SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாரணாசியில் புதிதாக கட்டப்படும் மேம்பாலம் இடிந்து 18 பேர் பரிதாப பலி: இடிபாடுகளில் 50 பேர் சிக்கி படுகாயம்

2018-05-16@ 00:16:01

வாரணாசி: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் இடிந்து விழுந்ததில், 18 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இடிபாடுகளில் 50க்கும் மேற்பட்டோர் சிக்கி படுகாயமடைந்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியின் கன்டோன்மென்ட் ரயில் நிலையம் அருகே புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. அம்மாநில மேம்பால கட்டுமான நிறுவனம் சார்பில் கடந்த டிசம்பரில் மேம்பாலப் பணி தொடங்கியது. தற்போது தூண்கள் அமைக்கப்பட்டு, அதன் மீது ராட்சத சிலாப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று மாலை திடீரென மேம்பாலத்தின் ஒருபகுதி இடிந்து, ராட்சத சிலாப்புகள் சரிந்தன. அவை, மேம்பாலத்தின் கீழே சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது விழுந்தது. இதில், மினி பஸ், 4 கார்கள், இரு சக்கர வாகனம், ஆட்டோ ஆகியவை அப்பளம் போல் நொறுங்கின.

வாகனங்களில் இருந்த 18 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். மேலும் பாலத்தின் அடியில் இருந்த கட்டுமான தொழிலாளர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியதாக கூறப்படுகிறது. தகவலறிந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்றிரவு வரை 18 சடலங்களில் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது. இடிபாடுகளில் பலரும் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 12 ராட்சத கிரேன்கள் மூலம் இடிபாடுகளை அகற்றும் பணி தொடர்ந்து நடக்கிறது.

விபத்து குறித்து உடனடியாக விசாரணை குழுவை அமைத்துள்ள அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், 48 மணி நேரத்தில் அறிக்கை தர உத்தரவிட்டுள்ளார். மேலும், விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் நிவாரண  நிதி வழங்குவதாக ஆதித்யநாத் அறிவித்துள்ளார். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

பிரதமர் இரங்கல்
விபத்து தொடர்பாக பிரதமர் மோடி டிவிட்டரில் விடுத்த இரங்கல் செய்தியில், ‘வாரணாசியில் மேம்பாலம் இடிந்து ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் பெரும் வேதனையை தருகிறது. விபத்து தொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத்தை தொடர்பு கொண்டு, நிலைமையை கேட்டறிந்தேன். உபி அரசு உன்னிப்பாக கண்காணித்து மீட்பு பணிகளை துரிதமாக செய்து வருகிறது. விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றார். வாரணாசி பிரதமர் மோடியின் சொந்த மக்களவை தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, காங்கிரஸ் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-10-2018

  20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • tirupathivavacha

  திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

 • kulasaidasaraeight

  வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

 • 18-10-2018

  18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • thaneerrr_kaari

  தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்