ஆகம விதிகள் அப்பட்டமாக மீறல்: நெல்லையப்பர் கோயிலில் ஏப். 27ல் கும்பாபிஷேகம்

2018-04-11@ 09:51:54

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயிலில் வரும் 27ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கவுள்ள நிலையில், திருப்பணிகள் முழுமையாக நடக்கவில்லை என பக்தர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். கொடிமரத்தில் தங்கம் சுரண்டப்பட்டுள்ளதாகவும், ரூ.4.92 கோடியில் நடப்பதாக கூறப்படும் பல்வேறு பணிகள் முழுமை பெறாத நிலையில், அவசரம், அவசரமாக கும்பாபிஷேகம் நடப்பதால் பக்தர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
திருநெல்வேலி பெயர் வரக் காரணமான சுவாமி நெல்லையப்பர் திருக்கோயில் ஆயிரம் ஆண்டுகால புராண சிறப்பு வாய்ந்தது. தமிழகத்திலுள்ள மிக முக்கிய சிவாலயங்களில் ஒன்றான இக்கோயிலில் கடந்த 7-4-2004ம் தேதியன்று கும்பாபிஷேகம் நடந்தது. 14 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் கும்பாபிஷேகம் வரும் 27ம் தேதி நடக்கிறது. இதையொட்டி கடந்த நவம்பர் 30ம்தேதி கோயிலில் பாலாலயம் நடத்தப்பட்டது. தொடர்ந்து கும்பாபிஷேகத்திற்குரிய திருப்பணிகள் நடந்து வருகின்றன.
கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு கோயிலில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் தொடங்கி, தேதி அறிவிப்பு, கும்பாபிஷேக நேரம் மாற்றம், பக்தர்கள் எதிர்ப்பு என பல்வேறு சர்ச்சைகள் கோயில் வட்டாரத்தில் தற்போது உலா வருகின்றன. கடந்த ஆண்டில் கும்பாபிஷேகத்திற்கு அறநிலையத்துறை அதிகாரிகள் சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் 3 மாதத்தில் திருப்பணிகளை முடித்து விட திட்டமிடப்பட்டது. இதற்குரிய ஆட்சேபங்களை அப்போதே பக்தர்கள் மற்றும் வழிபாட்டுக் குழுவினர் தெரிவித்தனர். ஆனால் அதையும் மீறி அவசரம், அவசரமாக பக்தர்களுக்கு சரியான அறிவிப்பு ஏதும் இல்லாமலேயே சுவாமி, அம்பாள் மூலவர் தவிர்த்து திடீரென அனைத்து சந்நிதிகளுக்கும் பாலாலயம் செய்யப்பட்டது.
அதன் பின்னர் நடந்த திருப்பணிகளுக்கு என முறையாக குழு எதுவும் அமைக்கப்படவில்லை. நெல்லையப்பர் கோயில் போன்ற பெரிய கோயில்களில் பகுதி, பகுதியாக பணிகளை மேற்கொண்டு பாலாலயம் நடத்துவதே இயல்பு. ஆனால் அதிகாரிகளின் அவசரத்திற்கு ஏற்ப பெயரளவிற்கு அதனை நடத்தி முடித்து விட்டனர். பாலாலயம் என்பது எப்போதுமே திருவிழா போன்று பக்தர்கள் புடைசூழ ஊருக்கே தெரிந்து நடக்க வேண்டும். இம்முறை கோயிலில் மூடுமந்திரமாக பாலாலயம் நடந்தது. கோயில்களில் பணியாற்றும் பட்டர்களுக்கே அதற்கான விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
நெல்லையப்பர் கோயிலில் தற்போது திருப்பணிகள் முடிவுறும் தருவாயில், அதனையும் பக்தர்கள் மனவேதனையோடு எதிர்நோக்குகின்றனர். சில இடங்களில் கோயிலுக்கு வர்ணம் பூசுவதே திருப்பணியாக உள்ளது. கும்பாபிஷேக திருப்பணிகளுக்கு ரூ.4.92 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், கோயில் கோபுரங்கள், விமானங்கள், மரச்சிற்பங்கள், சுதை வேலைப்பாடுகளில் திருப்பணிகள் பெயரளவுக்கு நடந்துள்ளதாக பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நெல்லை திருக்கோயில் வழிபடுவோர் சங்கம் இதுகுறித்து கலெக்டர் மற்றும் அறநிலையத்துறைக்கு மனுக்களையும் ஏற்கனவே அளித்துள்ளது. இதுகுறித்து நெல்லையப்பர் கோயில் பக்தர்கள் கூறுகையில், ‘‘ஆண்டின் அனைத்து மாதங்களிலும் திருவிழா நடைபெறும் சிறப்பு வாய்ந்தது நெல்லையப்பர் திருக்கோவில். இதுபோன்ற பெரிய ஆலயங்களில் திருவிழாவிற்கு இடையூறு ஏற்படா வண்ணம் பகுதி பகுதியாக பாலாலயம் நடைபெறுவதே வழக்கம். கடந்த 2004ம் ஆண்டு கும்பாபிஷேகத்திற்குரிய பாலாலயம் இப்படி பகுதி பகுதியாகவே நடந்தது. இதனால் ஆனித்தேரோட்டம் எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்ைல.
