SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மன அழுத்தம், பணிச்சுமைகளால் தடம்மாறும் போலீசார்: நண்பர்களா, விரோதிகளா?

2018-03-10@ 12:35:00

விடுமுறையின்றி மன அழுத்தம், தொடர் பனிச்சுமையால் மக்கள் விரோதியாக போலீசார் மாறுகின்றனரா என்ற எண்ணம் பரவலாக உள்ளது. திருவெறும்பூர் கர்ப்பிணி உயிரிழப்புக்கு காரணமானது, போலீசார் தற்கொலை உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரிப்பதால் அரசு இதற்கான காரணங்களை ஆராய்ந்து, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை அதிகரித்துள்ளது. திருவெறும்பூர் அருகே வாகன சோதனையின்போது, இன்ஸ்பெக்டர் உதைத்ததில் பைக்கில் சென்ற கர்ப்பிணி உஷா உயிரிழந்தார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. முன்னதாக, கடந்த 4ம் தேதி ஜெயலலிதா நினைவிடத்தில் மதுரை அருகே பெருங்குடியை சேர்ந்த அருண்ராஜ் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு உயிரிழந்தார். தொடர்ந்து சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் எஸ்ஐ சதீஷ்குமார், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒரு வாரத்தில் 2 தற்கொலை சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2016ல் மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த கோபிநாத் பரங்கிமலை ஆயுதப்படை பிரிவில் பணியில் இறந்தபோது துப்பாக்கியால் தன்னை சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும், சென்னையை சேர்ந்த ஒரு போலீஸ் தனது பேஸ்புக்கில், மகன் உடல்நிலையை கவனித்துக்கொள்ள விடுப்பு தராததால், தற்கொலைக்கு முயன்றதாகவும், பின்னர் விரும்பி சேர்ந்த காவலர் பணியை விட்டு விலக உள்ளதாகவும் விரக்தியாக பதிவிட்டிருந்தார். சாதாரண போலீஸ் முதல் டிஎஸ்பி விஷ்ணுப்ரியா என மேலதிகாரிகள் வரை, தற்கொலை செய்து கொள்ளும் போலீசார் பட்டியல் நீள்கிறது.

ஆண்டுக்கு 27 பேர்:  

கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரியாக 27 போலீசார் வரை தற்கொலைக்கு முயல்வதாக தேசிய குற்ற ஆவண மையம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இது இந்திய அளவில் இரண்டாவது இடம். மஹாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. 2006-2013 வரை தமிழகத்தில் 216 போலீசார் மன அழுத்தம், பணிச்சுமை உள்ளிட்ட காரணங்களால் தற்கொலை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்டப்பஞ்சாயத்து :

தமிழக போலீசுக்கு ‘மக்கள் காவலர்’ என்ற மதிப்பிருக்கிறது. ஆனால் நடைமுறையில் காவல்நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்து, லஞ்ச, லாவண்யம் என்று காக்கிச்சட்டை ரொம்பவும் கசங்கியே கிடக்கிறது. முக்கியமாக திருவெறும்பூர் அருகே இன்ஸ்பெக்டர் உதைத்து கர்ப்பிணி பலியான சம்பவம் மக்கள் மத்தியிலும், சமூக வலைத்தளங்களிலும் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிடும் சம்பவங்களும் அதிகரிக்கின்றன. போலீசாருக்கான ஒழுங்குமுறை பயிற்சிகள் இல்லை. காவல்நிலையங்களில் ஒழுக்க நெறியின்றி, அதிகளவில் ஆபாச வார்த்தைகள் பேசப்படுவதாகவும் சமீபத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

