SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாடியில் தோட்டம் அமைத்தால் மருத்துவரையே பார்க்க வேண்டாம்

2018-03-27@ 10:28:56

வீட்டு மாடியில் தோட்டம் அமைத்தால் சத்தான, ரசாயனமற்ற காய்கறிகளை விளைவிக்கலாம். உடலுக்கு கேடு விளைவிக்காத காய்கறிகள் கிடைப்பதுடன், காலை வேளையில் சுறுசுறுப்பாகவும் இயங்க வைக்கும். மொட்டை மாடி என்று சொல்லியே பழகி விட்டோம். ஆனால், அங்கு கூட நாம் வயல்வெளிகள், மலைப்பிரதேசங்களில் காணும் பசுமையை காணலாம். எப்படி என்கிறீர்களா...? மாடித்தோட்டம் அமைத்துத்தான். அன்றாடம் நாம் காய்கறிகளை உணவில் எடுத்துக் கொள்ளும்போது, எதற்காக இந்த மாடித்தோட்டம்? ஏன் இந்த வெட்டி வேலை என்றுதானே எண்ணுகிறீர்கள். அதுதான் இல்லை. அன்றாடம் நாம் காய்கறிகள் எடுத்துக்கொண்டாலும், அவைகளில் அதிகளவு ரசாயனம் சேர்க்கப்படுகிறது. பூச்சிகள் மற்றும் அதிக மகசூலுக்காக ரசாயனம் கலக்கப்பட்ட காய்கறிகளால் உடலுக்கு நன்மையை விட தீமையே அதிகம் கிடைக்கிறது. நகரமோ, கிராமமோ இன்றைக்கு இத்தோட்டம் ஒவ்வொரு வீட்டிலும் அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம்.

நாட்டு விதை நல்லது :


நாட்டு ரக விதைகளை கொண்டு நாமாகவே இந்த மாடித்தோட்டங்களை அமைத்து அன்றாட தேவைக்கான காய்கறிகளை எடுக்க முடியும். அத்தனை துறைகளிலும் இன்றைக்கு உலகில் நவீன புதுப்புது யுக்திகளும், தொழில்நுட்பங்களும் பரவி வருகின்றன. இவ்வகையில் காய்கறி, கீரைகள் போன்ற உணவுத்தேவைகளை பூர்த்தி செய்ய நாம் வசிக்கும் வீட்டிற்குள்ளும், மாடியிலும் தோட்டம் அமைத்து விளைச்சல் காண்பதும் ஒருவகை வேளாண் மேம்பாடுதான்.

மரபணு விதைகளா? :

மூன்று முதல் ஐந்து நபர்கள் உள்ள குடும்பத்திற்கு, வருடத்திற்கு சராசரியாக காய்கறி மற்றும் கீரைகளுக்காக குறைந்தது ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை செலவாகிறது. அப்படி நாம் விலை கொடுத்து வாங்கும் காய்கறிகள், நஞ்சில்லாத வகையில் விளைவிக்கப்படுகிறதா என்பது மில்லியன் டாலர் கேள்வியே. அதே போல் அவை நல்ல தரமான நாட்டு ரக விதைகளை கொண்டு பயிரிடப்பட்டதா அல்லது மரபணு மாற்று மலட்டு விதைகளை கொண்டு விளைவிக்கப்பட்டதா என்பதும் மிகப் பெரிய கேள்வியே. இது போன்ற விடை தெரியாத கேள்விகளை கவனிக்க மறந்து தான் நாம் அன்றாடம் காய்கறி வாங்கி உண்கிறோம். எனவே, இயற்கை முறையில் நம் வீட்டின் மொட்டை மாடியில், வீட்டைச் சுற்றி தரைப்பரப்பில் நம்மால் விளைவிக்க முடியும். நாட்டு ரக விதைகள் பயன்படுத்துவதால், காய்கறி விளைந்த பின்பு அதிலிருந்தே அடுத்த பருவத்திற்கான விதைகளையும் நாம் சேமிக்கலாம்.

தோட்டம் அமைப்பது எப்படி ? :

குறைந்தபட்சம் 400 சதுர அடி ஆண்டு முழுவதும் வெயில் படும்படியான இடம் உங்கள் மொட்டை மாடியில் இருந்தால் போதுமானது. பழைய பிளாஸ்டிக் வாளிகள், கேன்கள், மேல் பகுதி அறுக்கப்பட்ட 25 லிட்டர் தண்ணீர் கேன்கள் ஆகியவைகளை தொட்டிகளாக பயன்படுத்தலாம். நீங்கள் பயன்படுத்தும் தொட்டிகளின் அடிப்பகுதியில் உபரி நீர் வெளிேயற வசதியாக பக்கவாட்டில் 4 துளைகள் இட்டுக் கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க நினைப்பவர்கள் தார் பாலினில் தயாரித்த ஆர்கானிக் க்ரோ பேக்-ஐ கடைகளில் வாங்கியும் பயன்படுத்தலாம்.