ஆனால் இம்முறை ஆனித்திருவிழாவை காரணமாக்கி பாலாலயம் அவசரமாகவும், ரகசியமாகவும் நடத்தப்பட்டது. சுவாமி, அம்பாள் கொடிமரங்கள் தங்கக் கொடிமரங்களாகும். இந்த கொடிமரத்தில் எந்தவித திருப்பணியும் செய்யாத நிலையில் அக்கொடிமரத்திற்கு ஏன் பாலாலயம் செய்ய வேண்டும்? இரண்டு கொடிமரத்திலும் தங்கம் சுரண்டப்பட்டுள்ளதை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை இல்லை. இதுகுறித்து தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேலுக்கு கடிதம் மூலம் புகார் அனுப்பப்பட்டுள்ளது.
சுவாமி, அம்பாளுக்கான மூலஸ்தானம், விமான கலசத்தில் உள்ள தங்க முலாமும் என்ன ஆனது என்றே தெரியவில்லை. நெல்லையப்பர் கோயில் குடமுழுக்கு விஷயத்தில் ஆகம விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன. கோயிலில் உள்ள குறைபாடுகளை அறநிலையத்துறை அலட்சியப்படுத்தாமல் சரி செய்ய வேண்டும்’’ என்றனர்.
ஆட்சிக்கு ஆபத்து வரும்
நெல்லையப்பர் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் நாளும், நேரமும் தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. வரும் 27ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தால் நாட்டுக்கும் அரசுக்கும் கேடும், ஆபத்தும் வரும் என்று பிரபல ஜோதிடர்கள் எச்சரித்துள்ளனர். சில ஆதீனங்களும் இதற்கு ஆட்சேபத்தை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நெல்ைலயை சேர்ந்த ஜோதிடர் பிரம்மா கூறுகையில், ‘‘நேத்திரம், ஜீவன் இருக்கும் நாளில் கும்பாபிஷேகம் நடத்தினால் மட்டுமே விழா சிறக்கும். கடந்த ஒரு மாதமாக தனுசு ராசியில் சனி, செவ்வாய் சேர்க்கை தீ விபத்துக்களை உருவாக்கி வருகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்து, குரங்கணி தீ விபத்து ஆகியன இதற்கு உதாரணங்களாகும். நெல்லையப்பர் கோயில் கும்பாபிஷேகம் நடக்கும் நாளும், நேரமும் ஜோதிடப்படி ஏற்றதல்ல. அதை மறுபரிசீலனை செய்வதே சால சிறந்தது. ஏனெனில் கும்பாபிஷேக லக்கனத்திற்கு ஏழு மற்றும் எட்டாம் இடங்கள் சுத்தமாக இருக்க வேண்டும். இந்த நாளில் நடந்தால் நாட்டுக்கும், அரசுக்கும் ஆபத்தும், கேடும் வரும். கரூர் சித்தர் சொன்ன கருத்துக்களை கோயில் நிர்வாகம் சிந்திப்பது நலம் பயக்கும்’’ என்றார்.
