SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நிடஹாஸ் டிராபி முத்தரப்பு டி20 பைனலுக்கு முன்னேற இந்தியா முனைப்பு : வங்கதேசத்துடன் இன்று மோதல்

2018-03-14@ 00:25:41

கொழும்பு : நிடஹாஸ் டிராபி முத்தரப்பு டி20 தொடரில், இந்தியா தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இப்போட்டி, இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது. இலங்கையில் நடைபெற்று வரும் இந்த தொடரில், ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி 3 லீக் ஆட்டத்தில் 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. மொத்த ரன்ரேட் அடிப்படையிலும் முன்னிலையில் உள்ள இந்தியா, இன்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் வங்கதேசத்துடன் மோதுகிறது. தொடக்க லீக் ஆட்டத்தில் இலங்கையிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்த இந்திய அணி, அதன் பிறகு தொடர்ச்சியாக 2 வெற்றிகளை வசப்படுத்தியதால் வீரர்கள் மிகுந்த உற்சாகமாக உள்ளனர்.
இலங்கையுடன் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர் சிறப்பாகப் பந்துவீசி ரன் குவிப்பை கட்டுப்படுத்தினர். 19 ஓவரில் 153 ரன் என்ற இலக்கை துரத்திய இந்திய அணிக்கு, கேப்டன் ரோகித் ஷர்மா 11 ரன்னிலும்  ஷிகர் தவான் 8 ரன்னிலும் வெளியேறியது அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. கே.எல்.ராகுல் துரதிர்ஷ்டவசமாக ஹிட் அவுட்டான நிலையில், ரெய்னா 27 ரன் (15 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தார்.

85 ரன்னுக்கு 4 விக்கெட் பறிபோனதால் சற்று தடுமாற்றம் கண்ட அணியை, மணிஷ் பாண்டே - தினேஷ் கார்த்திக் ஜோடியின் உறுதியான ஆட்டம் வெற்றிப்பாதைக்கு திருப்பியது. இந்தியா 17.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 153 ரன் எடுத்து வென்றது. மணிஷ் பாண்டே 42 ரன் (31 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), தினேஷ் கார்த்திக் 39 ரன்னுடன் (25 பந்து, 5 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். நான்கு ஓவரில் 27 ரன்னுக்கு 4 விக்கெட் கைப்பற்றிய ஷர்துல் தாகூர் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்த நிலையில், இன்று வங்கதேச அணிக்கு எதிராக ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து 6 புள்ளிகளுடன் கம்பீரமாக பைனலுக்கு முன்னேறும் முனைப்புடன் இந்தியா களமிறங்குகிறது. கேப்டன் ரோகித் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவருமே திருப்தியான பங்களிப்பை வழங்கி வருவதால், வங்கதேசத்தை வீழ்த்துவதில் பெரிய சிக்கல் ஏதும் இருக்காது என நம்பலாம். தென் ஆப்ரிக்க சுற்றுப்பயணத்தில் இருந்தே இயல்பான ஆடத்த்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறி வரும் ரோகித், கடைசி லீக் ஆட்டத்தில் கணிசமான ஸ்கோர் அடித்து பார்முக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெய்தேவ் உனத்காட், சாஹல் இருவரும் அதிக ரன் விட்டுக் கொடுத்தாலும், அணியில் பெரிய மாற்றம் இருக்காது என்றே தெரிகிறது. அதே சமயம், 2 போட்டியில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ள வங்கதேசம், இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை அதிகரித்துக் கொள்ள வரிந்துகட்டுகிறது. இலங்கைக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 215 ரன் குவித்து வென்றதால், மகமதுல்லா தலைமையிலான வங்கதேச அணி உற்சாகமாகவே விளையாடும் என்பதில் சந்தேகமில்லை. தமிம் இக்பால், லிட்டன் தாஸ், சவும்யா சர்க்கார், முஷ்பிகுர் ரகிம், மகமதுல்லா என முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவருமே நல்ல பார்மில் இருப்பதால் வங்கதேசம் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. டஸ்கின் அகமது, முஸ்டாபிசுர், மிராஸ் பந்துவீச்சு எடுபட்டால் மட்டுமே இந்திய ரன் குவிப்பை கட்டுப்படுத்த முடியும். இரு அணிகளுமே வெற்றிக்கு குறிவைப்பதால், இன்றைய ஆட்டத்தில் கடைசி பந்து வரை அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்தியா: ரோகித் ஷர்மா (கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், சுரேஷ் ரெய்னா, மணிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், ரிஷப் பன்ட், தீபக் ஹூடா, யஜ்வேந்திர சாஹல், முகமது சிராஜ், அக்சர் பட்டேல், விஜய் ஷங்கர், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், ஜெய்தேவ் உனத்காட். வங்கதேசம்: மகமதுல்லா (கேப்டன்), தமிம் இக்பால், சவும்யா சர்க்கார், இம்ருல் கேயஸ், முஷ்பிகுர் ரகிம் (விக்கெட் கீப்பர்), சப்பிர் ரகுமான், முஷ்டாபிசுர் ரகுமான், ருபெல் உசேன், டஸ்கின் அகமது, அபு ஹைதர், அபு ஜாயேத், அரிபுல் ஹக், நஜ்முல் இஸ்லாம், நூருல் ஹசன், மெஹிதி ஹசன், லிட்டன் தாஸ்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mo

  அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

 • 4l

  ஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

 • c1

  ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

 • b

  இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

 • to1

  குஷ்னரின் மத்திய கிழக்கு சமாதான திட்டத்திற்கு எதிராக பாலஸ்தீனியர்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்