SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தென்மாவட்ட வளம்... அழிக்குது கருவேலம்

2018-04-16@ 10:01:23

நாளுக்கு நாள் உலகம் மாசுபட்டு வருகிறது. இதனால் ஒட்டுமொத்த உலகமுமே வெப்பமயமாதல் அச்சத்தில் ‘மரங்களை நடுங்கள்’ என்று உச்சகட்ட கோஷங்களை எழுப்பி வருகின்றன. ஆனால், மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் சமீப காலமாக ‘மரங்களை வெட்டுங்கள்’ என்றொரு குரலே உரக்க ஒலித்து வருகிறது. ஆம், மழை பெற்று பசுமை நிறைவதற்காக மரங்களை வளர்க்கச் சொல்லும் நிலையில், கருவேல மரங்களை மட்டும் வெட்டி அழிக்க சொல்லி வலியுறுத்தப்பட்டு வருகிறது. தென்மாவட்டங்களில் கருவேலமரங்களை உரியவர்களுடன், உள்ளாட்சி அமைப்புகளும் இணைந்து அழித்தொழித்திட ஐகோர்ட் கிளையும் உத்தரவிட்டது. அந்த அளவிற்கு தென்மாவட்ட மக்கள் வாழ்வில், இந்த மரம் அப்படி என்ன கொடூரத்தை கொடுக்கிறது?

நச்சு மரம்

அமெரிக்காவில் உள்ள உலக தாவரவியல் பூங்காவில் ‘வளர்க்கக் கூடாத நச்சுமரங்கள்’ என்றொரு தனிப்பட்டியல் வைத்திருக்கின்றனர். இதில் முன்னால் முகம் நீட்டி நம்மூரின் கருவேல மரத்தின் பெயர்தான் நிற்கிறது. சுட்டெரிக்கிற, பாளம்பாளமாக தரையை விரித்தெடுக்கிற எவ்வகை வறட்சியிலும் இம்மரம் நன்றாக வளர்கிறது. மழையில்லையே, நிலத்தடியில் நீரில்லையே என்ற ஒரு கவலையும் இம்மரத்திற்கு இல்லவே இல்லை.

எங்கிருந்தாலும் உறிஞ்சும்

பூமியின் அடி ஆழம் வரை தன் வேர்களை அனுப்பி நீர் எங்கிருந்தாலும் உறிஞ்சி எடுத்து வந்து உயிர் பிழைக்கும் வலிமையை இந்த கருவேல மரம் கொண்டிருக்கிறது. இம்மரத்தின் இச்செயல்பாட்டினால்தான் தென்மாவட்ட பகுதிகள் அனைத்தும், நிலத்தடி நீரற்ற கட்டாந்தரையாகி வருகின்றன. இன்னும் நிலத்திற்கு கீழே நீரின்றி போனாலும் இம்மரங்கள் தன்னைத் தழுவி செல்கிற காற்றின் ‘கொஞ்சூண்டு’ ஈரப்பதத்தையும் இழுத்துக் கொள்ளும் வலிமை கொண்டிருக்கிறது.

வெப்பக்காற்று பரவல்


பொதுவாக, ‘மேகத்தில் குளிர்ந்த காற்று பட்டு மழை பெய்யும்’ என்கிறது அறிவியல். ஆனால் இந்த கருவேல மரங்கள் காற்றின் ஈரப்பதத்தை முழுமையாக உறிஞ்சி எடுத்து விடுவதால், மேகத்தை குளிர்ந்த காற்று உரச வாய்ப்பின்றி மழை பெய்வதில்லை. ஊர் முழுக்க அனல் காற்று மட்டுமே வீசி, கோடையின் வறட்சிக் கொடுமையை, இன்னும் பன்மடங்கிற்கு அதிகரித்து, மக்கள் வாழ்க்கையை படு பரிதாப நிலைக்கு கொண்டு சேர்த்து விடுகிறது. இந்த கருவேல மரங்களால்தான் ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்கள் முழுமையாக மழைப்பொழிவை இழந்து வருவது ஆய்வுகளாலும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

