SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உயிருக்கு உலை வைக்கும் உணவு கலப்படம்

2018-03-28@ 10:41:02

அன்றாடம் நாம் பயன்படுத்தும் உணவுப்பொருட்களில் கலப்படம் அதிகம் உள்ளது. இதனால் பலர் நோய்வாய்ப்படும் சூழல் நிலவுகிறது. அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தி கலப்பட பொருட்களை கண்டறிய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இன்றைய சூழலில் கலப்படம் இல்லாத பொருட்களை விரல் விட்டு எண்ணி விடலாம். வணிகரீதியாகவும், கூடுதல் வருவாய் கருதியும் உணவுப்பொருட்களில் நடக்கும் கலப்படம் உடல் நலக்கேட்டுடன், உயிர் குடிக்கும் ஆபத்தையும் தருகிறது. எது சுத்தம்? எது கலப்படம் என்ற வேறுபாட்டினை கூட நம்மால் உணர முடியாத வகையில் அவ்வளவு ‘பக்காவாக’ இந்த கலப்படம் நிகழ்த்தப்படுகிறது. எந்தப் பொருட்களில், எதைக் கலக்குகிறார்கள் எனத் தெரிந்தால் ரொம்பவே அதிர்ந்து போவோம்.

அரிசியில் துவங்கி...:

அரிசியில் சிறு கற்கள், மண், நெல், தவிடு கலக்கப்படுகிறது. இது அதிகளவில் வயிற்றுக் கோளாறுகளை தருகிறது. துவரம்பருப்பில் கேசரி பருப்பு, சிறு கற்கள் கலப்பதால், வயிற்றுக்கோளாறுடன் வாதநோய் தருகிறது. உளுந்தம்பருப்பில் களிமண் உருண்டைகள், சிறு கற்கள் கலக்குகின்றனர். வயிற்று உபாதை, புற்று நோய், கருச்சிதைவு, ஊனமுறுதல் ஏற்படுகிறது. மிளகாய் தூளில் செங்கல்பொடி, காங்கோ ரெட் கலக்கப்படுகிறது. மல்லித்தூளில் மரத்தூள், குதிரை சாணம், மலாசிட் பச்சை வேதிப்பொருட்கள் கலக்கப்படுகிறது.

கருச்சிதைவு உண்டாகும்:  

மஞ்சள் தூளில் கலக்கும் காரிய குரோமேட் மற்றும் மெட்டானில் எல்லோ வேதிப்பொருட்களால், நுரையீரல், மார்பு, தொண்டை, கண், எலும்பு மற்றும் கல்லீரலில் கட்டிகள், புற்றுநோய், ஆண் மலட்டுத்தன்மை, கருச்சிதைவு, குழந்தைகள் ஊனமுறுதல், கண் குருடாதல், தொண்டையில் புற்றுநோய் ஏற்படுகிறது. உணவு பொருட்களில் சுவைக்கென ஆர்ஜிமோன் எண்ணெய், காட்டாமணக்கு எண்ணெய், டிபிசி 8 எண்ணெய் மற்றும் தாது எண்ணெய் கலக்கப்படுவதால் கல்லீரல் வீக்கம், இருதய பாதிப்பு, கால்களில் வாதம், வயிற்றுக்கோளாறு ஏற்படுகிறது. உணவு கெடாமல் இருப்பதற்காக பயன்படும் அஜினோமோட்டோவால் பல்வேறு வயிறு உபாதைகள் ஏற்படுகின்றன.  

மெழுகுப்பழம்:


நெய்யில் வனஸ்பதி, மிருகக்கொழுப்பும், வெண்ணெயில் மைதா மற்றும் மணிலா மாவும் கலக்கப்படுகிறது. இது இருதய அடைப்பு, முகம் வீக்கம், வயிற்றுக்கோளாறை ஏற்படுத்தும். தேனில் சர்க்கரைப்பாகு மற்றும் வெல்லப்பாகு கலக்கப்படுவதால் உணவுச்சத்துக்கள் கெடுவதுடன், நெஞ்சுவலி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. மிளகில் பப்பாளி விதையை கலப்பதால், வயிற்று கோளாறுகளை தருகிறது. ஆப்பிள் பழங்களின் மீது மெழுகுப்பூச்சு, கார்பைடு கல் போன்றவற்றால் மாம்பழங்களை பழுக்க செய்தல், வேதிப்பொருட்களை உள்செலுத்துதல், மரபணு மாற்றம் உள்ளிட்ட பல்வேறு செயற்கை முறைகளை கையாள்வதால் பழங்கள் விஷமாகவே மாறுகின்றன. இதனால் குழந்தைகள், முதியோர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இளைஞர்களை முதுமையடையச் செய்கிறது. இந்த கலப்படங்களில் மக்கள் விழிப்புடன், கடும் சட்டங்கள், நடவடிக்கைகளால் அரசும் கடுமை காட்டுவதும் அவசியம்.

