SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

கோடையை முன்னிட்டு குவியுது கார்பைடு மாம்பழங்கள்: விற்பனை கனஜோர்

2018-04-13@ 10:21:58

சீசனை முன்னிட்டு மார்க்கெட்களில் மாம்பழங்கள் வரத்து துவங்கி உள்ளது. தேவை அதிகரிப்பால் கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி கண்காணிக்க வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது. கோடை சீசனை முன்னிட்டு மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் முக்கனிகளில் முதல் கனியான மாம்பழ சீசன் களை கட்ட துவங்கி உள்ளது. ஏப்ரலின் துவக்கத்திலிருந்து இந்த மாம்பழ வரத்து, ஆகஸ்ட் வரை இருக்கும். துவக்கமாக பாலாமணி, ராஜபாளையம், சப்போட்டா என தலை நீட்டியுள்ள இந்த மாம்பழங்களைத் தொடர்ந்து, கல்லாமை, காசாலட்டு, ருமேனியா, இமாம்பசத், காதர், மல்கோவா என விதவிதமான மாம்பழங்களும் அடுத்தடுத்து வரத்துவங்கியுள்ளன. ஒவ்வொரு பழத்திற்கும் ஒருவித சுவை இருக்கிறது.

பல ரகங்களில் பழ ரகம்...

சீசன் துவக்கமென்பதால், மாம்பழம் விலை கிலோ ரூ.50 முதல் ரூ.100 வரையிலும் கூடுதல் விலைகளில் ஒவ்வொரு ரகத்திற்கேற்ப விலைகளில் மாம்பழங்கள் விற்கின்றன. விலை உயர்வு உள்ளிட்டவைகள் இருப்பினும், மக்களிடம் மாம்பழங்களுக்கான வரவேற்பு குறையவில்லை. மதுரைக்கு மாவட்டத்தின் பிற பகுதிகளுடன், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் இருந்தும் மாம்பழங்கள் வருகின்றன. இதைப்போலவே உள்ளூர் பழங்களுடன், இறக்குமதி ரகங்களும் மதுரைக்கு வந்து, இங்கிருந்து தென்மாவட்டத்தின் பிற ஊர்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன.

வணிக நோக்கில்....

மாந்தோப்புகள் வைத்திருப்போர் முன்பெல்லாம் மரங்களில் முழுக்க பழுத்தது அல்லது முக்கால்வாசி பழுத்தது என ரகம் பிரித்து பறித்து விற்பனைக்கு மாம்பழங்களை அனுப்பி வந்தனர். ஆனால் இப்போது வணிக வருவாய் கருதியும், சீக்கிரம் பழுத்தால்தான் விற்க முடியும் என்ற நிலையிலும் கனியும் வரை காத்திருக்காமல், ஒப்பந்ததாரர்கள் மற்றும் வியாபாரிகள் நேரடியாகவே மாந்தோப்புகளின் நிர்வாகிகளை அணுகுகின்றனர். இவர்கள் விலை பேசி,  மரங்களில் கிடக்கும் காய்களையும், பிஞ்சுகளையும் ஓரிருநாட்களில் பறித்து எடுத்துச் செல்கின்றனர். பழங்களை பழுக்க வைப்பதற்காக கார்பைடு எனப்படும் செயற்கை ரசாயன கற்களை கொண்டு பெரிய மாங்காய்களுடன், சிறிய பிஞ்சு காய்களையும் போட்டு பழுக்க வைக்கின்றனர்.

மூடிய அறைக்குள்....

மதுரை உள்பட முக்கிய நகரங்களில் மரங்களில் இருந்து பறித்து வரப்படும் மாங்காய்கள் கார்பைடு கற்கள் மூலமே அதிகளவில் பழுக்க வைக்கப்படுகின்றன. மூடிய அறைக்குள் சிறு குவியல்களாக மாங்காய்களை குவித்து வைத்து அதற்குள் காகித பொட்டலங்களில் மடித்த கார்பைடு கற்களை போட்டு வைக்கின்றனர். இந்த கார்பைடு கற்கள் காஸ் வெல்டிங் கம்பெனிகளில் பயன்படுத்தப்படுவதாகும். இந்த ரசாயனக்கல்லின் மீது தண்ணீரை ஊற்றி தீயைப் பற்றவைத்தால், தீ கொளுந்து விட்டு எரியும். மூடப்பட்ட காற்று வசதியற்ற அறைக்குள் குவித்து வைக்கப்பட்ட மாங்காய்களுக்குள் கிடக்கும் இந்த கார்பைடு கற்கள், வீரியமிக்க வெப்பத்தை உமிழ்ந்து மாங்காய்களின் தோற்றத்தையே மஞ்சள் நிறத்தில் மாற்றி விடுகிறது. இதனால், பிஞ்சுக் காய்களும் பழங்களாக உருமாறுகின்றன.