கால்நடைகள் கன்று ஈனாது


இன்னும் ஒருபடி மேலேபோய் கருவேல மரத்திற்கு கீழே கால்நடைகளை கட்டி வைத்தால், அந்த கால்நடைகள் மலட்டுத்தன்மைக்கு ஆளாகின்றன என்கின்றனர். இதையும் மீறி கால்நடைகள் கன்று ஈன்றால் அது ஊனமாகவே மாறுகிறது. இந்த கருவேல மரத்தின் அருகே பயன்தரும் பிற மரமோ, செடி கொடிகளோ வளர்வதும், இதில் பறவைகள் கூடு கட்டி வாழ்வதும் குறைவுதான் எனக்கண்டறியப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதிப்பு

‘வேலிக்காத்தான் மரங்கள்’ என்று கிராமங்களில் அழைக்கப்படுகிற இந்த கருவேல மரங்கள் அளவில் ஆக்ஸிஜனை குறைத்தும், அதிகமாக கரியமிலவாயுவை உற்பத்தி செய்தும் சுற்றுச்சூழலை நச்சு மண்டலமாக மாற்றியும் வருகின்றன. இன்னும் இம்மரங்கள் மனித மனங்களில் ‘வன்மம்’ விதைக்கும் என்று மனோதத்துவ நிபுணர்களும் எச்சரிக்கின்றனர். வாழ்வியல் நாட்டங்களைக் குறைத்து, மனதிற்குள் வெறுமை நிறைத்து ஒரு ஈடுபாடற்ற நிலையைத் தருவதாகவும் மனநல டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

மரம் கூட சாபம்தான்


மக்களுக்கு பயன்தரும் நம்பிக்கையில் 1962ம் ஆண்டு வெளிநாட்டில் விதைகள் பெற்று, தென்மாவட்ட பகுதிகளில் ஹெலிகாப்டர் கொண்டு இந்த கருவேல மரத்து விதைகள் விசிறியடிக்கப்பட்டன என்கின்றனர். பொதுவாக வளர்க்கும் மரங்கள் மக்களுக்கான வரங்கள் என்பார்கள். ஆனால், தென்மாவட்டத்தில் வளர்ந்திட்ட இம்மரங்கள் ஒரு ‘சாபமாக’ மாறிப்போயிருக்கிறது.

கருவேல மரத்தால் காலியான விவசாயம்: விவசாயிகள் குமுறல்

தென்மாவட்ட விவசாயிகள் கூறும்போது, ‘‘இந்த சீமைக் கருவேல மரங்களை வெட்டி எடுத்து வந்து கரிமூட்டமாக, செங்கல் சூளை, வீட்டுச் சமையல் எரிபொருளாக, வயல்வெளிக்கு வேலியாக பயன்படுத்துகிறோம். இதற்காகவே மாவட்டத்தில் இந்த மரங்கள் வளர்ந்தால் அதை அகற்றும் நடவடிக்கைகளில் இறங்கவில்லை. ஆனால், இன்றைக்கு இந்த மரங்களால்தான் மழை இன்றி மாவட்டங்களில் விவசாயம் முழுமையாகப் பொய்த்துப் போயிருக்கிறது. கருவேல மரங்களை வெட்டி அகற்ற ஐகோர்ட் மதுரை கிளையும் உத்தரவிட்டுள்ளது வரவேற்பிற்குரியது. ஏற்கனவே விவசாய வருவாயின்றி தவித்து வருகிற எங்களால், செலவிட்டு நிலங்களில் கருவேல மரங்களை அகற்றுதல் மிகுந்த சிரமத்திற்குரியதாக உள்ளது. அரசு சிறப்புத் திட்டங்கள் மூலம் தனி நிதி ஒதுக்கி இந்த மரங்களை முழுமையாக அகற்றி, வரும் காலத்தில் விவசாயத்தை செழிக்க வைத்து, விவசாயிகளான எங்களைக் காப்பாற்ற வேண்டும்’’ என்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 16-12-2018

  16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • lisbon_tramp11

  லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

 • 15-12-2018

  15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • AmazonIllegalMining

  அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

 • chinasnowfall

  கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்