SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஓட்டல், டீக்கடைகளில் சுடச்சுட பார்சல் செய்வதால் கேரி பேக் மூலம் உணவில் வேதிப்பொருள் கலப்பு

2018-03-10@ 12:31:34

புதுவையில் பெரும்பாலான ஓட்டல், டீக்கடைகளில் சுடச்சுட உணவு மற்றும் டீயை பாலித்தீன் கேரி பேக்கில் பார்சல் செய்து வழங்குகின்றனர். இதனால் கேரி பேக்கில் உள்ள வேதிப்பொருள் உணவுடன் கலந்து விடுகிறது. இந்த உணவை உட்கொள்பவர்களுக்கு நாளடைவில் புற்றுநோய் தாக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். புதுச்சேரியில் பிளாஸ்டிக் பை மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகளவில் உள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது. சுற்றுலா தளமான புதுவையில் பிளாஸ்டிக்கின் பயன்பாட்டை குறைக்கும் வகையில் கடந்த 2009ம் ஆண்டு பிளாஸ்டிக் தடை சட்டத்துக்கு அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி 50 மைக்ரான் மற்றும் அதற்கும் குறைவான தடிமனுள்ள பிளாஸ்டிக் பைகள் மற்றும் தட்டுகள் பயன்பாட்டிற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு பரவலாக காணப்படுகிறது.

அவ்வப்போது சுற்றுச்சூழல் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேரு வீதி, காந்தி வீதி உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு செய்து 50 மைக்ரான் மற்றும் அதற்கும் கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்கின்றனர். இருப்பினும், பிரச்னைக்கு நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை. பாலித்தீன் பைகள் என்பது பாலித்தீன் எனும் வேதியியல் பொருளைக் கொண்டு உருவாக்கப்படுபவை. இவற்றை மனிதன் பயன்படுத்துவதால் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாக நேரிடுகிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், உணவகங்களில் உடனடி பார்சல் செய்து கொடுப்பதை குறிப்பிடலாம். கொதிக்க, கொதிக்க குழம்பு வகைகளை பாலிதீன் பைகளில் கட்டி அப்படியே தருகிறார்கள். கொதிக்கும் குழம்பின் சூட்டில் பாலிதீன் பையும் சற்று இளகி அதனுடைய வேதிப்பொருள் குழம்பில் கலந்து விடுகிறது.

குறிப்பாக கூலித்தொழிலாளிகள், கட்டிட வேலை செய்பவர்கள் காலை மாலை வேளைகளில் டீக்கடைகளில் கேரி பேக்குகளில் டீ வாங்கி செல்வதால் அவர்களை எளிதில் நோய்தாக்கும் அபாயம் உள்ளது. தள்ளுவண்டி கடைகளில் நிலைமை இன்னும் மோசம். 50 மைக்ரானுக்கு கீழுள்ள பிளாஸ்டிக் பைகளில் மீனை பொரித்து பார்சல் செய்து கொடுக்கின்றனர். இறைச்சி கடை, மளிகை கடை, டிபார்ட்மென்டல் ஸ்டோர் உள்ளிட்ட அனைத்து வர்த்தக நிறுவனங்களிலும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு குறையவில்லை. முன்பெல்லாம் பொதுமக்கள் கடைகளுக்கு சென்றால், துணிப்பையை கையுடன் எடுத்து செல்வார்கள். பிளாஸ்டி கலாச்சாரம் வேரூன்றிய பிறகு, ஹாயாக கையை வீசி கடைக்கு சென்று வேண்டிய பொருள்களை கேரி பேக்கில் வாங்கி வருகின்றனர். அந்த அளவிற்கு பிளாஸ்டிக் பயன்பாடு மக்களின் வாழ்க்கையோடு கலந்துவிட்டது.

இதுதவிர, பிளாஸ்டிக் பைகளில் குப்பையை போட்டு வாய்க்காலில் வீசுவதும் புதுவையில் பேஷனாகி விட்டது. இதனால் மழைக்காலங்களில் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வீதிகளில் வழிந்தோடுகிறது. மேலும், 50 மைக்ரானுக்கும் குறைவான கேரி பேக்குகள் குப்பைகளில் வீசப்படுவதால், அவற்றை கால்நடைகள் உண்கின்றன. இதனால் அவற்றின் வயிற்றில் ஜீரண பிரச்சினை ஏற்பட்டு உயிரை இழக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. எனவே மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய உள்ளதாகவும், இதற்காக தொழிற்சாலைகளுக்கு ஆறு மாதம் காலக்கெடு தரப்படும் என்று அமைச்சர் கந்தசாமி கடந்தாண்டு செப்டம்பரில் அறிவித்தார். மேலும், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று பொருட்களை பயன்படுத்த ஏற்பாடு செய்யப்படும் எனவும், 6 மாதங்களுக்கு பின்னர் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எச்சரித்தார். இந்த அறிவிப்பு வெளியாகி 6 மாதங்களாகி விட்டது. ஆனால், பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்ய அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கேரி பேக்கில் உணவு வாங்கக்கூடாது

கேரி பேக்குகளில் சூடாக உணவு, டீ பார்சல் வாங்குவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து மருத்துவர்களிடம் கேட்டபோது, பொதுவாக உணவை சூடாக சாப்பிட்டாலே பாதிப்பு ஏற்படும். சாப்பாட்டை ஆற வைத்துதான் உண்ண வேண்டும். ஆனால் ஓட்டல் மற்றும் டீக்கடைகளில் பிளாஸ்டிக் கேரி பேக்குகளில் சுடச்சுட உணவு, டீ பார்சல் செய்து வழங்குகின்றனர். இதேபோல் தொடர்ச்சியாக, பிளாஸ்டிக் கேரி பேக்குகளில் பார்சல் செய்த உணவை சாப்பிட்டு வருபவர்களுக்கு எதிர்காலத்தில் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புகள் அதிகம். எனவே, கேரி பேக்குகளில் உணவு வாங்குவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றனர்.

அதிகாரிகள் கவனிப்பார்களா?

புதுவை அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சூற்றுச்சூழல் துறை அதிகாரிகள் கூறுகையில், புதுவையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்வதற்கான குழுவில் எங்களுடன், நகராட்சிகள், உணவு பாதுகாப்பு துறை, வருவாய்த்துறை, குடிமை பொருள் வழங்கல் துறை உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. அனைவரும் இணைந்து பணியாற்றினால்தான் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க முடியும். நாங்கள் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் ஆய்வு செய்து எச்சரிக்கை விடுத்து வருகிறோம்.

அதேபோல், உணவகங்கள், டீக்கடைகளில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் குடிமை பொருள் துறை அதிகாரிகள் ஆய்வு செய்யலாம். புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிகள் அவர்களது பகுதிகளுக்கு உட்பட்ட வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்து பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது என்று எச்சரிக்கலாம். இதேபோல் குழுவில் இடம்பெற்றுள்ள பல்வேறு துறையினரும் பணியாற்றினால் படிப்படியாக பிளாஸ்டிக் இல்லாத புதுவையை உருவாக்க முடியும். இதற்காக புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thirupathieight

    திருப்பதியில் 8ஆம் நாள் பிரம்மோற்சவ விழா கோலாகலம் : கல்கி அவதாரத்தில் மலையப்ப சுவாமி

  • 21-09-2018

    21-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennaipolicefunction

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

  • railwaysecurityforce

    சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

  • courtchennaispl

    சென்னையில் குற்றவழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்