SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதிய பேருந்து நிலையம் கட்டுவதில் மீண்டும் சிக்கல் : திண்டிவனம் மக்கள் வேதனை

2018-05-18@ 13:00:04

திண்டிவனம்: திண்டிவனத்தில், நகராட்சி ஆணையர் மாற்றப்பட்டதை தொடர்ந்து, புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கான பணிகள் துவங்குமா என்ற வேதனையில் பொதுமக்கள் உள்ளனர்.திண்டிவனத்தில், ரயில்வே நிலையம் அருகில் இந்திரா காந்தி பஸ் நிலையம் கடந்த 1971ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் தொகை பெருக்கம் மற்றும் பேருந்துகள் அதிகரிப்பால் பேருந்துகள், நிலையத்துக்குள் வராமல், மேம்பாலத்தின் அருகிலேயே நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல துவங்கின. அனைத்து பேருந்துகளும் வந்து செல்லும் வகையில் நகருக்கு புதிய பேருந்து நிலையம் கட்டாயம் தேவை என்ற நிலையில் 1997ல் திமுக ஆட்சியில், திண்டிவனம் ஏரியில் நீர்பிடிப்பு இல்லாத பகுதியில் ஆறு ஏக்கர் இடம் நகராட்சி மூலம் வருவாய் துறையிடம் இருந்து பெறப்பட்டது. ஆனால், 2001ல் அந்த இடத்தில் பேருந்து நிலையம் வருவதற்கு அதிமுக அமைச்சர் சண்முகம் எதிர்ப்பு தெரிவித்து, அதற்கு பதிலாக மயிலம் ரோட்டில் உள்ள வக்ப் போர்டுக்கு சொந்தமான இடத்தில் வாடகைக்கு பேருந்து நிலையம் வர முயற்சி மேற்கொண்டார்.

இதை தொடர்ந்து 2005ல் திறப்பு விழா நடந்தது. அப்போது தேர்தல் அறிவிப்பு வந்ததால் திறந்த பேருந்து நிலையம் உடனே மூடப்பட்டது. அதன்பிறகு பேருந்து நிலையம் வருவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், புதிய பேருந்து நிலையம் வர வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்தனர். இதை தொடர்ந்து புதிய பேருந்து நிலையம் அமைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி தந்தது. இதனால் 2013ல் திண்டிவனம் புதிய பேருந்து நிலையம் கட்ட  ரூ.15 கோடி ஒதுக்கியதாக சட்டசபையில் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் புதிய பேருந்து நிலையம் தொடங்குவதற்கான எந்த பணியும் நடைபெறவில்லை. இந்த நிலையில், திண்டிவனம் நகராட்சிக்கு புதிய ஆணையராக பதவியேற்ற சுரேந்தர்ஷா, நகர மக்களின் கோரிக்கையை ஏற்று 20 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த புதிய பேருந்து நிலைய திட்டத்தை செயல்படுத்த அதிக ஆர்வம் காட்டினார்.

ரூ.20 கோடி செலவில் 100 பேருந்துகள் வந்து செல்லும் வகையில் நவீன பேருந்து நிலையம் அமைக்க திட்டம் தீட்டி, அதை அரசுக்கு அனுப்பி வைத்தார். நகரில் உள்ள அனைத்து பிரமுகர்களையும் அழைத்து நகராட்சியில் கூட்டம் நடத்தி, புதிய பேருந்து நிலையம் வர அவர்கள் தந்த நிபந்தனையற்ற ஆதரவை வீடியோவாக எடுத்து அரசுக்கு அனுப்பி வைத்தார். புதிய பேருந்து நிலையம் அமைய ஆணையர் சுரேந்தர்ஷா எடுத்த நடவடிக்கைகளை நகர மக்கள் வரவேற்றனர். புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி விரைவில் தொடங்கும் என எதிர்பார்ப்புடன் இருந்தனர் இந்நிலையில், திண்டிவனம் நகராட்சி ஆணையர் பொறுப்பில் இருந்து சுரேந்தர்ஷாவை தமிழக அரசு நீக்கியுள்ளது. அவருக்கு எந்த பொறுப்பும் தராமல் காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளது. இது திண்டிவனம் நகர மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. புதிதாக பதவி ஏற்க வரும் ஆணையர், புதிய பேருந்து நிலைய திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுப்பாரா என்ற சந்தேகத்தில் பொதுமக்கள் உள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-01-2019

  19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • ChillaiKalanKashmir

  கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

 • bombblastcolombia

  கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

 • chinafiredrone

  மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

 • horse_apain12

  விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்