SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்த மார்ச் 16ம் தேதி சட்டப்பேரவை சிறப்பு கூட்டம்

2018-03-13@ 21:07:43

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்த வரும் 16ம் தேதி தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை கூட்ட அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 16ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அன்றில் இருந்து 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும். மேற்கொண்டு எந்த காலஅவகாசமும் வழங்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு தமிழகத்தை சேர்ந்த அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நாடாளுமன்றத்தில் அதிமுக, திமுக எம்பிக்கள் குரல் எழுப்பி வருகின்றனர். மேலும் நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மேலாண்மை வாரியம் தொடர்பாக பிரதமரை அனைத்துக் கட்சியினர் சந்தித்து வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த வாரம் பிரதமரை சந்திக்க அரசு சார்பில் நேரம் கேட்கப்பட்டது. ஆனால் பிரதமர் அலுவலகம் நேரம் ஒதுக்க மறுத்துவிட்டது. இதற்கிடையில் மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய நீர்வளத்துைற அமைச்சகம் கடந்த 9ம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்தியது. இந்த கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கூட்டத்தில் எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது கானல் நீராகிவிடுமோ என்ற அச்சம் விவசாயிகளிடம் ஏற்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை கூட்டி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அனைத்து கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் வரும் 15ம் தேதி 2018-2019ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதன்பின்னர், சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். அந்த கூட்டத்தில் இதில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள். சட்டப்பேரவை எத்தனை நாட்கள் நடத்தப்படும் என்பது குறித்து விவாதிக்கப்படும். அந்த கூட்டத்தின்போது, காவிரி பிரச்னை தொடர்பாக சிறப்பு கூட்டத்தை கூட்டுவது தொடர்பாக முடிவு எட்டப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, மறுநாள் 16ம் தேதி இந்த சிறப்பு கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கூட்டத்தில் மேலாண்மை வாரியம் தொடர்பாக முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-01-2019

  19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • ChillaiKalanKashmir

  கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

 • bombblastcolombia

  கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

 • chinafiredrone

  மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

 • horse_apain12

  விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்