SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை கிரைம்

2018-05-18@ 01:12:57

40 சவரன் அபேஸ்
தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை, அஸ்தினாபுரம், ராம்பக் ஷீ நகர், சீனிவாசன் தெருவை சேர்ந்தவர் முரளி (57). சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி உமாமகேஸ்வரி (50), பள்ளி ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் முரளி மனைவியுடன் அம்பத்தூரில் உள்ள மனைவியின் அண்ணன் வீட்டிற்கு சென்றார். இரவு தங்கி விட்டு நேற்று காலை வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் பீரோவில் இருந்த சுமார் 40 சவரன் தங்க நகைகள் மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்களை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

3 வீடுகளில் கொள்ளை
பெரம்பூர் அடுத்த  திருவிகநகர்  ராமமூர்த்தி காலனி மெயின் தெருவை சேர்ந்தவர் ரவி (43). இவரது மனைவி சசிகலா (40). நேற்று முன்தினம் அதிகாலை காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கியுள்ளனர். அப்போது, மர்ம ஆசாமிகள் நைசாக வீட்டுக்குள் புகுந்து, அங்கு டேபிளில் வைத்திருந்த செயின், மோதிரம் மற்றும் 1000 ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பினர். இதேபோல் மூர்த்தி தெருவில் சீனிவாசன் என்பவரது வீட்டில், ஜன்னல் வழியாக கம்பைவிட்டு அங்கிருந்த கைபையை எடுத்துள்ளனர். அதிலிருந்த 500 எடுத்து கொண்டு பையை அங்கேயே வீசிவிட்டு தப்பினர். பின்னர், சீனிவாசன் வீட்டின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஞானம் என்பவரின் வீட்டில் 2 செல்போன் திருடிச்சென்றனர்.

திருடர்கள் அட்டகாசம்
பல்லாவரம் கம்பர் தெருவை சேர்ந்தவர் புஷ்பா (65). இவர், நேற்று காலை வழக்கம் போல் வாக்கிங் செல்லும் போது, அவரை பின்தொடர்ந்து சென்ற ஹெல்மெட் கொள்ளையர்கள் இருவரும் கண்ணிமைக்கும் நேரத்தில் மூதாட்டி புஷ்பாவை தாக்கிவிட்டு, அவரது கழுத்தில் கிடந்த சுமார் ஆறு சவரன் தாலி செயினை பறித்துக் கொண்டு பைக்கில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பினர்.

விபத்தில் 2 பேர் பலி
பள்ளிக்கரணை திருவிக தெருவை சேர்ந்தவர் தாரா (38). இவர், நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து, பள்ளிக்கரணை குளக்கரை பேருந்து நிறுத்தத்துக்கு பஸ்சில் வந்து இறங்கினார். பின்னர், தாரா வேளச்சேரி பிரதான சாலையை கடக்க முயன்றபோது, அவ்வழியாக ஒரு பெண் ஓட்டி வந்த மொபட் தாராவின் மீது வேகமாக மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோல், வண்டலூர் பனக்காட்டுபாக்கம் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் பொன்னுசாமி (45). திருமண புரோக்கர். கடந்த 13ம் தேதி சொந்த வேலையாக பைக்கில் சித்தாலப்பாக்கம் வந்து கொண்டிருந்தார். மாம்பாக்கம் பிரதான சாலையில் பைக் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் சென்டர் மீடியனில் பைக் மோதியது. இதில், பொன்னுசாமி பலியானார்.

8 சவரன் கொள்ளை
ஆலந்தூர் வடக்கு ராம் நகர் பாலாஜி நகரை சேர்ந்தவர் நீலா (80). இவர் தனியாக வசித்து வருகிறார். இவரது மகன் குடும்பத்துடன் மடிப்பாக்கத்தில் வசித்து வருகிறார். இவர் பிரபல கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.இந்நிலையில், நேற்று முன்தினம் டிப்-டாப் உடையில் வந்த 5 பேர் கும்பல், நீலாவின் வீட்டு கதவை தட்டி. ‘‘நாங்கள் வருமான வரித்துறை அதிகாரிகள், மடிப்பாக்கத்தில் உள்ள உங்கள் மகன் வீட்டில் ரெய்டு நடந்து கொண்டிருக்கிறது. இங்கும் நாங்கள் ரெய்டு நடத்த வந்திருக்கிறோம். உங்களது வீட்டை சோதனை நடத்த வேண்டும்’’ என்று கூறிவிட்டு வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையாக சென்றனர். ஒரு நோட்டு பேனாவை வைத்துக்கொண்டு எழுதுகிற மாதிரி பாவலா காட்டி, அவர் அணிந்திருந்த 8 சவரன் நகையை மற்றும் பீரோவில் இருந்து 500ம் நூதனமாக பறித்து கொண்டு தப்பினர்.

