SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

3 மாணவர்கள் குடும்பத்துக்கு நிதி கொடுக்க வந்த தினகரனுக்கு எதிராக ரூ.20 காட்டி மக்கள் எதிர்ப்பு : ஆதரவாளர்களுக்கு அடி, உதை

2018-05-16@ 01:15:47

சென்னை: மாணவர்களின் குடும்பத்துக்கு நிதி கொடுக்க வந்த டிடிவி தினகரனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது  அவரது ஆதரவாளர்களுக்கு அடி, உதை விழுந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை, தண்டையார்பேட்டை-எண்ணூர் நெடுஞ்சாலையிலுள்ள  தனியார் பள்ளியில் பயிலும், 21 மாணவர்கள் கடந்த 23ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் புனேவுக்கு கல்வி சுற்றுலாவுக்காக அழைத்து செல்லப்பட்டனர்.  அப்போது அங்குள்ள ஒரு அணையில் குளித்தபோது, 3 மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இறந்த மாணவர்கள் ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்டவர்கள் என்பதால், தொகுதி எம்எல்ஏ டிடிவி தினகரன் நேற்று காலை, சென்றார். இந்திரா காந்தி  நகரை சேர்ந்த மாணவன் ரசாக், நேதாஜி நகரை சேர்ந்த சரவணக்குமார் மற்றும் நாவலர் குடியிருப்பை சேர்ந்த சந்தோஷ் ஆகியோரின் குடும்பத்துக்கு  தலா ரூ.1 லட்சம் நிதி உதவியை வழங்கினார். இதற்கிடையே டிடிவி தினகரன் வருகையை அறிந்து, 50க்கு மேற்பட்ட பெண்கள் இந்திராகாந்தி நகர்,  கருணாநிதி நகர் மற்றும் நேதாஜி நகர் பகுதிகளில் அவருக்கு எதிர்ப்பு காட்டும் வகையில் ரூ.20 ரூபாய் நோட்டுகளை கையில் ஏந்தியபடி  காத்திருந்தனர்.   

தகவலறிந்து ஆர்.கே.நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அங்கு கூடியிருந்த பெண்களை விரட்டினர். அப்போது, போலீசார் பெண்களை  தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த பெண்கள் போலீசுக்கு எதிராக கோஷம் எழுப்பி வாக்குவாதம் செய்தனர்.  எனவே பெண் போலீசார் வரவழைக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இதையடுத்து காசிமேடு ஜீவரத்தினம் சாலை  வழியாக டிடிவி தினகரன் வருவதை அறிந்ததும், 50க்கும் மேற்பட்டோர் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க, ரூ.20 நோட்டுகளுடன் காத்திருந்தனர். அப்போது,  டிடிவி தினகரன் ஆதரவாளர்களுடன் அவ்வழியாக வந்தார். அப்போது பெண்கள் ரூ.20 ரூபாய் நோட்டுகளை காட்டி கோஷமிட்டனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் பெண்களை பார்த்து அசிங்கமான வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.  இதையடுத்து, டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் 2 பேரை பெண்கள் மடக்கி பிடித்து, சரமாரியாக தாக்கினர். உடனே போலீசார் அவர்களை மீட்டு  காசிமேடு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அப்போது, சிங்கார வேலன் நகரை சேர்ந்த ஜெயந்தி என்ற பெண் தரக்குறைவாக பேசிய டிடிவி  தினகரன் ஆதரவாளர்களின் மீது, உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரளித்தார். இதற்கிடையே காசிமேடு சிஜி காலனியை சேர்ந்த  தமிழரசன் என்ற மீனவர் கடந்த 2 மாதத்திற்கு முன் போலீசார் விரட்டியதில், கடலில் தவறி விழுந்து இறந்தார். அவரது வீட்டுக்கு சென்ற டிடிவி  தினகரன் அவரது குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதி உதவியை வழங்கினார்.இதன் பிறகு டிடிவி

தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க  வலியுறுத்தி கமலஹாசன் அனைத்து கட்சி கூட்டம்  நடத்தவுள்ளார். எனக்கு அன்றைய  தேதியில் வேறு வேலை இருப்பதால்  கலந்துகொள்ள முடியவில்லை. நான்  மிரட்டும் தொனியில் பேசுவதாக,  அமைச்சர் ஜெயக்குமார் கூறுகிறார். தினமும்,  காலையில் எழுந்தவுடன் அவர்தான் பத்திரிகையாளர்களை சந்தித்து மிரட்டும்  தொனியில் பேசுகிறார்.  அவர் என்னதான் பேசினாலும் எங்களை ஒன்றும் செய்ய  முடியாது. சசிகலா வக்கீல் சார்பில் படத்தை, பெயரை பயன்படுத்தக்கூடாது என   திவாகரனுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. எனவே திவாகரன் குறித்து  பேசி, என்னுடைய நேரத்தையும், உங்களுடைய நேரத்தையும் நான்  வீணடிக்க  விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-10-2018

  20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • tirupathivavacha

  திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

 • kulasaidasaraeight

  வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

 • 18-10-2018

  18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • thaneerrr_kaari

  தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்