SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெண்களை குரங்கணிக்கு அழைத்து சென்ற சென்னை டிரக்கிங் கிளப் ஆபீசில் போலீசார் விசாரணை :நள்ளிரவில் பெயர் பலகை அகற்றம்

2018-03-13@ 00:48:28

சென்னை : தீ விபத்தில் சிக்கிய இளம் பெண்களை அழைத்து சென்ற சென்னை டிரக்கிங் கிளப் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னை பாலவாக்கம், விஜிபி லேஅவுட், நம்பர் 62, 2வது மெயின் ரோடு என்ற முகவரியில் உள்ள ‘சென்னை டிரக்கிங் கிளப்’ (சிடிசி) என்ற மலையேற்ற பயிற்சி நிறுவனம் தான் மாணவர்களை தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளது. வெளிநாட்டை சேர்ந்த பீட்டர் வான்கே என்பவர் தான் இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார். நாடு முழுவதும் இவர் இதுபோன்று டிரக்கிங் கிளப் நடத்துகிறார்.
அந்தந்த நாடுகளில் பல்வேறு பெயர்களில் இந்த கிளப் செயல்படுகிறது. சென்னை பாலவாக்கத்தில் வீட்டுடன் கூடிய இந்த அலுவலகத்தில் பீட்டர் மற்றும் அவருக்கு கீழ் 10 பேர் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு மலையேற்றம் பயிற்சி அளிப்பதாக விளம்பரம் செய்வார்கள். இதைபார்த்து, மலையேற்றத்தில் ஆர்வம் உள்ள இளம்பெண்கள் உள்பட பலர் இந்நிறுவனத்தை தொடர்பு கொண்டு மலையேற்ற பயிற்சி மேற்கொள்வார்கள். இங்கு மலையேற்றத்துக்கு குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. இந்த முறை டிரக்கிங் செல்ல முன்பதிவு செய்து விட்டு, உடல்நிலை காரணமாக கடைசி நேரத்தில் டிரக்கிங் செல்ல முடியாமல் தப்பித்த பெண் உறுப்பினர் ஒருவர் தனது அனுபவம் குறித்து கூறியதாவது:

ஒருமுறை இவர்களது(சென்னை டிரக்கிங்) இணையதளத்தில் பெயர்களை பதிவு செய்தாலே அவர்கள் நிரந்தர உறுப்பினர்களாக மாறிவிடுவர். இந்த சென்னை டிரக்கிங் கிளப்பில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் வாரவிடுமுறை நாட்களில் சென்னையில் பெசன்ட் நகர் பீச் உள்ளிட்ட இடங்களில் இந்த கிளப் சார்பில் நடத்தப்படும் மாரத்தானில் கலந்து கொள்வார்கள். அப்போது மலையேற்றம் குறித்து ஆர்வம் ஏற்படும். குறிப்பாக ஐடியில் பணியாற்றுபவர்கள் மனஅழுத்தத்தை குறைப்பதற்காக இதுபோன்ற மலைபயிற்சியை அதிகம் விரும்புவர். சென்னையில் இதுபோன்று பல்வேறு கிளப் உள்ளது. ஆனால் இந்த சிடிசி கிளப்பில் உறுப்பினராக வேண்டும் என்றால் கடுமையான விதிமுறைகள் பின்பற்ற வேண்டும். அதாவது, அவர்கள் ஏற்கனவே ஓட்டப்பயிற்சி, சைக்கிளிங் உள்பட பல்வேறு பயிற்சிகள் மேற்கொண்டிருக்க வேண்டும்.

இது அவர்களுக்கு முக்கிய தகுதியாக எடுத்துக்கொள்ளப்படும். அதுபோல், டிரக்கிங் செல்லும்போது அவர்கள் எந்த ஆடைகளை உடுத்த வேண்டும் என்று கூறுகிறார்களோ அதைேய கடைபிடிக்க வேண்டும். மலை பயணம் என்பதால் விலங்குகளை கவரும் வகையான ஆடை உடுத்த கூடாது. நான் ஏற்கனவே இந்த கிளப் சார்பில் டிரக்கிங் சென்றுள்ளேன். இயல்பாகவே அதற்கு ஆர்வம் இருக்க வேண்டும். ஒரு மாதத்துக்கு முன்பாகவே புக் செய்பவர்கள் தான் டிரக்கிங்கில் கலந்து கொள்ள முடியும். அதன்படி, தற்போது சென்னை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 25 பேர் பீட்டர் நிறுவனத்துக்கு சொந்தமான டிரக்கிங் கிளப்பில் மலைப்பயிற்சி மேற்கொள்வதற்காக கடந்த பிப்ரவரி மாதமே ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தனர்.