கிருபாகரன் (திண்டுக்கல் மாவட்ட தொழிலர் வர்த்தக சங்க தலைவர்):

தரமான வியாபாரிகள் கலப்பட உணவுப்பொருட்களை விற்பனை செய்ய மாட்டார்கள். கலப்பட உணவுகள் விற்பனைக்கு வருகிறது என்றால் அதை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேரடியாக சோதனை செய்து, கண்டுபிடித்து உடனே தண்டனை தரலாம். அதேபோல் மக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். விலை மலிவாக கிடைக்கிறது என நினைத்து சாலையோரங்களில் காய்கறிகள், பழங்கள் மற்றும் இதர பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதனை தவிர்க்க வேண்டும். குறிப்பாக ஐஎஸ்ஐ முத்திரை உள்ளதா என்று பார்த்து தரமான பொருட்களை வாங்கி உபயோகிக்க வேண்டும். அப்படி உபயோகித்தால் மட்டுமே உடல்நலத்துடன் வாழ முடியும். கலப்பட உணவுகள் பற்றி பொதுமக்கள் இன்னும் விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றனர். அதனை மாவட்ட நிர்வாகம், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தான் விளக்க வேண்டும்.

ராஜேஸ்கண்ணன் (தமிழ் நாடு நுகர்வோர் பாதுகாப்பு மைய மாவட்ட பொருளாளர்):

ஒவ்வொரு வணிகர்களும் எப்எஸ்எஸ்ஐ நம்பர் உள்ளதா என்று பார்த்து தான் பொருட்களை வாங்கி விற்பனை செய்ய வேண்டும். பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீரில் ஐ.எஸ்.ஐ. மற்றும் எப்எஸ்எஸ்ஐ நம்பர் இருந்தால்தான் பாட்டில்களிலோ, பாக்கெட்டுகளிலோ தண்ணீர் வாங்கி உபயோகிக்க வேண்டும். ஆனால் தற்போது வறட்சி காலம் என்பதால் தெரு தெருவிற்கு குடிநீர் விற்பனை மையம் துவங்கி கேன்களில் விற்பனை செய்கின்றனர். அது மக்கள் பயன்படுத்த கூடியதா? என்று அதிகாரிகள் சோதனை செய்ய வேண்டும். கிராமங்களில் கலப்பட உணவுப் பொருட்கள் அதிகமாக விற்பனை ஆகின்றன. ஏனென்றால் அந்த மக்களுக்கு எதுவும் தெரிவதில்லை. விலை குறைவாக இருந்தால் போதும் வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர் மேலும் தற்போது உணவு பொருட்கள் தயாரிக்கும் போலி நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்ட உணவுப் பொருட்களின் நிறுவனங்கள் போன்றே ஸ்டிக்கர், டப்பா அடித்து விற்பனை செய்வதால் பொதுமக்கள் அதனை கண்டறிய முடிவதில்லை. அதனால் அதனை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் வியாபாரிகள் தன் குடும்பம் போல் பொதுமக்களையும் எண்ணி தரமான பொருட்களையே விற்பனை செய்ய வேண்டும்.

செல்வன் (உணவு பாதுகாப்பு அலுவலர்):

94440 40322 என்ற எண்ணை அச்சடித்த ஸ்டிக்கர்களை கொண்டு அனைத்து வணிக நிறுவனங்கள், தயாரிப்பு நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் ஒட்டியுள்ளோம். பொதுமக்கள் தாங்கள் வாங்கும் பொருட்களில் ஏதாவது சந்தேகம் இருந்தால் மேலே கண்ட நம்பரில் வாட்ஸ்அப் மூலம் தெரியப்படுத்தலாம். ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் தகவல் தெரிவிக்கலாம். ஏனென்றால் உணவு பாதுகாப்புத்துறை 24 மணிநேரமும் செயல்பட்டு வருகிறது. தற்போது தண்ணீர் கேன், மாமிச உணவுகளில் செயற்கை வண்ணம், தரமற்ற எண்ணெய், நெய் உள்ளிட்ட பொருட்களை நாங்கள் பறிமுதல் செய்து அப்புறப்படுத்தி வருகிறோம். மேலும் வணிக நிறுவனத்தில் எச்சரிக்கை செய்து வருகிறோம். பொதுமக்கள் கண்டிப்பாக எந்த உணவுப்பொருட்கள் வாங்கினாலும் தயாரிப்பு தேதி, தயாரிப்பாளர் முழு முகவரி இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும்.