பின்னணி சந்தேகம்
கடந்த ஆண்டு ஜூலை 30ம் தேதி நடந்த ஆலோசனை கூட்டத்தில் அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி பாலாலயம் செய்து 3 மாதத்தில் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என வெளிப்படையாக கூறினார். அதற்கு பக்தர்கள், முன்னாள் திருப்பணிக் குழுவினர் எதிர்ப்பு தெரிவித்தும் பாலாலயம் செய்து 4 மாதத்திற்குள் கும்பாபிஷேகம் நடத்திட முடிவு செய்து விட்டனர். இப்படி செய்தால் உள்ளூர் பட்டர்கள், பொதுமக்கள் எதிர்ப்பு வரும் என்பதாலேயே வெளியூர் பட்டர் உதவியுடன் பாலாலயம் நடத்தி, அவரையே கும்பாபிஷேக சர்வசாதகமாக நியமித்து விட்டனர். இதற்கு நெல்லையப்பர் கோயில் பட்டியலில் இல்லாத சிலர் உதவியாக இருக்கின்றனர். இதன் பின்னணி சந்தேகிக்க வைக்கிறது என்கின்றனர் பக்தர்கள்.
நேரம் மட்டும் மாற்றம்
இதுகுறித்து கோயில் வட்டாரத்தின் கூறுகையில், சித்திரை மாதத்தில் எந்த தேதியும் சிறப்பாக இல்லை. வைகாசி மாதத்தில் நடத்தலாமா என்ற போது அது மல மாதம் என்பதால் இந்தாண்டு வைகாசியில் குடமுழுக்கு போன்ற சுப காரியங்கள் நடத்தக்கூடாது. எனவே சித்திரையில் இருக்கும் தேதிகளில் ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய தேதியில் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டதாக கூறினர். தற்போது பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பையடுத்து கும்பாபிஷேக நேரம் மட்டும் மாற்றப்பட்டுள்ளது.
ஜீர்ணோத்தாரண சிக்கல்கள் களையப்படுமா?
திருக்கோயில்களை பொறுத்தவரை ‘ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்’ என்பது ஒரு வளமையான வார்த்தை. இதில் ஜீர்ணோத்தாரணம் என்பது சரியில்லாதவற்றை சரி செய்வதாகும். அதன்பின்னர் அஷ்ட பந்தனம் என்னும் மருந்து சாத்தி, புதுவர்ணம் பூசி கும்பாபிஷேகம் செய்வதாகும். நெல்லையப்பர் கோயிலை பொறுத்தவரை திருப்பணிகள் நிறைவடையும் நிலையில், பல இடங்களில் பணிகள் நடக்கவில்லை. குறிப்பாக மகாலிங்கம் பெரிய சன்னதியில் உத்திரம் இன்னமும் உடைந்து காணப்படுகிறது. 10 ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் அம்பாள் பலி பிரகாரத்தை கண்டு கொள்வார் இல்லை. சுவாமி பிரகாரத்திலும் தளஓடுகள் நீக்கியதால் மழை பெய்தால் கோயிலுக்குள் நீர் புகுவது வாடிக்கையாகி வருகிறது. இப்பணிகளை முறையாக மேற்கொள்ளாமல் கும்பாபிஷேகம் நடத்துவது பாதிப்பை ஏற்படுத்தும் என பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
நடமாடும் சலவையகம் அமைக்க மானியத்துடன் கூடிய கடனுதவி
தபால்தலைகளும் அதன் பின்னணியும்
வெயிலை விட வேகமாக நோய் பரப்பும் கோடைமழை: எவ்வளவு மகிழ்ச்சியோ... அவ்வளவு ஆபத்து
தெரிஞ்சுக்கலாம் வாங்க!
கர்ப்பகாலத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்கள்
அட்சய திருதியைக்கு எதில் முதலீடு செய்யலாம்?
21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்
பிரான்ஸ் நாட்டில் ஹாலிவுட் படக்காட்சிகளை போல் வடிவமைக்கப்பட்ட எந்திர பூங்கா!
மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா: மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் விதி உலா
இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு, பெர்லின் நகரில் கண்டுபிடிப்பு!
10ம் வகுப்பு பொதுதேர்வு நிறைவு எதிரொலி : மாணவர்கள் கலர் தூவி பிரியா நட்பை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்
LatestNews
பாகிஸ்தான் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ராணுவ வீரர் பலி
08:44
வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திருப்பினார் பிரதமர் மோடி
08:34
உத்தரப்பிரதேசத்தில் ஐபிஎல் போட்டி சூதாட்டம் : 3 பேர் கைது
08:21
பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கு : எஸ்.வி.சேகரை கைது செய்ய போலீஸ் தயக்கம்
08:10
மதுரை ஆயிரங்கால் மண்டபம் மீண்டும் திறப்பு
07:47
அணுஆயுத சோதனை நிறுத்தம் : வடகொரியா அதிபர் அறிவிப்புக்கு டிரம்ப் வரவேற்பு
07:43