SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதிய டொயோட்டா யாரிஸ்

2018-03-11@ 01:34:40

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில், ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ் மற்றும் ஹூண்டாய் வெர்னா கார்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.  இந்த யுத்தத்தில் களம் காண்பதற்கு டொயோட்டாவும் முடிவு செய்துள்ளது. இதற்கு முன்னோட்டமாக டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், தனது புதிய  யாரிஸ் செடான் ரக காரை பார்வைக்கு வைத்துள்ளது. சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படும் டொயோட்டா கார்களின் நவீன டிசைன்  தாத்பரியங்களை இந்த காரும் பெற்றிருக்கிறது. முகப்பின் முத்தாய்ப்பான விஷயம், புரொஜெக்டர் ஹெட்லைட், முகப்பின் முக்கால் பகுதியை  ஆக்கிரமித்திருக்கும் க்ரில் அமைப்புடன் கூடிய பம்பர் போன்றவை இதன் பிரம்மாண்டத்தை கூட்டுகிறது.
இண்டிகேட்டர் விளக்கு, எல்இடி பார்க்கிங் லைட் ஹெட்லைட் ஹவுசிங்கின் உட்புறத்தில் இடம்பிடித்துள்ளன. பம்பரின் இருபுறத்திலும் பனி விளக்கு  கொடுக்கப்பட்டுள்ளது.

பக்கவாட்டில் செடான் காருக்குரிய தாத்பரியங்களுடன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் கவர்ச்சியான  விஷயம், டெயில் லைட்டுகள்தான். முழுவதுமான எல்இடி டெயில் லைட்டுகள் உள்ளன. கூரை அமைப்பு மெதுவாக தாழ்ந்து, பூட் ரூமுடன்  இணைந்துள்ளது. கூரையில் சுறா துடுப்பு போன்ற ஆன்டென்னா அமைப்பும் குறிப்பிடத்தக்க விஷயம். உட்புறம், கருப்பு மற்றும் பேஜ் வண்ணங்கள்  கொண்ட பாகங்களால் ஆக்கிரமித்துள்ளது. இது காரின் உட்புறத்திற்கு உயர்தரமான உணர்வை வழங்குகிறது.

இதன் கேபின் 1,700 மி.மீ அகலத்தை பெற்றிருப்பதும், சற்றே விசாலமான உணர்வை அளிக்கிறது. தொடுதிரை இன்போடெயிமென்ட் சாதனம் சென்டர்  கன்சோலில் பிரதானமாக அமர்ந்திருக்கிறது. ஸ்டீயரிங் வீல் உயரத்தை மட்டுமே அட்ஜெஸ்ட் செய்வதற்கான வசதி இருப்பது ஆச்சரியத்தையும்,  ஏமாற்றத்தையும் அளிக்கிறது. பின் இருக்கையில் போதுமான இடவசதி இருக்கிறது. முழங்கால் மற்றும் தலை இடிக்காத அளவுக்கு இடவசதி இருப்பது  விசேஷம். இந்த காரில், 60:40 என்ற விகிதத்தில் இருக்கைகளை மடக்கி விரிக்கும் வசதி சிறப்பு.

இந்த காரின் மிக முக்கிய அம்சமாக, ஏசி வென்ட்டுகள் கூரையில் அமைந்துள்ளன. அனைத்து சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக், 7 ஏர்பேக், சரிவான  மலைச்சாலைகளில் கார் நகரும்போது பின்னோக்கி செல்லாமல் தவிர்ப்பதற்கான ஹில் ஸ்டார்ட் அசிஸ்டம் வசதி, அனைத்து சக்கரங்களுக்கும் பிரேக்  பவரை சரிவிகிதத்தில் செலுத்தும் இபிடி நுட்பம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் காரை நிலைத்தன்மையுடன் செல்ல உதவும் இஎஸ்பி போன்ற  அத்தியாவசியமான அடிப்படை பாதுகாப்பு விஷயங்களை இந்த கார் பெற்றுள்ளது.

டொயோட்டா எட்டியோஸ் காரில் பயன்படுத்தப்படும் அதே 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்தான் இப்புதிய டொயோட்டா யாரிஸ் காரிலும்  பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில், எரிபொருளை உள்ளே இழுப்பதற்கும், கழிவாகும் புகையை வெளியேற்றுவதற்குமான வால்வுகளை இயக்கும்  கேம்ஷாப்ட் இயங்கு நேர இடைவெளியில் மாறுதல் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால், யாரிஸ் காரின் இன்ஜின் அதிகபட்சமாக 105.5 பிஎச்பி  பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது. எட்டியோஸ் காரைவிட யாரிஸ் கார் இன்ஜின் 15.5 பிஎச்பி கூடுதல் பவரையும், 8 என்எம்  அளவுக்கு கூடுதல் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக மாறி இருக்கிறது.

இந்த கார், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. சிவிடி ஆப்ஷன் என்பது வாடிக்கையாளர்களை பெரிதும்  கவரும் விஷயமாக இருக்கிறது. இந்த காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 20 மி.மீ அதிகரிக்கப்பட்டு, 153 மி.மீ ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்திய  சாலைகளுக்கு வரவேற்கத்தக்க மாற்றமாக இதனை கூறலாம். ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ் கார்களுக்கு கடும் போட்டியை தரும் விதத்தில், மிக  சவாலாக விலையை நிர்ணயிக்க டொயோட்டா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த புதிய கார் 8.5 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த இரண்டு மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என  எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ramnathgovind

  மியான்மரில் அதிபர் ஆங் சான் சூகியுடன் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

 • GuangxiZhuangcele

  தெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிரதேசத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டம்

 • chinaexpo

  சீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழா: லண்டனில் புகைப்பட கண்காட்சி

 • londonbrexit

  சர்வதேச நாடுகளுடனான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டம்

 • mexicomigrant

  மெக்ஸிகோவின் எல்லையான டிஜூயனா பகுதியில் முகாமிட்டுள்ள அகதிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்