SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இயற்கையின் சீற்றத்தால் சீர் குலைந்த அவலம் : யானை ஊடுருவலை தடுக்கும் அகழிகள் மீண்டும் தோண்டப்படுமா?

2018-05-12@ 21:39:35

பூதப்பாண்டி: மேற்கு தொடர்ச்சி மலையில் யானை, புலி, கரடி, காட்டெருமை என்று கொடூரமான வன விலங்குகள் அதிகம் உள்ளன. இவை அவ்வப்போது ஊருக்குள் புகுவது வாடிக்கையாகி விட்டது. குறிப்பாக குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்கள் பலாப்பழ சீசன் ஆகும். இந்த நேரங்களில்தான் யானைகள் அதிகமாக ஊருக்குள் படையெடுப்பது வாடிக்கை. ஆனால் இந்த முறை வழக்கத்துக்கு மாறாக இப்போதே யானைகள் கூட்டம் கூட்டமாக ஊருக்குள் படையெடுக்க தொடங்கி விட்டன. கடந்த ஒருவாரத்துக்கு முன்பு 2 யானைகள் திடீரென காளிகேசம் வனபகுதிக்குள்  புகுந்தன. இதை கண்ட பால் வெட்டும் தொழிலாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் யானையை காட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து தொழிலாளர்கள் பட்டாசுகள் வெடித்து யானைகளை காட்டுக்குள் விரட்டினர். இருப்பினும் தினசரி பால் வெட்ட செல்லும் தொழிலாளர்கள் ஒருவிதமான பயத்துடனேயே தினசரி வேலைக்கு சென்று வருகின்றனர்.

குமரி மாவட்டத்தை பொறுத்தவரை கீரிப்பாறை, காளிகேசம், பரளியாறு, மணலோடை, சிற்றாறு, குத்தியாறு, மருதம்பாறை, மயிலாறு, கல்லாறு ஆகிய 9 டிவிசன்களில் அரசு ரப்பர் தோட்டங்கள் உள்ளன. இங்கு ஆண்கள், பெண்கள் என்று சுமார் 3 ஆயிரம் பேர் வேலை பார்க்கின்றனர். தினசரி இவர்கள் அதிகாலையிலேயே வேலைக்கு புறப்பட்டு விடுகின்றனர். காலை 5 மணிக்கு வேலையை தொடங்கி விடுகின்றனர்.  அதிகபட்சமாக 12 மணிக்கெல்லாம் வேலையை முடித்து விட்டு மறுபடியும் வீடு திரும்பி விடுகின்றனர். இந்த நிலையில் கடந்த வாரத்தில் யானைகளை பார்த்ததில் இருந்து தொழிலாளர்கள் கடும் அச்சத்தில் இருக்கின்றனர். இது குறித்து பால் வெட்ட செல்லும் தொழிலாளர்கள் கூறியது: வனவிலங்குகளுக்கு தங்கு தடையின்றி காடுகளில் குடிநீர் கிடைக்க வேண்டும் என்பதற்காக கடந்த 5 வருடங்களுக்கு முன்பு காடுகளுக்குள் ஏராளமான தொட்டிகள் கட்டப்பட்டன. ராட்சத மரங்கள் முறிந்து விழுந்து பல தொட்டிகள் சேதம் அடைந்தும், சுக்கு நூறாக உடைந்தும் போய்விட்டன. இவற்றை சரி செய்ய வனத்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறைந்த பட்சம் குடிநீர்தொட்டிகளின் மேல் கிடக்கும் மரங்களை கூட அகற்ற முன் வரவில்லை. இதனால் மழை காலங்களில் தண்ணீர் தேங்க வழியில்லாமல் வீணாக செல்கிறது. தற்போது கோடை காலம் என்பதால் வனவிலங்குகளுக்கு தேவையான குடிநீர் கிடைப்பதில்லை. ஆகவே அவை தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிக்குள் இடம் பெயர தொடங்கி விட்டது.

இதேபோல் 9 டிவிசன்களிலும் உள்ள காடுகளுக்குள் தனியாருக்கு சொந்தமான தோட்டங்கள் அதிகமாக உள்ளன. இந்த தோட்டங்களில் பெரும்பாலும் சேலம், தர்மபுரி, ஈரோடு பகுதியை சேர்ந்தவர்கள்தான் அதிகமாக வேலை பார்க்கின்றனர்.  இவர்கள் அனைவரும் பெரும்பாலும் 2 மற்றும் 3 மாதங்கள் தங்கியிருந்து பணியாற்றுபவர்கள். தற்போது புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமைகளின் அட்டகாசத்தால் வெளி மாவட்ட தொழிலாளர்கள் வேலைக்கு வர மறுக்கின்றனர். இது தனியார் தோட்ட முதலாளிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதே போல் ஓகி புயலால் தனியார் எஸ்டேட்டில் உள்ள பணபயிர், மரங்கள் வேரோடு சாயந்தன. இவற்றை அகற்ற வனத்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும். ஆறு மாதமாகியும் வனத்துறையினர் இதற்கான அனுமதியை கொடுக்கவில்லை. ஆகவே தனியார் தொழிலாளர்களை தற்போது பார்ப்பது அரிதாகிவிட்டது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இருந்து யானைகள் காளிகேசம் உள்பட 9 டிவிசன் பகுதிகளுக்குள்ளும் ஊடுருவுவதை தடுக்கும் வகையில் மலை பகுதியை சுற்றிலும் கடந்த 5 வருடத்துக்கு முன்பு ராட்சத அகழிகள் வெட்டப்பட்டன. இந்த அகழிகள் 20 அடி ஆழத்திலும் 10 அடி அகலத்திலும் பல கிலோ மீட்டருக்கு சுற்றி வெட்டப்பட்டன. இதனால் யானைகள் ஊருக்குள் வருவது தடுக்கப்பட்டது. தற்போது வெட்டப்பட்ட அகழிகள் அனைத்தும்  மூடப்பட்டு விட்டது. அகழிகள் இருந்த பகுதி அனைத்தும் சமன் செய்யப்பட்ட பகுதி போல் காட்சியளிக்கிறது. ஆனால்  அவற்றை மீண்டும் தோண்டி பராமரிக்க வேண்டும் என்பதில் வனத்துறையினர்  எந்தவித கவனமும் செலுத்தியதாக தெரியவில்லை. ஆகவே இயற்கையின் சீற்றத்தால்  மூடிய அகழிகளை மீண்டும் தோண்ட வேண்டும். அது மட்டுமில்லாமல் மீண்டும் அவை  சேதம் அடைவதை தவிர்க்கும் வகையில் தடுப்பு சுவர் கட்டி பாதுகாக்க வேண்டும் என்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • annauniv

  அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

 • jammukashmir

  ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு!

 • TulipflowerDay

  நெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

 • womesrally

  வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

 • turkeycamelfight

  2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்