SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோடை கொண்டாட்டத்தை குதூகலமாக்க கனவு தேசத்தில் கால் பதிக்கலாமா?

2018-05-16@ 10:43:58

மூணாறு: உலக சுற்றுலா வரைபடத்தில் தனக்கென்று தனி முத்திரை பதித்து சுற்றுலாப்பயணிகளின் சொர்க்க பூமியாக திகழ்கிறது கேரள மாநிலம், மூணாறு. தேனி மாவட்டத்தை ஒட்டி இருக்கும் மூணாறுக்கு தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் சுற்றுலா சென்றவண்ணம் உள்ளனர். அப்படி என்ன அங்கே இருக்கு என்கிறீர்களா?

ஆகாயத்தில் நழுவி செல்லும் முகிலினங்கள், மேனியை தழுவி செல்லும் தூய காற்று, பச்சை போர்வை போர்த்திய மலைகள், இசை மீட்டும் அருவிகள், சுடாத சூரியன்... இப்படி மனது கொள்ளை போகும் அளவுக்கு, கோடைக்காலங்களில் மூணாறு ஒரு கனவு தேசமாகவே திகழ்கிறது. கடல் மட்டத்தில் இருந்து 6,000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மூணாறின் இயற்கையை ரசிக்க வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் உள்ள சுற்றுலாப்பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

காஷ்மீருக்கு அடுத்தபடியே மூணாறில் காணப்படும் அபூர்வ இனமான வரையாடுகள், 12 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்களை கண்டு ரசித்து விட்டு செல்லலாம். வாருங்கள்... கனவு தேசத்தில் கால் பதிப்போம். அதுக்கு முன்னாடி மூணாறுக்கு எப்படி போகிறதுன்னு பார்ப்போமா? முதல்ல தேனிக்கு போயிருங்க. அங்கே இருந்து போடி சென்று மூணாறுக்கு போகலாம். தேனியில் இருந்து மொத்தம் 88 கிமீ.

ராஜமலை:

மூணாறில் இருந்து 15 கிமீ  தொலைவில் உள்ள அற்புதமான இடம் ராஜமலை. கடல் மட்டத்தில் இருந்து 2,695 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. காஷ்மீருக்கு அடுத்தபடியாக வரையாடுகள் இங்கு அதிகளவில் காணப்படுகின்றன. உப்பை மட்டுமே உணவாக உட்கொண்டு வளரும் வரையாடுகள் பார்ப்பதற்கு பரம சாது. மனிதருடன் நெருங்கி பழகும் குணமும் கொண்டது. பாறை இடுக்குகளில் சர்வ சாதாரணமாக ஏறி பயணிக்கும் வரையாடுகளை, வரைமுறையின்றி ரசித்துக்கொண்டே இருக்கலாம். 12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் ராஜமலையின் சிறப்பு அம்சம். அரிய பறவையினங்கள், வண்ண மலர் தோட்டங்கள், தெளிந்த நீரோடைகள், அருவிகள் என பார்க்க நிறைய இடங்கள் உள்ளன. இந்த இடம் கேரள வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே, சுற்றுலாப்பயணிகள் வனத்துறை வாகனங்களில் மட்டுமே சென்று சுற்றி பார்க்கலாம். ராஜமலையை ரசிக்க வெளிநாட்டவருக்கு ரூ.250, மற்றவர்களுக்கு ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. உயர்ந்த சிகரமான ஆனைமுடி மலையையும் இங்கு இருந்து கண்டு ரசிக்கலாம்.

மாட்டுப்பட்டி அணை:

மூணாறில் இருந்து 15 கிமீ தொலைவில் உள்ளது மாட்டுப்பட்டி அணை. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த அணையை, இளம்ஜோடிகளின் சொர்க்க பூமி எனலாம். இங்கு படகு சவாரி, எக்கோ பாயிண்ட், மலர் அருங்காட்சியகம், தேனீக்கள் அதிகமாக காணப்படும் ‘ஹனிபீ ட்ரீ’, யானை சவாரி, குதிரை சவாரி என ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. மாட்டுப்பட்டி அணையை மனதார கண்டு களிக்கலாம்.

ஆத்துக்காடு நீர் வீழ்ச்சி :


மூணாறில் இருந்து கொச்சி செல்லும் சாலையில் 9 கிமீ தொலைவில் உள்ளது ஆர்ப்பரித்து கொட்டும் ஆத்துக்காடு நீர்விழ்ச்சி. இதன் அழகை ரசித்துக்கொண்டே இருக்கலாம். குளிக்க தடை உள்ளது. இங்கு ஏராளமான மரங்கள் உள்ளன.

டாப் ஸ்டேஷன்:

மேற்கு தொடர்ச்சி மலைகள் உள்ளடக்கிய கேரள - தமிழ்நாடு எல்லையில், 1,700 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் அற்புத இடம் டாப் ஸ்டேஷன். தேனி மாவட்டத்தின் ஒரு பகுதி. மூணாறில் இருந்து 34 கிமீ தொலைவில் உள்ளது. ஓங்கி உயர்ந்த மலைகள், தொட்டு செல்லும் வண்ண முகில்கள் போன்ற சிறப்பு அம்சங்களை உள்ளடக்கிய டாப் ஸ்டேஷன் அழகின் அடையாளமாக திகழ்கிறது . டாப் ஸ்டேஷனில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலையின் அழகை கண் குளிர கண்டு ரசிக்கலாம்.

குண்டலை அணை:


மூணாறில் இருந்து 25 கிமீ தொலைவில் உள்ள குண்டலை அணை. கடல் மட்டத்தில் இருந்து 1,700 மீட்டர் உயரத்தில் உள்ளது.  இந்த அணை 1946ம் ஆண்டு மின் உற்பத்தி செய்யும் நோக்கில் கட்டப்பட்டது. புகைப்பட பிரியர்களுக்கு சிறந்த இடம். மேலும் படகு சவாரி, காஷ்மீரில் பயன்படுத்தப்படும் சிக்கரி படகு என சுற்றுலாப்பயணிகளை மயக்கும் அம்சங்கள் உள்ளன.

கொழுக்கு மலை:

காட்டுத்தீ பயங்கரம் நடந்த அதே இடம்தான். தற்போது குரங்கணி பாதை தடை செய்யபட்டுள்ளதால், மூணாறில் இருந்து 30 கிமீ பயணித்து, சின்னக்கானல் சென்று, அங்கிருந்து ஜீப்பில் 5 கிமீ பயணித்து கொழுக்குமலை சென்றடையலாம்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pakistan_protest123

  பாகிஸ்தானில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்...போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலர் படுகாயம்!

 • omen_rain_fall

  ஓமன், ஏமன் நாடுகளை தாக்கிய புயலால், 3 இந்தியர்கள் உள்பட 11 பேர் பலி

 • ramzan_fasting123

  உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்கள் கடைபிடிக்கும் ரமலான் நோன்பின் புகைப்படத்தொகுப்பு!

 • tamilnaduveyilend

  தமிழகத்தை வாட்டி வதைத்த அக்னி வெயிலின் தாக்கம் இன்றுடன் நிறைவு

 • 28-05-2018

  28-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்