கோபிநாத் (டாக்டர்):

உணவுப்பொருட்களில் பொதுவாக பருப்பு வகைகளை எடுத்து கொண்டால் கேசரிதால் என்ற வகையான பருப்புகளை லாப நோக்கத்தில் கலந்து விற்பனை செய்கின்றனர். இதனால் இருதய நோய், ரத்தகொதிப்பு உருவாக வாய்ப்புள்ளது. இதேபோல் பால் கெட்டியாக இருக்க வேண்டும் என்பதற்காக ஜவ்வரிசி மாவு கலந்து பாலை திக்காக தருகின்றனர். இதனால் கிட்னி பெய்லியர் ஆக வாய்ப்புள்ளது. இதேபோல் பாக்கெட்டுகளில் அடைத்த உணவுப் பொருட்கள் மற்றும் தின்பண்டங்களை சாப்பிடுவதால் குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, ஜீரணி சக்தியை இழக்கின்றனர். இதனால் உணவு பாதுகாப்பு துறையினர் அனைத்தையும் சரியான முறையில் விற்பனை நிலையங்களில் சோதனை செய்து மக்கள் உடல்நலத்தை காக்க வேண்டும்.

வெங்கடேசன் (பொதுமக்கள்):

இன்றைய சூழ்நிலையில் விவசாயத்தில் உற்பத்தியாகும் காய்கறிகளிலிருந்து, பயிறு வகைகள் வரை அனைத்துமே உரங்கள், பூச்சி மருந்துகளால் தான் உருவாகிறது. அதைத்தான் நாம் உண்டு வருகிறோம். இதை விற்கும் கடைகளில் போதாக்குறைக்கு கலப்பட பொருட்களை சேர்க்கின்றனர்.  இதை வாங்கி உண்பதால் பல்வேறு நோய்களுக்கு தள்ளப்படுகிறோம். மேலும் அசைவ உணவகங்களில் ருசிக்காக அஜினமோட்டோ சேர்க்கப்படுகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு வயிற்று உபாதைகளுக்கு ஆளாகின்றனர். இதேபோல் அசைவ உணவகங்களில் முதல்நாள் வைத்த அசைவங்கள் மற்றும் குழம்புகளை மறுநாளும் வைப்பதால் புட்பாய்சன் ஏற்படுகிறது. இதனை மாவட்ட நிர்வாகமும், உணவு  பாதுகாப்பு அதிகாரிகளும் சோதனை செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்டத்தில் கடுமை வேண்டும்


உணவுக்கலப்படம் தடுப்பு சட்டங்களில் கடுமை இல்லை. உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு சட்டம் 2006, 1954ம் ஆண்டு சட்டம், மாமிச உணவு ஆணை 1973 சட்டம், பால் மற்றும் பால் பொருட்கள் ஆணை 1992 ஆகிய சட்டங்களில் பல திருத்தங்கள் செய்யப்பட்டு 2010 முதல் அமலுக்கு வந்தது. எனினும், சிறு அபராதம் என்ற நிலையே இருக்கிறது. கடும் குற்றத்திற்கும் மூன்று மாத சிறை தண்டனையிலிருந்து அதிகபட்சமாக ஆறு வருட சிறை தண்டனையே உள்ளது. இ.பி.கோ 272  மற்றும் 273 பிரிவுகளில் திருத்தங்கள் செய்து, ஆயுள் தண்டனை வரை வழங்கிட பரிந்துரைக்கப்பட்டும் மாற்றங்கள் இல்லை. கலப்படம் செய்வோர் மீதான சட்டங்களை மேலும் கடுமைப்படுத்துவதுடன், மக்கள் விழிப்புணர்வை மேம்படுத்துவதிலும், அக்மார்க் உள்பட தர முத்திரைகள் மீதான மக்கள் ஈடுபாட்டை அதிகரிப்பதிலும் அரசு மேலும் கவனம் காட்டுவது அவசியம்.

இது நல்ல எண்ணெய் தானா..???


