SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

21வது காமன்வெல்த் போட்டி நிறைவு.....66 பதக்கங்களுடன் இந்தியா 3வது இடம்: கடைசி நாளில் 7 பதக்கங்களை அள்ளியது

2018-04-15@ 17:17:57

கோல்டு கோஸ்ட்: 21வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இன்றுடன் நிறைவடைந்தது. இதில், 66 பதக்கங்களுடன் இந்தியா 3வது இடம் பிடித்து அசத்தியது. கடைசி நாளான இன்று மட்டும் இந்தியா 7 பதக்கங்களை வென்றது. பிரிட்டன் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகள் பங்கேற்கும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள், 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி 21வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள், ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில், கடந்த 4ம் தேதி தொடங்கின. இதில், 71 நாடுகளை சேர்ந்த 4,500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

 இந்தியா சார்பில் 15 விளையாட்டுகளில் 218 பேர் பங்கேற்றனர். காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளின் வண்ணமயமான தொடக்க விழா மட்டும் 4ம் தேதி நடைபெற்றது. 5ம் தேதி முதல்தான் போட்டிகள் நடத்தப்பட்டன. முதல் நாள் முதலே ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் மாறி மாறி பதக்கங்களை குவித்தன. அதற்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பது போல், இந்தியாவும் பதக்கங்களை வென்று கொண்டே வந்தது.

இதனிடையே 11வது நாள் போட்டிகள் இன்று காலை அரங்கேறின. வழக்கம்போல இன்றும் இந்தியா பதக்கங்களை குவித்தது. இன்று ஒரே நாளில் 1 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை இந்தியா வென்றது. டேபிள் டென்னிஸ்: டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு வெண்கல பதக்கத்துக்கான போட்டியில், சத்யன் ஞானசேகரன்-மாணிகா பத்ரா ஜோடி, சரத் கமல்-மவுமா தாஸ் ஜோடியை எதிர்கொண்டது.

இவர்கள் அனைவரும் இந்தியாவை சேர்ந்தவர்கள். இதில், 11-6, 11-2, 11-4 என்ற கணக்கில், சத்யன் ஞானசேகரன்-மாணிகா பத்ரா ஜோடி எளிதாக வெற்றி பெற்று, வெண்கல பதக்கத்தை கைப்பற்றியது. நடப்பு காமன்வெல்த் போட்டிகளில் மாணிகா பத்ரா வெல்லும் 4வது பதக்கம் இதுவாகும். முன்னதாக மகளிர் அணி மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவுகளில் தங்க பதக்கங்கள், மகளிர் இரட்டையர் பிரிவில் வெள்ளி பதக்கம் என 3 பதக்கங்களை மாணிகா பத்ரா வென்றிருந்தார். கலப்பு இரட்டையர் பிரிவில், அவரது பார்ட்னரான சத்யன் ஞானசேகரன் சென்னையை சேர்ந்தவர்.

நடப்பு காமன்வெல்த் போட்டிகளில், அவர் வெல்லும் 3வது பதக்கம் இதுவாகும். முன்னதாக சரத் கமலுடன் இணைந்து, ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளி பதக்கத்தையும், ஆண்கள் அணிகள் பிரிவில் தங்க பதக்கத்தையும் அவர் வென்றிருந்தார். இதன்பின் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு வெண்கல பதக்கத்துக்கான போட்டியில், இந்தியாவின் சரத் கமல்-இங்கிலாந்தின் சாமுவேல் வாக்கர் பலப்பரீட்சை நடத்தினர்.

இதில், 11-7, 11-9, 9-11, 11-9 என்ற கணக்கில், சரத் கமல் வெற்றி பெற்று, வெண்கல பதக்கத்தை கைப்பற்றினார். 35 வயதாகும் சரத் கமலும் சென்னையை சேர்ந்தவர்தான். நடப்பு காமன்வெல்த் போட்டிகளில், அவரும் தனது 3வது பதக்கத்தை வென்றுள்ளார். முன்னதாக ஆண்கள் அணிகள் பிரிவில் தங்க பதக்கத்தையும், ஆண்கள் இரட்டையர் பிரிவில், சத்யன் ஞானசேகரனுடன் இணைந்து வெள்ளி பதக்கத்தையும் அவர் கைப்பற்றியிருந்தார்.

பேட்மின்டன்: ரசிகர்களின் உச்சகட்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில், பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டி நடைபெற்றது. இதில், சாய்னா நெஹ்வால்-பி.வி.சிந்து பலப்பரீட்சை நடத்தினர். இருவருமே இந்தியாவை சேர்ந்தவர்கள்தான். இதனால் இந்த போட்டியில், இந்தியாவுக்கு தங்கம், வெள்ளி பதக்கங்கள் ஏற்கனவே உறுதியாகி விட்டன. எனினும் தங்க பதக்கம் வெல்லப்போவது யார்? என்ற எதிர்பார்ப்புடன் போட்டி அரங்கேறியது.

இதில், 21-18, 23-21 என்ற நேர் கேம் கணக்கில், சாய்னா நெஹ்வால் வெற்றி பெற்று தங்க பதக்கத்தை கைப்பற்றினார். ேதால்வியடைந்த பி.வி.சிந்து, வெள்ளி பதக்கத்துடன் திருப்தியடைந்து கொண்டார். நடப்பு காமன்வெல்த் போட்டிகளில், சாய்னா நெஹ்வால் வெல்லும் 2வது தங்க பதக்கம் இதுவாகும். முன்னதாக கலப்பு அணிகள் பிரிவிலும் சாய்னா நெஹ்வால் அடங்கிய இந்திய அணி தங்க பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்திருந்தது.

