SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நலிவின் பிடியில் மகாத்மா தங்கிய திருச்செங்கோடு காந்தி ஆசிரமம்: கண்டுகொள்ளுமா அரசு?

2018-05-15@ 10:34:34

திருச்செங்கோடு: ஒரு காலத்தில் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்திய திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் தற்போது நலிவின் பிடியில் சிக்கியுள்ளது.  நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் 1925ம் ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி, மூதறிஞர் ராஜாஜியால் துவக்கப்பட்டது காந்தி ஆசிரமம். இதற்கான நிலத்தை ரத்தினசபாபதி என்ற ஜமீன்தார் இலவசமாக வழங்கினார். ஆசிரமத்தை தந்தை பெரியார் திறந்து வைத்தார். தேசப்பிதா மகாத்மா காந்தியும் இங்கு வந்து 2முறை தங்கியிருந்து சென்றுள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாசறையாகவும், மது ஒழிப்பு மையமாகவும் செயல்பட்ட காந்தி ஆசிரம கொள்கைகளைப் பரப்ப மூதறிஞர் ராஜாஜி இந்த ஆசிரமத்தில் சுமார் 10 ஆண்டுகள் தங்கி சேவை செய்தார். மதுவை ஒழிக்க மக்களிடம் பிரசாரம் செய்ய மாட்டு வண்டியில் பெட்ரோமாக்ஸ்  லைட்டுகளுடன் கிராமம் கிராமமாக ராஜாஜி சென்றார்.

இதற்காக தமிழ் மற்றும் ஆங்கில இதழ்களை அவர் வெளியிட்டு வந்தார். இங்கு, டிபானே என்ற ஆங்கிலப் பெண் மருத்துவரால் தொழுநோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் வேலைவாய்ப்பின்றி கங்காணிகள் மூலம் இலங்கை, மலேசியா போன்ற வெளி தேசங்களுக்கு சென்று இன்னல்படும் மக்களை தடுத்து அவர்களுக்கு பஞ்சைக் கொடுத்து நூற்க செய்து நூலை காந்தி ஆசிரமம் வாங்கிக் கொண்டது. இதனால் பல்லாயிரம் பேர் பசி  பட்டினியிலிருந்து காப்பாற்றப்பட்டனர்.

அதேபோல் கிராமியத்தொழில்களை ஊக்கப்படுத்தி பொருளாதாரத்தை மேம்படுத்தியதிலும் திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் முக்கிய பங்கு வகித்தது. உள்ளூர் மூலப்பொருட்களை கொண்டு உள்ளூர் மக்களால் உற்பத்தி செய்யப்பட்டு அவை உள்ளூர் மக்களால் வாங்கப்படுவதே இதன் முக்கிய அம்சமாகும். இலவங்காய் உடைத்தல், கதர் தயாரித்தல், ஊதுபத்தி செய்தல், இலவம்பஞ்சு கொண்டு மெத்தை, தலையணை தயாரித்தல் போன்ற கிராமியத்தொழில்கள் மூலம் ஆயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.
 
உள்ளூர் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கிறது. கணவனை இழந்த பெண்கள்,  ஆதரவற்றோர் கிராமியத்தொழில்கள் மூலம் பொருள் ஈட்டி சொந்தக்காலில் நிற்கின்றனர். காந்தி ஆசிரமத்தில் வேலை செய்யும் பணியாளர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான சம்பளம் என்பதும் சிறப்பம்சம். இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்று காந்தியடிகள் கூறினார். அதனை இன்றுவரை மெய்ப்பித்து வருகிறது  திருச்செங்கோடு காந்தி ஆசிரமம். ஆனால் ஜிஎஸ்டி, அரசின் பாராமுகம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் காந்தி ஆசிரமம் மெல்ல, மெல்ல நலிந்து வருகிறது என்கின்றனர் மூத்த நிர்வாகிகள்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘‘கதர்மானியம் முறையாக வழங்காதது, மூலப்ெபாருட்கள் வாங்க போதிய நிதியின்மை என்று பல்வேறு காரணங்களால் காந்தி ஆசிரம செயல்பாடுகளில் வேகம் குறைந்தது. அதேபோல், இங்கு தயாரிக்கப்படும் சோப்பு உள்ளிட்ட பெரும்பாலான பொருட்கள் முன்பு, ராணுவத்திற்கு மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டது. தற்ேபாது அது முழுமையாக விலக்கப்பட்டுள்ளது. இவை அனைத்திற்கும் மேலாக காந்தி ஆசிரம பொருட்களுக்கும் ஜிஎஸ்டி விதித்திருப்பது பெருத்த அபத்தமாக உள்ளது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் ஆசிரமம் நலிந்து வருகிறது. எனவே தமிழக அரசு, சிறப்பு கவனம் செலுத்தி நலிவின் பிடியில் இருந்து ஆசிரமத்தை மீட்டு புத்துயிர் ஊட்ட வேண்டும்’’ என்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 16-08-2018

  16-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-08-2018

  15-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • chinaearthquake

  சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

 • meteorshower

  ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

 • indonesiaafterquake

  இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்