நம் உணவில் முக்கிய இடத்தில் எண்ணெய் இருக்கிறது. வகை வகையாய் சூரியகாந்தி எண்ணெய் விற்பனைக்கு வருகிறது. இந்த அளவிற்கு எண்ணெய் தரும் இப்பூக்கள் விளைவிக்கப்படுவதில்லை. இதில் வேதிப்பொருட்களே அதிகமிருக்கின்றன. இவ்வரிசையில் எள் இல்லாமலேயே, நல்லெண்ணெய் தயாரிக்கப்படுவதும் அதிர்ச்சியளிக்கிறது. குப்பையில் கொட்ட வேண்டிய நாள்பட்ட கெட்டுப்போன முந்திரிப்பருப்பை, நசுக்கி கழிவெண்ணெய் எடுக்கப்படுகிறது. விலை குறைந்து விற்கும் பாமாயில் அல்லது ரைஸ் ஆயில் 15 கிலோவுடன், அரை லிட்டர் முந்திரி கழிவெண்ணெய் கொட்டி கலந்தால், நல்லெண்ணெய் வாசத்தில், வண்ணத்தில் கலப்பட எண்ணெய் தயாரித்து, அதிக லாபம் பார்க்கின்றனர். நல்லெண்ணெய்யை பிரிட்ஜில் வைத்தால் உறையாது. ஆனால் இந்த போலி நல்லெண்ணெய் உறையும். இதனைத் தடுக்கவும், பாம் ஒலி பெயரில் ரீபைண்ட் செய்து விற்கும் பாமாயிலை வாங்கி, இதனுடன் முந்திரிக் கழிவெண்ணெய் கலந்தும் போலி நல்லெண்ணெய் தயாரித்து, ‘தும்பை எள் எண்ணெய்’ என்றும் விற்கின்றனர். இது பிரிட்ஜில் உறையாது. இதுதவிர கச்சா எண்ணெயை சுத்திகரித்தே பெட்ரோல், டீசல், கெரசின், நாப்தலீன், மெழுகு துவங்கி ரோட்டுக்கான தார் வரை 24 வகை பொருட்கள் பெறப்படுகின்றன. இதில் கிடைப்பதே மினரல் ஆயில். இதனை அமெரிக்க மண்ெணண்ணெய் அல்லது ‘லிக்யூட் பேரபின்’ என்கின்றனர். நிறம், மணமற்ற, அடர்த்திமிக்க இந்த மினரல் ஆயிலுடன் தேங்காய் வாசத்திற்கான எசென்ஸ் கலந்து தயாரித்து தேங்காய் எண்ணெய் பெயரிலும் கும்பல் விற்கிறது. இதனை அறியாமையில் பலரும் சமையலுக்கும் பயன்படுத்தி, பல்வேறு பாதிப்புகளுக்கும் ஆளாகின்றனர்.

ரசாயன பால்


பால் பச்சிளம் குழந்தைகளின் முழு உணவு. முதியவர்களுக்கும் முக்கிய உணவாகும். தீவனப்பயிர்கள் மூலம் கால்நடைகளால் பூச்சிக்கொல்லியும்  உட்கொள்ளப்பட்டு, ஆர்கனோ பாஸ்பரஸ், ஆர்கனோ குளோரின் கலந்த டிடிடி, பிஎச்சி போன்ற பூச்சிக்கொல்லிகள் பாலில் வெளியேறுகிறது. இது  ஒருபுறமிருக்க, ரசாயனப்பால் தயாரிக்கப்படுவது பேரதிர்ச்சியை தருகிறது. மதுரை தனியார் குடோனில் சமீபத்தில் ஸ்டார்ச், மக்காச்சோள மாவு என  எழுதப்பட்ட 65 மூடைகள் சிக்கின. நாக்கில் வைத்தால் எரிச்சலூட்டிய இது ஒருவித ரசாயன பவுடர். பால், ஐஸ்கிரீம், பிஸ்கெட்டில் இதனை  பயன்படுத்துவதும், 10லிட்டர் தண்ணீரில் இந்த ரசாயனப் பவுடரை ஒரு கிலோ கலந்தால் பால் தன்மை வந்து விடும். இந்த கெமிக்கல் பால் அதிகளவில் மதுரையில் விற்கப்பட்டதும் தெரிந்தது. உயிர் பறிக்கும் ஆபத்து கொண்ட இந்த ரசாயன பாலை பால்மானி கருவியால் கூட செயற்கையானது எனக் கண்டுபிடிக்க  முடியாது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 14-12-2019

  14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • po13

  கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்

 • wagle_hunttt

  கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்

 • modi13

  நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

 • 3dhmes_111

  3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்