SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மழையின்மை, கோடை வெயிலால் கடும் வறட்சி: மேய்ச்சல் நிலங்களின்றி கால்நடைகள் தவிப்பு

2018-04-13@ 10:24:36

கைவிட்ட பருவமழை, கோடை வெயிலால் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக மேய்ச்சல் நிலங்களின்றி கால்நடைகள் பரிதவித்து வருகின்றன. ஏற்கனவே மழையின்றி பயிர்கள் கருகியதால் விரக்தியில் உள்ள விவசாயிகளுக்கு, கால்நடை வளர்ப்பும் கைகொடுக்காததால் மன உளைச்சலில் உள்ளனர்.
விவசாய நிலங்களை அழித்து நம்மில் பலரும், கட்டிடங்களாக்கி வருகிறோம். வேளாண்மை தொழில் மெல்லச் சிதைந்து, கட்டுமானங்கள்தான் மிகுந்திருக்கிறது.

வறட்சியின் உச்சமாக, இந்த கோடை காலம் மனிதர்களை வாட்டி, வதக்கி வரும் நிலையில், கால்நடைகள் நிலை மேலும் பரிதாபத்தில் இருக்கிறது. மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென்மாவட்டம் முழுக்க பரந்த நிலப்பரப்பில் வளர்ந்து கிடந்த புல், செடி கொடிகள், மரங்களை சர்வ சுதந்திரமாக கால்நடைகள் வலம் வந்து மேய்ந்திட்ட காலம் மலையேறி விட்டது. ஓரிடத்தில் கட்டுப்பட்டு நிற்க, வெட்டி உலர்த்தப்பட்ட வைக்கோல் புற்களும், அழுகி கொட்டப்பட்ட காய்கறிக் கழிவுகளும் இவைகளின் உணவாகிய நிலையில், இந்த கோடை காலம் இன்னும் கொடூரமாக இந்த தீவன பற்றாக்குறையால் மேலும் கால்நடைகளை பசியில் படுக்க வைத்து வருகிறது.

மேய்ச்சல் இடம் எங்கே...

தென்மாவட்டங்களில் வறட்சியின் தாண்டவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகமிருக்கிறது. இங்கு பெருகியுள்ள கருவேலங்காடுகளில், கால்நடைகளுக்கான எந்த மேய்ச்சலுக்கும் வசதி இல்லை. விருதுநகர் மாவட்டத்திலும் இதே நிலைதான். இங்கு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதிகளை கால்நடைகள் நம்பிய காலம் கழன்று போய் விட்டது. பழங்காலம் துவங்கி கடந்த 1989ம் ஆண்டு வரை இம்மாவட்டத்தில் மேய்ச்சலுக்கென இடமிருந்தது.

சாப்டூர், வத்திராயிருப்பு, திருவில்லிபுத்தூர், மம்சாபுரம், ராஜபாளையம், சேத்தூர், தேவதானம் வரையான மலைப்பகுதி சாம்பல் நிற அணில்கள் சரணாலயமாக அரசு அறிவித்ததில், இப்பகுதி முற்றிலும் பாதுகாக்கப்பட்ட பகுதியானது. இதனால் இங்கு கால்நடைகளுக்கான அனுமதி பறிக்கப்பட்டு விட்டது. நிலமற்ற இப்பகுதியில் மேய்ச்சலுக்கு வழியின்றியும், ஆறு, குளங்கள் வற்றி குடிநீரின்றியும் படு பரிதாபமாக கால்நடைகள் அலைந்து திரிவது பரிதாபத்தைத் தருகிறது.

மலையேற தடை

இத்துடன், மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை என அத்தனை மாவட்டங்களிலும் வறட்சி, கட்டுப்பாடு, மக்கள் நெருக்கம், கட்டுமானம் என மேய்ச்சல் நிலங்களுக்கான வாய்ப்புகள் பன்மடங்கு வற்றிப் போயிருக்கிறது. அழகர்கோவில் உள்ளிட்ட மலைப்பகுதிகளிலும் ஆடு, மாடுகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட தீவிபத்து மற்றும் உயிர்ப்பலிகள் எதிரொலியாக தென்மாவட்டங்களின் அத்தனை வனப்பகுதிகளிலும் கால்நடைகளுக்கான மேய்ச்சல் அனுமதிக்கு தற்போது தடை விதிக்கப்பட்டிருப்பது, கால்நடைகளின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

வாழ்வாதாரம் பாதிப்பு

கால்நடைகள் ஒவ்வொரு குடும்பத்தின் செல்லமாகவும், விவசாயிகளுக்கு மற்றொரு வாழ்வாதாரமாகவும் மாறிக்கிடந்த காலம் மலையேறி, இவற்றை வளர்த்து பராமரிப்பது பெரும் சிரமம் என ஒதுங்கி நிற்கும் நிலைக்கு விவசாயிகளை கொண்டு வந்திருக்கிறது. கணக்கெடுத்தால் நம் தென்மாவட்டங்களில் கால்நடை வளர்ப்போர் எண்ணிக்கை கடந்த காலங்களில் பன்மடங்கு சரிந்திருக்கிறது. ஆறு, குளங்கள் வறண்டு, வயல்வெளிகள் காய்ந்து தாகத்தில், பசியில் கால்நடைகளின் தவிப்பு வேதனைக்குரியதாக மாறியுள்ளது.

பசிக்கு பாலித்தீன்

மேய்ச்சல் நிலங்கள் அற்ற நிலையில், மதுரை உள்ளிட்ட நகரங்களில் மட்டுமல்லாது, கிராமப்புறங்களிலும் கால்நடைகள் உணவின்றி, தெருவில் திரிந்து அங்கு கிடக்கும் காகிதங்களையும், பாலித்தீன் பைகளையும் தின்னும் அவலம் ஏற்பட்டுள்ளது. ரோட்டில் கிடக்கும் பாலித்தீனை தின்பதால், இது உணவுக்குழாய்களில் சிக்கி, செரிமானமின்றி மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளின் உயிர் பறிக்கும் ஆபத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 25-03-2019

  25-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-03-2019

  24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-03-2019

  23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • SuperWormMoon

  2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்

 • sharkpalne

  உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்