SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உப்புநீராக மாறி வரும் நிலத்தடி நீர் : பல கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு

2018-03-14@ 12:49:00

சிதம்பரம்: சிதம்பரம் அருகே சுற்றியுள்ள இறால் பண்ணைகளால் பல கிராமங்களில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறி வருகிறது. குடிக்கவும், குளிக்கவும் தண்ணீரை விலைக்கு வாங்கும் நிலை உருவாகியுள்ளது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது தாண்டவராயன் சோழகன் பேட்டை கிராமம். இது நாளடைவில் சுருங்கி தா.சோ.பேட்டை என்றும், ஆங்கிலத்தில் டி.எஸ்.பேட்டை என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. கடந்த 2004ம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமியால் பாதிக்கப்பட்ட கிராமம் தா.சோ.பேட்டை. இக்கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 350 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது அந்த கிராமத்தை சுற்றி இயங்கும் நூற்றுக்கணக்கான இறால் பண்ணைகளால் கிராமத்தில் நீராதாரம் பாதிக்கப்பட்டு உப்பு நீராக மாறியுள்ளது. இதனால் கிராம மக்கள், விவசாயிகள், பள்ளி மாணவ, மாணவிகள் அனைவரும் பாதிப்படைந்துள்ளனர்.

இந்த கிராமம் மட்டுமல்லாமல் அருகே உள்ள பிச்சாவரம், வடக்கு பிச்சாவரம், தெற்கு பிச்சாவரம், இளந்திரை மேடு, திருவாசலடி, குச்சிப்பாளையம், ராதாவிளாகம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறி குடிநீர் தட்டுப்பாடும், விவசாயமும் பாதிக்கப்பட்டு வருகிறது. இப்பகுதி மக்கள் கடற்கரையோர மக்கள் வாழ்வுரிமை இயக்கம் என்ற அமைப்பினருடன் சேர்ந்து மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர் ஆகியோரை சந்தித்து பல்வேறு மனுக்களை அளித்தும், பல்வேறு போராட்டங்களை நடத்தியும் எவ்வித பயனுமில்லை.தா.சோ.பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் ஏற்றப்படும் குடிநீர் உவர்நீராக குடிக்க லாயக்கற்றதாக உள்ளது. இதனால் இப்பள்ளி மாணவர்கள் கையில் சாப்பாடு எடுத்து கொள்கிறார்களோ இல்லையோ... கையில் தங்கள் பகுதியில் இருந்து நல்ல குடிநீர் எடுத்து செல்கின்றனர். சில மாணவர்கள் இந்த தண்ணீரை குடித்து பல்வேறு உபாதைகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து கடற்கரையோர மக்கள் வாழ்வுரிமை இயக்க அமைப்பாளர் ரமேஷ்பாபு கூறுகையில், பல்லுயிரின பெருக்கத்திற்கான இந்தியாவிலேயே முக்கியமான இடங்களில் ஒன்று பிச்சாவரம். பிச்சாவரத்தை சுற்றி அனுமதி பெறாமல் 200க்கும் மேற்பட்ட இறால் குட்டைகள் இயங்கி வருகிறது. அனுமதி பெற்று நடத்தப்படும் இறால் பண்ணைகள் வெறும் 26 மட்டும்தான். இறால் பண்ணை நடத்துபவர்கள் முதலில் ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் எடுக்கக் கூடாது என்பது முக்கிய விதி. ஆனால் இறால் குட்டை நடத்துபவர்கள் ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீரை உறிஞ்சி எடுப்பதால் அப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர் உப்பாக மாறி வருகிறது. மேலும் இறால் பண்ணைகளின் கழிவுநீர் பிச்சாவரம் மாங்குரோவ் காடுகளில் விடப்படுகிறது. இந்த வேதி பொருட்கள் கலந்த கழிவுநீரால் உலக புகழ்பெற்ற மருத்துவ குணம் வாய்ந்த மாங்குரோவ் செடிகள் அழியும் அபாயம் ஏற்படும் என்றார்.

தா.சோ.பேட்டை கிராமத்தை சேர்ந்த இயற்கை வள பாதுகாப்பு குழு தலைவர் கார்த்திகேயன் கூறுகையில், த.சோ.பேட்டை கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளாக குடிநீர் உப்பு நீராக மாறிவிட்டது. இதனால் இக்கிராமத்தில் விவசாயம், மீன்வளம் பாதிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரம் கேள்விகுறியாகி உள்ளது. இக்கிராமத்தை ஓட்டி கடல்நீர் உட்புகாமல் இருக்க சுற்றணை ஒன்று இருந்தது. தற்போது அந்த சுற்றணை சேதமடைந்து கரைந்துவிட்டதால் அப்பகுதியை சில இறால் பண்ணையாளர்கள் ஆக்கிரமித்து உப்பனாற்றில் இருந்து தண்ணீர் எடுத்து இறால் வளர்ப்பதால் நிலத்தடிநீர் உப்பு நீராக மாறிவிட்டது என்றார்.தெற்கு பிச்சாவரத்தை சேர்ந்த விவசாயி மணிமாறன் கூறுகையில், கடந்த 2004ம் ஆண்டு சுனாமி வந்ததில் இருந்து இப்பகுதியில் விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டு விட்டது.

இப்பகுதிகளில் உள்ள இறால் பண்ணைகளாலும், தடுப்பணை இல்லாததாலும் கடல்நீர் உட்புகுந்து குடிநீர் உப்புநீராக மாறியுள்ளது. பிச்சாவரம், தா.சோ.பேட்டை, கனகரப்பட்டு, திருவாசலடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இங்குள்ள குட்டியாண்டவர் கோயில் அடிபம்பில் தண்ணீர் அடித்து எடுத்து செல்கின்றனர். அந்த தண்ணீரும் தற்போது உவர் நீராக மாறி வருகிறது என்றார். நற்கந்தன்குடி கிராமத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சி பட்டதாரி அணி நிர்வாகி திருமாறன் கூறுகையில், நிலத்தடி நீர் உப்பாக மாறியதால் மக்கள் தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் நிலை உருவாகியுள்ளது. குடிப்பதற்கு மினரல் வாட்டரும், குளிப்பதற்கு டேங்கர் வாகனம் மூலம் வரும் தண்ணீரையும் விலை கொடுத்து வாங்குகின்றனர் என்றார்.

இது குறித்து இயற்கை வள பாதுகாபு குழுவினர் சிதம்பரம் கோட்டாட்சியர் ராஜேந்திரனை சந்தித்து அளித்த மனுவில், பிச்சாவரம் சுற்றியுள்ள பகுதிகளில் இறால் பண்ணைகளால் நிலத்தடிநீர் பாதிக்கப்பட்டு உப்பு நீராக மாறியுள்ளது. இதுபோல்  சிதம்பரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை இல்லாததால் பல்வேறு கிராமங்களில் கடல்நீர் உட்புகுந்து மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. ஆகையால் கடலூர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆய்வு செய்து கிள்ளை, பிச்சாவரம், தா.சோ.பேட்டை பகுதிகளில் அனுமதியின்றி நடத்தப்படும் இறால் குட்டைகளை மூட வேண்டும், கொள்ளிடத்தில் தடுப்பணை கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-08-2019

  24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • FloatingNuclearPlant23

  ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

 • robo

  பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

 • france_modi11112

  பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

 • cleb_11_kri

  கிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்