பெண்ணுக்கு வெட்டு 6 பேர் பிடிபட்டனர்
ஆதம்பாக்கம், அம்பேத்கர் நகரில் வசித்து வந்தவர் அதிமுக பிரமுகர் ஏழுமலை (50). இவர் பிரபல ரவுடி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரவுடி பி.வி.செந்தில் என்பவருக்கும் இடையே யார் பெரிய ரவுடி என்ற போட்டி ஏற்பட்டது. இதில், ஏழுமலையை செந்தில் தரப்பினரும், செந்திலை எழுமலையின் மனைவி கூலி படை ஏவியும் வெட்டிக் கொலை செய்தனர். இது, ஏற்பட்ட முன்விரோதத்தில் கடந்த 15ம் தேதி இரவு, ஏழுமலை மனைவியின் கவிதாவை செந்தில் தரப்பினர் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். இதுதொடர்பாக, மடிப்பாக்கம் போலீசார் பி.வி.செந்திலின் வளர்ப்பு மகன் ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்த ராபின் (24), சசி (எ) மணிகண்டன் (24), குணா (23), கார்த்திக் (23), வேளச்சேரியை சேர்ந்த கார்த்திக் (24), விஜி (23) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கடைக்காரருக்கு அடி
சென்னை நந்தனம் பகுதியை சேர்ந்தவர் ஜெஸ்வின். இவர், நந்தனம் ஒய்எம்சிஏ மைதானம் அருகே ஜூஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 4 வாலிபர்கள் வந்து ஜூஸ் குடித்துள்ளனர். அப்போது, ஒரு வாலிபர் ஐஸ் குறைவாக இருக்கிறது என்று கூறியுள்ளார். அதற்கு, கடைக்காரர் கிண்டலாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 4 வாலிபர்களும் கடை உரிமையாளர் ஜெஸ்வினை கடையில் இருந்து இழுத்துப் போட்டு கடுமையாக அடித்து உதைத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். புகாரின்பேரில், சைதாப்பேட்டை போலீசார், திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் (21), மயிலாப்பூரை சேர்ந்த தனுஷ் (22), ராயப்ேபட்டையை சேர்ந்த அபின் (20), தீபக் (20) ஆகியோரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

1.30 லட்சம் திருட்டு
வண்ணாரப்பேட்டை ரங்கம்மாள் தெருவை சேர்ந்தவர் வெள்ளதுரை (36). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி கவிதா (32). நேற்று கவிதா வண்ணாரப்பேட்டையில் உள்ள வங்கியில், நகைகள் அடகு வைத்து ₹1 லட்சத்து 30 ஆயிரம் பணத்தை வாங்கி உள்ளார். பணத்தை தனது மொபட்டில் வைத்து கொண்டு அதே பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு சென்றார். பணம் எடுத்துக்கொண்டு திரும்பி வந்து பார்த்தபோது மர்ம ஆசாமிகள் மொபட்டின் பூட்டை உடைத்து ₹1 லட்சத்து 30 ஆயிரம் பணம், 2 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

8 பேருக்கு குண்டாஸ்
சென்னையில் தொடர்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த காக்கா தோப்பு பகுதியை சேர்ந்த விஜி (எ) விஜயகுமார் (23), ராஜா (24), சாந்தகுமார் (23) பெரம்பூர், ெசம்பியம் பகுதியை சேர்ந்த அன்பு (எ) அன்பரசன் (29), கொடுங்கையூர், எருக்கஞ்சேரி பகுதியை சேர்ந்த ராஜேஷ் (எ) சப்பை ராஜேஷ் (32), கொடுங்கையூர், காமராஜர் சாலையை சேர்ந்த விமல் (எ) விமல்குமார் (36),  திருவள்ளுர் மாவட்டம், மேல்நல்லாத்தூர், காந்திநகர் பகுதியை சேர்ந்த மகி (எ) மகேஸ்வரன் (33), சிவகங்கை மாவட்டம், கோகலே ஹால் தெருவை சேர்ந்த கமல்ராஜன் (34) ஆகிய 8 பேரை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில் போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.  

மாவா விற்றவர் கைது
ஓட்டேரி சப்-இன்ஸ்பெக்டர் காதர்மீரா மற்றும் போலீசார் ஓட்டேரி வள்ளுவ பண்டாரம் தெருவில் ரகசியமாக கண்காணித்தபோது, ஆசாமி ஒருவர் மாவா (போதை பாக்கு) விற்பனை செய்தது தெரிந்தது. அந்த நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில், ஓட்டேரி எஸ்.எஸ்.புரம் 6வது தெருவை சேர்ந்த சிவராஜ் என்பவரது மகன் வேலு (45) என்பதும், கஞ்சா விற்பனை உள்பட பல்வேறு வழக்கு இருப்பதும் தெரிந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மனைவி கையை உடைத்த கணவர் கைது
ஓட்டேரி, கந்தசாமி கோயில் தெருவில் வசிப்பவர் சக்ரவர்த்தி (53). இவரது மனைவி சித்ரா (47). தம்பதிக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணமாகி தற்போது ஒரு மகள் உள்ளார். சக்ரவர்த்திக்கு வேலை செய்யும் இடங்களில் பெண்களிடம் தவறான உறவு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் சித்ராவுக்கு தெரிய வந்ததால் கணவருடன் வாக்குவாதம் செய்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த சக்ரவர்த்தி பலமாகி தாக்கியதால், சித்ராவின் வலது கையில் முறிவு ஏற்பட்டது.  இதுகுறித்து சித்ரா அளித்த புகாரின்பேரில், சக்ரவர்த்தியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 16-08-2018

  16-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-08-2018

  15-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • chinaearthquake

  சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

 • meteorshower

  ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

 • indonesiaafterquake

  இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்