SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

‘விலை நிலங்களாக’ மாறும் விளைநிலங்கள்

2018-03-26@ 12:01:31

வறட்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விளைநிலங்கள் எல்லாம் பிளாட்களாகவும், அப்பார்ட்மென்டாகவும் மாறி கிடக்கின்றன. மேலும், வறட்சியால் விவசாயிகள் மாற்றுத்தொழிலையும் தேடி வருகின்றனர். தமிழகத்தில் குறிப்பாக மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் நம் வாழ்வியலோடு கலந்த வேளாண் தொழில், நாளுக்கு நாள் மெல்ல அழிந்து வருகிறது. தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் இருபோக சாகுபடி சீராக நடந்து வந்த காலமெல்லாம் மலையேறி விட்டது. கடந்த சில ஆண்டுகளாக ஒருபோகத்துக்கே சாகுபடி செய்ய முடியாத நிலை நிலவுகிறது. நீர்ப்பிடிப்பில் போதிய மழையில்லாததால் கடந்த ஆண்டு பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை எட்டவில்லை.

தற்போதைய நீர்மட்டம் 113.50 அடியாக மட்டுமே உள்ளது. மறுபுறம் மூலவைகையாற்றில் மழையின்மையால் 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டமும் சரிந்து வருகிறது. இதன் நீர்மட்டம் 32.41 அடி. இரு அணைகளின் நீர்மட்டம் சரிந்து வருவதால் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் பாசன நிலங்கள் எல்லாம் காய்ந்து வருகின்றன. ஒரு காலத்தில் ராஜா போல வாழ்ந்த விவசாயிகள் நிலைமை இப்போது பரிதாபமாக காட்சி அளிக்கிறது. இதனால் விளைநிலங்களை எல்லாம் விற்க தொடங்கி விட்டனர் விவசாயிகள். பயிர் செழித்த பூமி எல்லாம் பல மாடி கட்டிடங்களாக கிடக்கிறது.

இப்போது படுத்து கிடக்கும் விவசாயம், அப்போது எப்படி இருந்தது தெரியுமா? ஆங்கிலேயர் காலத்தில் நாட்டில் நில உறவுகளை மாற்றி, நில வரி வசூல் அதிகரிப்பால், உரிமையாளர்களான விவசாயிகளே,  கூலிகளாயினர். ஆலைகளுக்கும் பலர் வேலைக்குச் சென்றனர். உயிர் வாழ்விற்கான உணவுப்பயிர்கள் விளைவித்தவர்களை பருத்தி, சணல், புகையிலை, சாயம் தரும் அவுரிச் செடியென பணப்பயிர்களையும், தேயிலை, காபி, ரப்பர் என தோட்டப்பயிர்களையும் பயிரிட வைத்தனர். இங்கிருந்தே கச்சாப்பொருட்களையும் தங்கள் நாட்டுக்கு ஆங்கிலேயர்கள் கொண்டு சேர்த்தனர்.

விவசாயம் வணிகமானதால் கிபி 1770ம் ஆண்டு முதல் 1900ம் ஆண்டு வரை 130 ஆண்டுகளில் 31 பஞ்சங்களை நம் நாடு கண்டது. பல லட்சக்கணக்கான இந்தியர்கள் இறந்தனர். இக்காலங்களில் தமிழகம் குறிப்பாக ‘சோறுடைத்த’ பெருமைக்குரிய நம் தென்மாவட்டம் அதிக உயிர்ப்பலிகளைச் சந்தித்தது. 1950ல் இந்திய ஐந்தாண்டு திட்டத்தில் ரசாயன உரங்கள் திணிக்கப்பட்டு,  1960 முதல் பசுமைப் புரட்சி பெயரில் நவீன விவசாய முறையாக  ரசாயன உரம், பூச்சி மற்றும் நோய்கொல்லி மருந்துகளும் நுழைந்தன. கால்நடைகள் இடத்தை டிராக்டர்கள் என எந்திரமயம் மேலும் வேலை வாய்ப்பைக் குறைத்ததுடன்,  தட்பவெட்பம் தாங்கும் நம் பாரம்பரிய விதைகளை இழந்து, வீரிய வித்துகளே புழக்கத்திற்கு வந்தன. மழைநீர் சேமிப்பின்றி நிலத்தடி நீர்மட்டம் பாதாளம் சென்றது.