இதன்பின் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில், இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த்-மலேசியாவின் லீ சோங் வெய் பலப்பரீட்சை நடத்தினர். இதில், 19-21, 21-14, 21-14 என்ற செட் கணக்கில், லீ சோங் வெய் வெற்றி பெற்று, தங்க பதக்கத்தை கைப்பற்றினார். இந்த போட்டி ஒரு மணி நேரம் 7 நிமிடங்கள் நீடித்தது. தோல்வியடைந்த கிடாம்பி ஸ்ரீகாந்த்க்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது. நடப்பு காமன்வெல்த் போட்டிகளில், கிடாம்பி ஸ்ரீகாந்த் வெல்லும் 2வது பதக்கம் இதுவாகும். முன்னதாக கலப்பு அணிகள் பிரிவில் அவர் தங்க பதக்கம் வென்றிருந்தார். இதன் இறுதி போட்டியில், மலேசியாவை வீழ்த்திதான் இந்திய கலப்பு அணி தங்க பதக்கம் வென்றது. அப்போது லீ சோங் வெய்யை, கிடாம்பி ஸ்ரீகாந்த் வீழ்த்தியிருந்தார்.

ஆனால் இன்று அது நடக்கவில்லை. முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து, லீ சோங் வெய் வென்று விட்டார். இதன்பின் ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதி போட்டி நடைபெற்றது. இதில், இந்தியாவின் சாத்விக் ராங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, 21-13, 21-16 என்ற கணக்கில், பிரிட்டனின் மார்கஸ் எலைஸ்-கிறிஸ் லாங்கிரிகேட் ஜோடியிடம் தோல்வியடைந்தது. இதனால் இந்திய ஜோடிக்கு வெள்ளி பதக்கமே கிடைத்தது.

ஸ்குவாஸ்: ஸ்குவாஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவு இறுதி போட்டியில், இந்தியாவின் தீபிகா பல்லிகல்-ஜோஸ்னா சின்னப்பா ஜோடி, நியூசிலாந்தின் ஜோலே கிங்-அமண்டா லாண்டர்ஸ் முர்பி, ஜோடியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில், 9-11, 8-11 என இந்திய ேஜாடி தோல்வியடைந்தது. இதனால் இந்திய ஜோடிக்கு வெள்ளி பதக்கமே கிடைத்தது. இந்த போட்டி வெறும் 21 நிமிடங்களில் முடிவடைந்தது. தீபிகா பல்லிகல்-ஜோஸ்னா சின்னப்பா ஆகியோரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள்தான். இதில், தீபிகா பல்லிகல், கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே காமன்வெல்த் விளையாட்டு திருவிழா இன்று மதியத்துடன் நிறைவு பெற்றது. 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் என மொத்தம் 66 பதக்கங்களுடன், பதக்க பட்டியலில் இந்தியா 3வது இடத்தை பிடித்தது. இந்திய நேரப்படி இன்று மதியம் 3 மணியளவில், கர்ராரா ஸ்டேடியத்தில் நிறைவு விழா நிகழ்ச்சிகள் தொடங்கின. தொடக்க விழா நிகழ்ச்சிகளும் அங்குதான் நடைபெற்றன.

நிறைவு விழா அணிவகுப்பில், பாக்சிங் வீராங்கனை மேரி கோம், இந்திய மூவர்ண கொடியை ஏந்தி சென்றார். தொடக்க விழா அணிவகுப்பில், பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து, இந்திய மூவர்ண கொடியை ஏந்தி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 22வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள், இங்கிலாந்து நாட்டின் பர்மிங்ஹாம் நகரில், 2022ம் ஆண்டு நடைபெறவுள்ளன.

5ல் இருந்து 3க்கு முன்னேற்றம்
கடந்த 2014ம் ஆண்டு ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில், 20வது காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்றன. இதில், 15 தங்கம், 30 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தம் 64 பதக்கங்களுடன் இந்தியா 5வது இடமே பிடித்தது. ஆனால் தற்போது 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் என மொத்தம் 66 பதக்கங்களுடன் 3வது இடம் பிடித்துள்ளது.

ஆண்கள் ஆதிக்கம்
இந்தியா மொத்தம் 66 பதக்கங்களை வென்றது. இதில், ஆண்கள் 35 பதக்கங்களையும், பெண்கள் 28 பதக்கங்களையும்  வென்றனர். எஞ்சிய 3 பதக்கங்கள் அணிகள் பிரிவில் (பேட்மின்டன், டேபிள் டென்னிஸ், ஸ்குவாஸ்) கிடைத்தது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • boataccident_19dead

    பிரான்சன் படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மலர் வளையம் வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி

  • intel_beer_fes

    சர்வதேச பீர் திருவிழா : கலை நிகழ்ச்சிகள், வான வேடிக்கைகள் உடன் 1300 வகையான பீர்கள் விழாவில் அறிமுகம்

  • vintage_transportmuseum11

    விண்டேஜ் ஸ்கூட்டர்கள், கார்கள்,பல்லக்குகள், விமானங்கள் : இந்தியாவின் போக்குவரத்து அருங்காட்சியகம்

  • vietnam_stormpuyal11

    வியட்நாமில் வெப்ப மண்டல புயல் தாக்கியதில் 32 பேர் உயிரிழப்பு ; 20 பேர் மாயம்

  • worldSnailpotti

    இங்கிலாந்தில் நத்தைகளுக்கான உலக சாம்பியன் போட்டி : பொதுமக்கள் கண்டுகளிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்