண்மையான எண்ணிக்கையை உடனடியாக வெளியிட்டு, ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்துப் போராட்டம் நடத்திய முன்னணி தலைவர்களைக் குறிபார்த்துச்  சுட்டுக்கொன்றது பற்றி விசாரித்து, குறிப்பாக ஓர் இளம்பெண்ணை வாயில் சுட்டுக்கொன்ற இதயமில்லாத காவல்துறையினரை உடனடியாக அடையாளம் கண்டு, அவர்கள் மீதும், சட்டம்- ஒழுங்கு டி.ஜி.பி. டி.கே ராஜேந்திரன், உளவுத்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தி, மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் மகேந்திரன், நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில் சரத்குமார், மதுரை மண்டல ஐ.ஜி மகேஸ்குமார் அகர்வால் ஆகியோர் மீதும், இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்துவதற்கு உடந்தையாக இருந்து ஒப்புதல் அளித்துக் கூட்டுச்சதி செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதும் கொலைவழக்குப் பதிவுசெய்து, நியாயமாக விசாரணை நடத்திட வேண்டும் என்று திமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

அப்படி உடனடியாக முதல்வர் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து, உரிய விசாரணை நடத்தவில்லை என்றால், திமுக சார்பில் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர, ஸ்டெர்லைட் ஆலை சுற்றுப்புறச்சூழலை மாசுபடுத்தியதற்கு அபராதமாக உச்சநீதிமன்றம் விதித்த ரூ.100 கோடி மற்றும் அதன் மீதான வட்டிப் பணம் தற்போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அந்த நிதியிலிருந்து தனியார் ஸ்டெர்லைட் ஆலைப் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாகியுள்ள 13 பேர் குடும்பத்திற்கும் முதலில் தலா ஒரு கோடி ரூபாயும், ஸ்டெர்லைட் ஆலையால் நோய் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள குடும்பங்களுக்கும், சுற்றுச்சூழலால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கும் தேவையான நிதியுதவியும் அளிக்க, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் அவசரக்கால நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

வேல்முருகனை கைது செய்வதா?

திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடியில் 13 பேரை கொலை செய்த போலீஸ் அதிகாரிகள் மீது ஒரு வழக்குக் கூட பதிவு செய்ய துப்பில்லாத அதிமுக அரசு, தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகனை கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. காவல்துறையை காவி மயமாக்கும் முதல்வர் பதவி விலகுவதே மக்களுக்கு பாதுகாப்பு.

ஸ்டெர்லைட் மூட பேரவையில் தீர்மானம்

திமுக செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு: ஸ்டெர்லைட் விவகாரத்தில் அடுத்தகட்டமாக என்ன செய்ய வேண்டும் என்று திமுக கருதுகிறது? உடனடியாக அமைச்சரவை கூட்டத்தை கூட்டி, ஸ்டெர்லைட் ஆலையை மூடுகிறோம் என்ற தீர்மானத்தை அவசரமாக அவர்கள் நிறைவேற்ற வேண்டும். அதேபோல, சட்டமன்றத்திலும் அந்தத் தீர்மானத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் திமுகவின் குரலாக இருக்கும். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-07-2019

  19-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • japan_animsehan11

  ஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 13 பேர் பலி

 • wax_giant_pics

  மெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா!!

 • church_cathdral11

  நெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்

 • apolo_50vinkalam1

  நிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்