SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தைராய்டு நோயிலிருந்து தப்பிப்பது எப்படி?

2018-05-25@ 12:03:02

உடலில் ஏற்படுகிற அயோடின் சத்துக் குறைபாடுதான் குறை தைராய்டு நோய்க்கு முக்கிய காரணம் என்பதைப் பார்த்தோம். இந்திய மக்கள் தொகையில் மூன்று சதவிகிதம் பேருக்கு இப்படித்தான் தைராய்டு பிரச்னை உருவாகிறது. ஆனால், இதைத் தாண்டியும் பல காரணிகளால் தைராய்டு ஏற்படுகிறது. தைராய்டு சுரப்பிக்குப் போதுமான அளவு அயோடின் கிடைக்காவிட்டால், தைராய்டு ஊக்கி ஹார்மோன் (TSH) அதிக அளவில் சுரந்து, தைராய்டு சுரப்பியைத் தூண்டும். ஆனாலும், அதனால் போதுமான அளவுக்கு தைராக்சின் ஹார்மோனை சுரக்க முடியாது. அதற்கு பதிலாக, அது வீங்கிவிடும். அப்போது கழுத்தின் முன்பக்கத்தில் ஒரு கழலை போன்று அது காணப்படும். அதற்கு முன்கழுத்துக்கழலை என்று பெயர். இது ஒரு தன் தடுப்பாற்றல் நோய் (Auto immune disease).

குடலை பாதிக்கும் சில பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளுக்கு எதிராக ரத்தத்தில் எதிர் அணுக்கள் (Anti bodies) தோன்றும்போது, அவை அந்தக் கிருமிகளை அழிப்பதோடல்லாமல், தைராய்டு சுரப்பி செல்களையும் அழித்துவிடுகிறது. இதன் விளைவால், தைராக்சின் சுரப்பது குறைந்து, குறை தைராய்டு நோய் உண்டாகிறது. பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் காரணமாக தைராய்டு சுரப்பியில் அழற்சி ஏற்படுதல், தைராய்டு சுரப்பியை அறுவை சிகிச்சையால் அகற்றுதல், முன்பிட்யூட்டரி சுரப்பி சிதைவடைதல் போன்ற காரணங்களாலும் குறை தைராய்டு நோய் வரலாம். இளம் வயதில் புற்றுநோய் தாக்கி, கதிரியக்கச் சிகிச்சை பெற்றிருந்தால், தைராய்டு சுரப்பி சிதைவடைந்து, குறை தைராய்டு ஏற்படும். மன அழுத்தம் கூட இதற்கு ஒரு காரணம்தான்.

குறை தைராய்டு

தைராய்டு சுரப்பியில் தைராக்சின் ஹார்மோன் குறைவாகச் சுரந்தால், குறை தைராய்டு (Hypothyroidism) எனும் நிலைமை ஏற்படும். இதன் ஆரம்ப அறிகுறிகள் இவை... உடல் சோர்வு, உடல் தளர்வு, சாதாரண வெப்பத்தைக்கூட குளிர்ச்சியாக உணர்வது, குளிர் தாள முடியாமல் போவது, முடி கொட்டுவது, உலர்ந்த தோல், தோலில் அரிப்பு, பசி குறைவது. அதே நேரத்தில் எடை அதிகரிப்பது, ஞாபக மறதி, மலச்சிக்கல், அதிக தூக்கம், முறையற்ற மாதவிலக்கு, குரலில் மாற்றம், கைகால்களில் மதமதப்பு, கருத்தரிப்பதில் பிரச்னை, மூட்டுவலி. இப்படி பல பிரச்னைகள் குறை தைராய்டு உள்ளவர்களுக்கு அடுத்தடுத்து ஏற்படும் என்றாலும், உடனே பயந்துவிட வேண்டாம். வேறு சில நோய்களிலும் இந்த அறிகுறிகளில் ஒன்றிரண்டு ஏற்படுவதுண்டு. அதேநேரம், டாக்டரை கலந்து ஆலோசித்து, தேவையான பரிசோதனைகளைச் செய்து, தைராய்டு நோயை உறுதி செய்யவும் தயங்க வேண்டாம்.

குறை தைராய்டு நோய் உள்ளவர்களுக்குக் கழுத்துப் பகுதியில் வீக்கம் ஏற்படுவதும், உடலில் நீர் கோர்த்துக் கொண்டு பருமனாவதும், குரலில் மாற்றம் ஏற்படுவதும், தோல் வறண்டு போவதும் நோயை வெளிப்படையாகத் தெரிந்து கொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள். ரத்தசோகை இருப்பது, ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பது போன்றவையும் இந்த நோய் உள்ளவர்களிடம் காணப்படும் முக்கியத் தடயங்களாகும். ஒரு விஷயத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

தைராய்டு நோயாளிக்கு மேற்சொன்ன அறிகுறிகள் எல்லாமே ஒரே நாளில் அல்லது அடுத்தடுத்த நாட்களில் வெளிப்படுவதில்லை. மெதுவாக, மிக மெதுவாக, ஒன்றன்பின் ஒன்றாகவே வெளியில் தெரியவரும். என்றாலும், இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்திவிடாமல், ஆரம்பத்திலேயே டாக்டரிடம் காண்பித்து ஆலோசனை பெற வேண்டியது முக்கியம். பெரியவர்களுக்கு ஏற்படும் குறை தைராய்டு நோய்க்கு மிக்சிடீமா (Myxoedema) என்று பெயர். இதுவே குழந்தைகளுக்கு ஏற்படுமானால், அதைக் கிரிட்டினிசம் (Cretinism) என்று அழைக்கின்றனர்.