இதுகுறித்து ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘காவல்நிலையங்களில் போலீசார் மீதான பணிச்சுமை உள்ளிட்ட அழுத்தமும் ஒரு காரணம். லைட் (மிதநிலை), மீடியம் (நடுநிலை), ஹெவி (உயர்நிலை) என்ற 3 அந்தஸ்துகளில் காவல் நிலையங்களை பிரித்து, பணிகள் அதிகமிக்க இடத்தில் கூடுதல் போலீசார் நியமிக்க முடிவானது. ஆனால் இதை முறையாக நடைமுறைப்படுத்தவில்லை. மேலும் காகிதம் இல்லாத காவல்நிலையம் என்ற திட்டத்தில் கம்ப்யூட்டர் மயம் உள்ளிட்ட நடவடிக்கைகளும் முழுமையடையவில்லை. பெருகும் வழக்குகள், விரிந்த எல்லை என பலதரப்பட்ட காரணங்களால் கூடுதல் பணியில் போலீஸ் தவிக்கிறது. பாதுகாப்பு தவிர்த்த பிற அலுவலக பணிகளுக்கும், ஆளும் அரசியல்வாதிகள் உள்ளிட்டோருடன் சிலைகள் பாதுகாப்பு வரையிலும் போலீஸ் சக்தி வீணாகிறது. உண்மையைச் சொன்னால் மக்களைக் காப்பதற்கான போலீஸ் இல்லை. சட்டம் ஒழுங்கு, குற்றங்கள் எகிறி வரும் நிலையில், பணிச்சுமையில், உயரதிகாரிகள் அழுத்தத்தால் போலீஸ் போலீசாக செயல்பட வழியின்றி, மனக் கோபத்தை தங்கள் மீதும், மக்கள் மீதுமே வெளிப்படுத்துகின்றனர்,’’ என்றார்.

உடல் தகுதி?

கடந்த 2017 ஏப்ரல் - ஆகஸ்ட் வரை 83 போலீசார் வரை உயிரிழந்துள்ளனர். இதில் 15 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 29 பேர் விபத்திலும், 20 பேர் ஹார்ட் அட்டாக் உட்பட பல்வேறுவிதத்தில் உயிரிழந்துள்ளனர். விடுமுறையின்றி தொடர் பணிப்பளுவால் உடல்ரீதியாக போலீசார் பாதிக்கப்படுகின்றனரா? இதனால் உடல்நலனை கவனித்து கொள்ள முடியாத சூழல் ஏற்படுகிறதா என்ற கேள்விகளும் பரவலாக எழுந்துள்ளன. மகன், மகள் திருமணம், தந்தை, தாய் உடல்நலம் பாதிப்பு, குடும்ப மற்றும் முக்கிய விசேஷங்களுக்கு கூட விடுமுறை கிடைக்காதது உள்ளிட்ட பல காரணங்களால் மன அழுத்தமும், உடல் சோர்வும் ஏற்படுவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

22 ஆயிரம் காலியிடங்கள்

தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி 196 மகளிர் காவல்நிலையங்கள் உள்ளிட்ட 1,535 காவல்நிலையங்கள், 30க்கும் அதிகமான பிரிவுகளையும் சேர்த்து 3 லட்சத்திற்கும் அதிக போலீசார் உள்ளனர். தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரி 7 லட்சம் வழக்குகள் பதிவாகின்றன. காவல்துறை நிறைய வளர்ந்திருக்கிறது. இதற்கு ஈடாக மக்கள் பெருக்கமும், குற்றவாளிகள் பட்டியலும் பன்மடங்கு அதிகரித்துள்ளன. காவல்துறையில் மட்டும் சுமார் 22 ஆயிரம் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. தற்போது கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இவற்றை முறையாக விசாரித்து, குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர்.

நீதிமன்றம் கூறுவது என்ன?

போலீசாரின் குறைகளை தீர்க்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான பல்வேறு நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என கடந்த 2012ல் ஐகோர்ட் உத்தரவிட்டது. ஆனால் அமைக்கவில்லை. தற்போது போலீசார் தற்கொலை செய்வது அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய ஐகோர்ட், போலீசார் தற்கொலை தொடர்கதையாக உள்ளது. அவர்களுக்கு உரிய விடுப்பு வழங்கப்படுவதில்லை. குடும்ப நிகழ்ச்சியில் கூட கலந்து கொள்ள முடியாதநிலை உள்ளது. போலீசார் ஒரு மணிநேரம் வேலைநிறுத்தம் செய்தால் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு என்ன ஆகும். போலீசாருக்கு பொது விடுப்பு எத்தனை நாட்கள் வழங்கப்படுகிறது? போலீசாரின்  குறைகளை தீர்க்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவை அமைக்க வேண்டும் என்று உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதா? என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது உள்ளிட்ட பல கேள்விகளை தமிழக அரசு தரப்பில் தெரிவிக்க உத்தரவிட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-11-2018

  19-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-11-2018

  18-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 17-11-2018

  17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 3rdthiruvanamalai

  திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

 • pudukottaikaja

  கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்