SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காமன்வெல்த் விளையாட்டு நிறைவு : கடைசி நாளில் இந்தியாவுக்கு 1 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம்

2018-04-16@ 00:06:41

கோல்டு கோஸ்ட்: காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடர் கோலாகல விழாவுடன் நேற்று நிறைவடைந்தது. கடைசி நாளான நேற்று இந்தியாவுக்கு 1 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலப்பதக்கங்கள் கிடைத்தன. பத்கப்பட்டியலில் இந்தியா 26 தங்கம் உட்பட 66 பதக்கங்களுடன் 3ம் இடம் பிடித்தது. இங்கிலாந்து ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகள் ஒன்றிணைந்து காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடரை 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்துகின்றன. இந்தாண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டு ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் கடந்த 5ம் தேதி தொடங்கியது. முன்னதாக, 4ம் தேதி வண்ணமயமான துவக்க விழா நிகழ்ச்சிகள் நடந்தன.
அசத்திய  இந்திய வீரர்கள்:

இம்முறை 71 நாடுகளைச் சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்றனர். மொத்தம் 18 விளையாட்டுகளில் 275 பிரிவின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தியாவின் சார்பில் 115 வீரர்கள், 103 வீராங்கனைகள் என 218 பேர் பங்கேற்றனர். 17வது முறையாக காமன்வெல்த் விளையாட்டில் பங்கேற்கும் இந்தியா இம்முறை அதிக பதக்கங்களை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றார் போல், போட்டியின் முதல் நாளில் இருந்தே நமது வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை குவிக்கத் தொடங்கினர்.

தங்கம் வென்ற சதீஷ்குமார்:

ஆண்களுக்கான பளுதூக்குதல் 56 கிலோ பிரிவில் குருராஜா வெள்ளி வென்று இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்று தந்தார். மகளிர் பளுதூக்குதல் 48 கிலோ பிரிவில் மீராபாய் சானு அபாரமாக செயல்பட்டு, காமன்வெல்த் சாதனையுடன் இந்தியாவுக்கு முதல் தங்கத்தை பெற்று தந்தார். ஆண்கள் பளுதூக்குதல் 77 கிலோ பிரிவில் தமிழக வீரர் வேலூரைச் சேர்ந்த சதீஷ்குமார் தங்கம் வென்று சாதித்தார். பளுதூக்குதலைத் தொடர்ந்து துப்பாக்கி சுடுதல், பேட்மின்டன், டேபிள் டென்னிஸ், மல்யுத்தம், குத்துச்சண்டை உள்ளிட்ட விளையாட்டுகளில் இந்திய வீரர்கள் பிரமாதப்படுத்தினர்.

புதிய சாதனைகள்:

பேட்மின்டன் கலப்பு குழு போட்டியில் இந்தியா முதல் முறையாக தங்கம் வென்று சாதனை படைத்தது. இதே போல டேபிள் டென்னிஸ் மகளிர் குழு பிரிவிலும் நமது வீராங்கனைகள் முதல் முறையாக தங்கம் வென்றனர். டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை மனிகா பத்ரா படைத்தார். மல்யுத்தத்தில் சுஷில் குமார், தொடர்ந்து 3வது முறையாக தங்கம் வென்று சாதித்தார். குத்துச்சண்டையில் நட்சத்திர வீராங்கனை மேரி கோம் தங்கம் வென்று எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தார்.

ஹாக்கியில் சோகம்:

ஆனால், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹாக்கியில் ஆண்கள், மகளிர் இரு அணிகளும் பதக்கம் வெல்லத் தவறி ஏமாற்றமளித்தன. அதே போல, தடகளத்தில் நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்), ஷீமா புனியா (வட்டு எறிதல்), நவ்ஜீத் தில்லான் (வட்டு எறிதல்) தவிர மற்ற இந்திய வீரர், வீராங்கனைகள் தோல்வியுடன் திரும்பினர். போட்டியின் 10ம் நாளான நேற்று முன்தினம் இந்தியா 8 தங்கம் உட்பட 17 பதக்கங்களை குவித்தது.

கடைசி நாளில் சாய்னா தங்கம்:

இந்நிலையில், 11வது மற்றும் போட்டியின் கடைசி நாளில் நேற்றும் இந்திய வீரர், வீராங்கனைகள் அசத்தத் தவறவில்லை. பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் சாய்னா நெஹ்வால், ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற பி.வி.சிந்துவை வீழ்த்தி தங்கம் வென்றார். சிந்து வெள்ளியுடன் ஆறுதல் அடைந்தார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காந்த் வெள்ளியும், ஆண்கள் இரட்டையர் பிரிவில் ரான்கிரெட்டி-சிராக் சந்திரசேகர் ஷெட்டி வெள்ளியும், ஸ்குவாஷ் மகளிர் இரட்டையர் பிரிவில் தமிழக வீராங்கனைகள் ஜோஷ்னா சின்னப்பா-தீபிகா பலிக்கல் ஜோடி வெள்ளியும், டேபிள் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழக வீரர் சரத் கமல் வெண்கலமும், கலப்பு இரட்டையரில் தமிழக வீரர் சத்யன்-மனிகா பத்ரா ஜோடி வெண்கலமும் வென்றனர்.

இந்தியா 3ம் இடம்:

இதன் மூலம் பதக்கப்பட்டியலில் இந்தியா 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் என 66 பதக்கங்களுடன் 3ம் இடத்தை பிடித்தது. போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியா 80 தங்கம், 59 வெள்ளி, 59 வெண்கலம் என 198 பதக்கங்களுடன் முதல் இடத்தையும், இங்கிலாந்து 45 தங்கம், 45 வெள்ளி, 46 வெண்கலம் என 136 பதக்கங்களுடன் 2வது இடத்தையும் பிடித்தன.

கோலாகல நிறைவு:

போட்டிகள் முடிவடைந்ததைத்தொடர்ந்து, நேற்று இரவு நிறைவு விழா கோலாகலமாக நடந்தது. அணிவகுப்பில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தேசியக்கொடியை ஏந்தினார். பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் வண்ண மயமான வாணவேடிக்கையுடன், 21வது காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடர் நிறைவடைந்தது. அடுத்ததாக 2022ல் இங்கிலாந்தின் பர்மிங்காமில் காமன்வெல்த் விளையாட்டு நடக்க உள்ளது.

பதக்கப்பட்டியல்
கடந்த  2014ல் கிளாஸ்கோவில் நடத்த காமன்வெல்த் விளையாட்டில் 64 பதக்கத்துடன்,  பதக்கப்பட்டியலில் 5ம் இடம் பிடித்த இந்திய அணி இம்முறை 66 பதக்கங்களுடன்  3ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இம்முறை 71 நாடுகள் போட்டியில் பங்கேற்றன.
 
பதக்கப்பட்டியலில் டாப்-10 அணிகள் வருமாறு:

ரேங்க்    நாடு    தங்கம்    வெள்ளி    வெண்கலம்    மொத்தம்

1     ஆஸ்திரேலியா    80    59     59    98

2    இங்கிலாந்து    45    45    46     136

3    இந்தியா                        26     20     20      66

4     கனடா                       15     40     27       82

5    நியூசிலாந்து    15    16     15    46

6     தென் ஆப்ரிக்கா    13               11     13     37

7     வேல்ஸ்        10                 12     14      36

8    ஸ்காட்லாந்து     9    13     22    44

9    நைஜீரியா     9     9       6      24

10    சைப்ரஸ்         8    1      5                    14

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்