மிகை தைராய்டு

தைராய்டு சுரப்பி வழக்கத்துக்கு மாறாக அதிகமாகப் பணி செய்தால், தைராக்சின் ஹார்மோன் அதிக அளவில் சுரக்கப்படும். இந்த நிலைமைக்கு மிகை தைராய்டு (Hyperthyroidism) என்று பெயர். இந்த நோய் உள்ளவர்களுக்குப் பசி அதிகமாக இருக்கும். அடிக்கடி உணவு சாப்பிடுவார்கள். ஆனால், உடல் மெலியும். நெஞ்சு படபடப்பாக இருக்கும். நாடித்துடிப்பு அதிகரிக்கும்.

விரல்கள் நடுங்கும். விரல் நுனிகள் தடித்திருக்கும். உள்ளங்கை வியர்க்கும். அடிக்கடி மலம் போகும். அடிக்கடி சிறுநீர் கழியும். சிறிது கூட பொறுமை இருக்காது. எதற்கெடுத்தாலும் கோபம் வரும். சிலருக்குக் கண்கள் பெரிதாகி விகாரமாகத் தெரியும். கழுத்துப் பகுதியில் வீக்கம் காணப்படும். பெண்களுக்கு மாதவிலக்கு நாட்களில் அதிகமான ரத்தப்போக்கு இருக்கும். பாலுறவில் விருப்பம் குறையும். திருமணமான பெண்களுக்குக் குழந்தை பிறப்பது தாமதமாகும்.

இந்த நோயை கிரேவ் நோய்(Grave’s disease) என்றும் அழைப்பதுண்டு. இதுவும் ஆண்களைவிட பெண்களைத்தான் அதிக அளவில் பாதிக்கும். சுமார் இரண்டு சதவிகித பெண்களுக்கு இது ஏற்படுகிறது. முக்கியமாக, 20 வயது முதல் 50 வயதுக்குள் உள்ள பெண்களுக்கு இந்த நோய் ஏற்படலாம்.
அயோடின் உள்ள உணவுகளையோ, மருந்துகளையோ அளவுக்கு அதிகமாக உண்பவர்களுக்கு மிகை தைராய்டு நோய் ஏற்படலாம். தைராய்டு சுரப்பியில்
கட்டிகள் தோன்றினாலும், முன்பிட்யூட்டரி சுரப்பியில் கட்டி தோன்றும்போதும் இந்த நோய் ஏற்படுவதுண்டு!

தைராய்டு சுரப்பி - ஓர் அறிமுகம்

தொண்டையில் மூச்சுக்குழாய்க்கு முன்பாக, குரல்வளையைச் சுற்றி, இரு பக்கமும் அமைந்துள்ளது தைராய்டு சுரப்பி. இது சாதாரணமாக நம் கண்ணுக்குத் தெரியாது. இதன் இயல்பான எடை 12-லிருந்து 20 கிராம் வரை இருக்கும். இந்த எடைக்கு மேல் அதிகமானால், தைராய்டு சுரப்பி வீங்கியுள்ளது என்று பொருள். அப்போது நோயாளியானவர் உணவை விழுங்கும்போது, குரல்வளையோடு தைராய்டும் சேர்த்து மேலே
தூக்கப்படுவதைப் பார்க்க முடியும்.

தைராக்சின்(T4), டிரை அயடோதைரோனின் (T3) எனும் இரண்டு ஹார்மோன்களை தைராய்டு சுரப்பி சுரக்கிறது. இவற்றில் தைராக்சின் செய்யும் பணி முக்கியமானது. கருவில் உள்ள குழந்தையின் 11-வது வாரத்திலிருந்து சுரக்கத் தொடங்குகிற தைராக்சின் ஹார்மோன், அப்போதிலிருந்தே உடலிலுள்ள செல்களின் இயக்கத்தையும், வளர்ச்சி மற்றும் முதிர்ச்சி நிலைகளையும் கட்டுப்படுத்தத் தொடங்கிவிடுகிறது. குழந்தையின் கரு வளர்வதில் தொடங்கி, உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி, எலும்பு பலம், தசை உறுதி, புத்திக்கூர்மை என்று பலவற்றுக்கு தைராக்சின் ஹார்மோன்தான் ஆதாரம். உடல் செல்கள் பிராண வாயுவைப் பயன்படுத்தி வேதிவினைகள் புரிவதற்கு தைராக்சின் தேவை.

கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு முதலிய உணவுச்சத்துகளின் வளர்சிதைமாற்றப் பணிகளை முடுக்குவது தைராக்சின். புரதச்சத்தைப் பயன்படுத்தி உடல் வளர்ச்சியைத்  தூண்டுவதும், சிறுகுடலில் உள்ள உணவுக்கூழிலிருந்து குளுக்கோஸை பிரித்து ரத்தத்தில் கலப்பதும், ரத்தக் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதும் தைராக்சின் ஹார்மோன்தான். இதயம், குடல், நரம்புகள், தசைகள், பாலின உறுப்புகள் போன்ற முக்கியமான உறுப்புகளின் இயக்கங்களையும் தைராக்சின் ஹார்மோன்தான் ஊக்குவிக்கிறது. மனித உடலில் வெப்பத்தை உண்டாக்கி, அதைச் சமநிலையில் வைத்திருப்பதும் தைராக்சின் ஹார்மோன்தான். உடல் செல்களில் பல நொதிகள் உருவாவதற்கும் தைராக்சின் ஹார்மோன் தேவைப்படுகிறது.

- டாக்டர் கு.கணேசன்


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • japan_animsehan11

  ஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 13 பேர் பலி

 • wax_giant_pics

  மெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா!!

 • church_cathdral11

  நெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்

 • apolo_50vinkalam1

  நிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி!!

 • 18-07-2019

  18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்