பிப்.15ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான கட்டணம் அப்போதே வசூலிக்கப்பட்டது. திட்டமிட்டப்படி, கடந்த சனிக்கிழமை இரவில் சென்னையில் இருந்து 25 பெண்கள் உள்பட 2 ஆண்கள் என மொத்தம் 27 பேர் மூணாறுக்கு சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து கொழுக்குமலை வழியாக குரங்கணிக்கு மலையேற்ற பயிற்சிக்கு சென்றனர். அப்போது தான் அவர்கள் தீ விபத்தில் சிக்கிக் கொண்டனர். இவ்வாறு அந்த பெண் உறுப்பினர் தெரிவித்தார். சம்பவம் வெளியில் கசிந்த உடன் நேற்று இரவோடு இரவாக பீட்டர் நடத்தி வந்த சென்னை டிரக்கிங் அலுவலகம் மூடப்பட்டது. அங்கிருந்த பெயர் பலகையையும் அகற்றியுள்ளனர். இதற்கிடையில், நேற்று காலை பாலாவாக்கம் கிளப் அலுவலகத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

அனுமதி வாங்கினார்களா?

பொதுவாக இதுபோன்று மலையேற்ற பயிற்சி செய்ய வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் தற்போது டிரக்கிங் சென்ற குழுவினர் முறையான அனுமதி வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

பீட்டருக்கு போலீஸ் வலைவீச்சு

சென்னை டிரக்கிங் கிளப் உரிமையாளரான பீட்டர் வான்கே தற்போது வெளிநாட்டில் உள்ளார். அவர் கடந்த 3 தினங்களுக்கு முன்பாகவே தனது வேறொரு கிளப் நடவடிக்கையை கண்காணிப்பதற்காக அங்கு சென்றுள்ளார். முறையான அனுமதி வாங்கிதான் பெண்களை வனப்பகுதிக்கு அனுப்பினீர்களா என்று பீட்டரிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

மகளிர் தின சிறப்பு சலுகை

பெரும்பாலும் இந்த மலையேற்ற பயிற்சியில் ஆண்களே அதிகம் ஈடுபடுவார்கள். ஆனால் தற்போது மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களை மட்டும் கடந்த சனிக்கிழமை அழைத்து சென்றுள்ளனர். பயிற்சி கட்டணமாக மொத்தம் ரூ.1,500 வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் பயிற்சி


தமிழகம் மட்டும் அல்லாமல் சிம்லா, இமாச்சல பிரதேசம் உள்பட இந்தியா முழுவதும் மலைப்பிரதேசங்களில் இந்த சென்னை டிரக்கிங் கிளப் சார்பில் மலையேற்ற பயிற்சி அளிக்கப்படும்.

முழு விவரமும் சேகரிக்கப்படும்

இந்த கிளப்பில் உறுப்பினராக சேரும்போதே அவர்களின் தொடர்பு எண்கள், வீட்டு முகவரி, இமெயில் முகவரி உள்பட பல விவரங்கள் சேகரிக்கப்படும். குறிப்பாக டிரக்கிங் செல்லும்போது மாற்று தொடர்பு எண்கள் வாங்கப்படும். பெற்றோர்கள் அல்லது உறவினர்களின் பெயர் மற்றும் தொடர்பு எண்கள் பதிவு செய்திருக்க வேண்டும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 12-12-2018

  12-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • ramnathgovind

  மியான்மரில் அதிபர் ஆங் சான் சூகியுடன் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

 • GuangxiZhuangcele

  தெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிரதேசத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டம்

 • chinaexpo

  சீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழா: லண்டனில் புகைப்பட கண்காட்சி

 • londonbrexit

  சர்வதேச நாடுகளுடனான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்