எந்த மண் சிறந்தது:

செம்மண் உட்பட உங்கள் பகுதியில் கிடைக்கும் எந்தவிதமான மண்ணையும் பயன்படுத்தலாம், மேல் மண்ணாக இருப்பது அவசியம். மண், தேங்காய் நார், எரு அல்லது மண்புழு உரம் சம அளவில் கலந்து, அதில் சிறு பகுதி ஆற்று மணல் சேர்த்து, ஒரு வாரம் கழித்து ஒவ்வொரு தொட்டியிலும், முக்கால் தொட்டி அளவிற்கு நிரப்பி, அதனுள் உங்களிடம் உள்ள விதைகளை விதைக்கலாம். வேளாண் அலுவலகங்களில் தரமிக்க விதைகள் வாங்கலாம். காய்கறி விதைகளின் ஊடே மஞ்சள் நிறத்தில் பூக்கும் செண்டுமல்லி, செவ்வந்தி, சூரியகாந்தி விதைகளையும் நட்டு வைக்கலாம். மஞ்சள் நிற பூ செடிகள் ஓரளவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும்.

கழுவும் நீரில் காய்கறிகள்:


விதை முளைத்து பூக்கும் பருவத்திலோ அல்லது அதற்கு முன்னதாக அதிகப்படியான பூச்சி தாக்குதல் இருந்தால் ஒரு ஸ்பூன் பெருங்காய பவுடரை தண்ணீரில் கலந்து ஸ்பிரே செய்தால் போதும். இதற்கு நீங்கள் எந்தவிதமான ரசாயன உரமும் பயன்படுத்தக்கூடாது. மாறாக நீங்கள் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் அரிசி கழுவும் தண்ணீர், மீன் கழுவும் தண்ணீர், புளித்த மோருடன் இரண்டு பங்கு தண்ணீர் கலந்து தொட்டிகளில் உள்ள செடிகளுக்கு ஊற்றி வந்தாலே போதுமானது. பழங்கள், காய்கறிகள் போன்றவற்றின் கழிவுகளையும் தண்ணீர் கலந்து வடிகட்டி தெளிக்கலாம். இவ்வாறு செய்தால் மாடித்தோட்டம் மூலம் நஞ்சில்லா காய்கறிகளை நம் வீட்டிலேயே உற்பத்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு மாடித்தோட்டத்தில் நாம் செலவு செய்யும் நேரம் நம் மனதிற்கும் உற்சாகமான சூழலை உருவாக்கும்.

வீட்டை சுற்றிலும் வளர்க்கலாம்

இயற்கை ஆர்வர் இளங்கோவன் கூறும்போது, ‘‘மாடித்தோட்டத்தைப் போலவே இதே வழிமுறையில் வீட்டுக்குள் சுற்றிய தரைப்பகுதியிலும் காய்கறிகள், கீரைகள் விளைவிக்கலாம். முதலில் அந்த இடத்தை கம்பி, கடப்பாரையால் குத்தி எடுத்து, கற்களை நீக்கி மணல் பாங்காக்கி பண்படுத்த வேண்டும். கடலை பிண்ணாக்கை ஒரு வாரம் ஊறவைத்து, நிலப்பரப்பில் சிறிது இடைவெளிகளில் சிறு பள்ளம் தோண்டி அதில் ஒரிரு கரண்டி இந்த ஊறல் கலவையை கொட்டி மூடலாம். இதனால் மண்புழுக்கள் உணவு தேடி, தரையிலிருந்து மேலேழுந்து வருவதால், நிலம் சீரடையும். தூளாக்கிய வேப்பம் பிண்ணாக்கையும் மண்ணுடன் கலந்தும் இடப்பரப்பில் தூவி வைத்து, ஒரு வாரம் காய விட்டு அதில் குழி போட்டு பாத்தி அமைத்து, செடிகள் நடலாம். நாம் எதிர்பார்த்ததை விட பலன் தரும்’’ என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • church_cathdral11

  நெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்

 • apolo_50vinkalam1

  நிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி!!

 • 18-07-2019

  18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • intelexopchina17

  சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

 • 17-07-2019

  17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்