கலப்பு உரங்கள், யூரியா, சல்பைடுகளை நம்பி தொழு உரமும், இயற்கை பூச்சி தடுப்பு முறைகளும் கைவிடப்பட்டன. புதிய அணைக்கட்டுகள் பெயரில் காடுகள் அழிக்கப்பட்டதுடன், ஏரி குளங்கள் பராமரிப்பும் கைவிடப்பட்டன. நம் தென்மாவட்டங்களில் நிலங்களின் மேல் மண்  உவர், களர் மண்ணாகியும், ரசாயனத்தால் மண்ணின் நுண்ணுயிர்களும் அழிந்திருக்கின்றன. சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டில் 23 சதவீதமாக இருந்த காடுகள் மெல்ல அழிந்து, இன்று 8 சதவீதத்திற்கும் குறைந்திருக்கிறது. வெளிநாட்டு இன கால்நடைகள் புகுத்தப்பட்டு, இதற்கென நம் நாட்டு தீவன ரகங்களை விட்டு, வீரிய ஒட்டு ரகங்கள்  உருவாகின. பல்வகை தாவரங்களின் உற்பத்தியை ஒழித்து, ஒருவகை தாவரத்தின் உற்பத்தியை ‘பசுமைப் புரட்சி’ உருவாக்கியது. நமது பயிர் சுழற்சி, கலப்புப் பயிர் பறிபோனது. நெல், கடலை, எள்ளு, பருப்பு வகைகள், மக்காச்சோளம், ராகி, கம்பு, கேழ்வரகு என பயிர் செய்தோம். இன்று இது ஒரே ஒரு ரகமாகி விட்டது.

‘பசுமைப் புரட்சி’ என்ற பெயரில் நம் நாடு உரம், பூச்சிக்கொல்லி விற்கும் சந்தையானது. துவக்கத்தில் அழிந்த பூச்சிகள், எதிர்ப்பு சக்தியை வளர்த்து இன்று புதிய பூச்சிகள் உருவாகின்றன. திறன்மிகு பூச்சிக் கொல்லிகள் மனிதர்களையே அழித்து வருகிறது. செலவில்லாத இயற்கை முறை விவசாயத்தை கைவிட்டு, செயற்கை உரம்,   உயிர்க்கொல்லிகளுக்கு இன்று பெரும் செலவு செய்கிறோம். கிராமங்கள் வறுமை, வேலையின்மையால்  தவிக்கின்றன. சிறு விவசாயிகள் நிலத்திலிருந்து அன்னியமாகி விட்டனர்.

நகர்ப்புறத்திற்கு நகன்று பலரும் கட்டிட கூலித் தொழிலாளர்களாக மாறி வருகின்றனர். நாட்டில் சமீபத்தில் நடத்தப்பட்ட விவசாயிகள் கணக்கெடுப்பில், தமிழகத்தில் மட்டுமே கடந்த பத்தாண்டுகளில் 8 லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகள் மாற்றுத் தொழில்களுக்குச் சென்றிருக்கும் அதிர்ச்சித் தகவல் வெளிவந்திருக்கிறது. இதில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களில், இந்த பாதிப்பு மேலும் எகிறி நிற்கிறது. ஒரு காலத்தில் ஊருக்கே உணவை விளைவித்து வழங்கிய விவசாயிகள், இன்று தான் உண்ணும் அரிசிக்காக ரேஷன் கடைகளில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

மறந்துவிடும் நிலையில் விவசாயம்

தேவகோட்டை தாலுகா உச்சாணி ஊராட்சி ஒருமணியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அருள் (65) கூறுகையில், “கடந்த 3 ஆண்டுகளாக விவசாயத்தை மறந்து விடும் நிலையில் விவசாயிகளாக நாங்கள் இருக்கிறோம். வானம் பார்த்த பூமியாக இருக்கிறது. குடிப்பதற்கு தண்ணீரை விலைக்கு வாங்குகிறோம். ஒவ்வொரு ஆண்டும் கடன் வாங்கி விதை நெல் விதைக்க வேண்டியது, மழையின்றி நெற்பயிர் காய வேண்டியது. இதே நிலைதான் அலுத்துப் போய்விட்டது. விளை நிலங்கள் எல்லாம் கட்டிடங்களாக மாறி வரும் நிலையை அரசாங்கம்தான் தடுத்து மாற்று வழி செய்ய வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் ஆழ்துளைக் கிணறு  அமைத்து அடித்தட்டு விவசாயிகள் பயன்பெறும் வண்ணம் செய்தால் விவசாயம் அழியாமல் பாதுகாக்கப்படும்” என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 17-06-2019

  17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 16-06-2019

  16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-06-2019

  15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • china

  சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

 • oaman_thee11

  மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்