SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குல்தீப் யாதவ் அபார பந்துவீச்சு நைட் ரைடர்சுக்கு 143 ரன் இலக்கு

2018-05-16@ 01:34:30

கொல்கத்தா, மே 16: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணிக்கு 143 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அபாரமாகப் பந்துவீசிய குல்தீப் யாதவ் 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பந்துவீச முடிவு செய்தார். ராஜஸ்தான் தொடக்க வீரர்களாக திரிபாதி, பட்லர் களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 4.4 ஓவரில் 63 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தனர். திரிபாதி 27 ரன் (15 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ரஸ்ஸல் வேகத்தில் கார்த்திக் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த கேப்டன் ரகானே 11 ரன் எடுத்து குல்தீப் சுழலில் பலியாக, ஜாஸ் பட்லர் 39 ரன் (22 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி குல்தீப் பந்துவீச்சில் சியர்ல்ஸ் வசம் பிடிபட்டார். சஞ்சு சாம்சன் 12 ரன் எடுத்து நரைன் பந்துவீச்சில் பெவிலியன் திரும்ப, ஸ்டூவர்ட் பின்னி (1) மற்றும் கவுதம் (3) வந்த வேகத்தில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர்.

பெரிய ஸ்கோர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் 11 ரன் மட்டுமே எடுத்து குல்தீப் சுழலில் அவரிடமே கேட்ச் கொடுத்து பரிதாபமாக வெளியேறினார். கடைசி கட்டத்தில் உனத்காட் அதிரடியில் இறங்க, ராயல்ஸ் ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது. மறுமுனையில் ஈஷ் சோதி 1 ரன், ஜோப்ரா ஆர்ச்சர் 6 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். உனத்காட் 26 ரன் (18 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் கிளீன் போல்டாக,  ராஜஸ்தான் ராயல்ஸ் 19 ஓவரில் 142 ரன் குவித்து ஆல் அவுட்டானது. அனுரீத் சிங் 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். கொல்கத்தா பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 4 ஓவரில் 20 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். ஆந்த்ரே ரஸ்ஸல், பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட், ஷிவம் மாவி, சுனில் நரைன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 143 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நைட் ரைடர்ஸ் களமிறங்கியது.

கொல்கத்தா, ராஜஸ்தான்  இரு அணிகளும் தலா 12 போட்டியில் விளையாடி 12 புள்ளிகள் பெற்று முறையே 3வது மற்றும் 4வது இடத்தில் இருந்ததால், இந்த போட்டியின் முடிவு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் 12 போட்டியில் 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ள நிலையில், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் 12 போட்டியில் தலா 10 புள்ளிகள் பெற்று 6வது மற்றும் 7வது இடத்தில் இருந்தாலும், அந்த அணிகளின் கடைசி 2 லீக் ஆட்டத்தின் முடிவும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை நிர்ணயிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சன்ரைசர்ஸ் ஐதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் ஏற்கனவே முன்னேறிவிட்ட நிலையில், அடுத்த 2 இடங்களைப் பிடிப்பதில் கடும் இழுபறி நிலவுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ModiSalmanDelhi

  சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இந்தியா வருகை...நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி: புகைப்படங்கள்

 • SuperSnowMoon2k19

  அதிக ஒளியுடனும், பூமிக்கு மிக அருகிலும் தெரிந்த சூப்பர் மூன்: ரம்மியமான அரிய நிகழ்வை கண்டு ரசித்த மக்கள்!

 • 20-02-2019

  20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • mallakamb_mumbai

  மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்

 • varanasi_modi123

  டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்