குழந்தைகளுக்கு கொடுக்காதீங்க...

மாற்றப்பட்ட இவ்வகை மாம்பழங்களே மார்க்கெட்டுக்கு விற்பனைக்கும் கொண்டு வரப்படுகின்றன. இந்த பழங்களை கடைக்காரர்கள் அடுக்கி வைத்திருப்பதை, நாம் பார்த்ததுமே அந்த பழங்களின் மீது ஆசைப்பட்டு அதை வீடுகளுக்கு வாங்கி வந்து விடுவோம். ‘தானாக கனியும் கனியை, தடியால் அடித்து கனியவைத்த கதை’ என்றொரு பழமொழி உண்டு. அதற்கேற்ப, குறுகிய காலத்தில் பெரும் வருவாய் பார்க்கும் ஆர்வத்தில் இயற்கைக்கு புறம்பாக ரசாயன கற்களில் பழுக்க வைக்கும் இந்த மாம்பழங்கள், விஷ உணவாகவே மாறி விடுகிறது.  முதியவர்களும், குழந்தைகளும் மாம்பழங்களை அதிகம் விரும்பி உண்கின்றனர். குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த வகை மாம்பழங்களை தருவதில் மிகுந்த கவனம் வேண்டும்.

மதுரை உள்பட தென்மாவட்டங்களின் பல கடைகளில் ரசாயன கற்களில் பழுக்கவைத்த பழங்களின் விற்பனை இப்போதே எகிறி வருகிறது. இவற்றை தடுப்பதற்கான உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதார அதிகாரிகளின் நடவடிக்கை மிக மந்தமாக இருக்கிறது. புகார்கள் அதிகரிக்கும் காலத்தில் மட்டுமே உள்ளாட்சி சுகாதார அதிகாரிகளும் பெயரளவிலேயே சோதனை, பறிமுதல் என சிறு சிறு நடவடிக்கைகள் எடுக்கின்றனர். இவையும் கண்துடைப்பாகவே இருக்கிறது. மாம்பழ சீசன் துவங்கியுள்ள இத்தருணத்தில், அதிகாரிகளும், அரசும் தனிக்கவனம் காட்டி, நடவடிக்கைகளில் கடுமை மேற்கொள்வது அவசியம்.

உச்சமாக உயிர் பறிப்பு

இதுகுறித்து டாக்டர்கள் கூறும்போது, ‘‘செயற்கை ரசாயனத்தால் பழுக்க வைக்கப்பட்ட இந்த மஞ்சள் நிற மாம்பழங்களை உண்போருக்கு பலவித உடற்பாதிப்புகள் ஏற்படுகின்றன. மாம்பழத்தின் உட்புறம் ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தும் இந்த கற்கள், மாம்பழத்தை சாப்பிடுபவருக்கு முதலில் வயிற்றுப்போக்பை ஏற்படுத்துகிறது. இதன் உச்சமாக உயிர் பறிக்கும் ஆபத்தும் ஏற்படுகிறது. மேலும், செயற்கையாக பழுக்கும் மாம்பழங்கள் தரும் இயற்கையான சத்துக்களை, இந்த கல்லில் பழுக்க வைத்த மாம்பழங்களால் தர முடிவதில்லை. மாம்பழத்தின் நல்ல சுவையையும் இந்த ரசாாயன கல் மாம்பழங்கள் கெடுத்து வடுகின்றன’’ என்றனர்.

குளிர்ந்த நீரில் 20 நிமிடங்கள்!

நல்ல பழங்களை முகர்ந்தாலே, அதன் வாசம் காட்டித் தந்துவிடும். ஆனாலும் ரசாயன கல்லில் பழுக்க வைத்த மாம்பழமாக இருக்கலாமா என்ற சந்தேகம் ஏற்பட்டால், அந்த பழத்தை கழுவினால் மட்டும்போதாது. குறைந்தது 20 நிமிடத்திற்காவது குளிர்ந்த நீரில் ஊறவைத்து கழுவி எடுக்க வேண்டும். இதன்பிறகு சாப்பிடுவது ஓரளவு பாதிப்பின் தீவிரத்தைக் குறைக்கும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-09-2018

  22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • muharamfest

  நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

 • nasaevanaktrump

  அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

 • florence&trumph

  பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

 • greenlandicemelt

  கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்