SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெரியாறு அணையை கட்டி தமிழரின் தாகம் தீர்த்த வள்ளல் பென்னிகுக்: இன்று 107வது நினைவு தினம்

2018-03-09@ 15:15:45

பெரியாறு அணையை கட்டி, தென்தமிழக மக்களின் தாகம் தீர்த்த ஆங்கிலேய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுக்கின் 107வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. கடந்த 18ம் நூற்றாண்டில் வைகை ஆறு பொய்த்து போனதால் மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் (தற்போது தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம்) விவசாயம் சீர்குலைந்தது. இதனால் விவசாயத்தை மட்டுமே நம்பியிருந்த இப்பகுதி மக்கள் பசி, பஞ்சம், பட்டினியால் சொந்த நிலங்களை விட்டு புலம் பெயர்ந்தனர். மக்களின் பசி, பஞ்சத்தை போக்க அன்று பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அரபியில் கலந்த ஆற்றுநீர் தமிழகத்தில் சுந்தர மலையில் சிவகிரி சிகரத்தில் உருவாகி, பெருந்துறையாறு, சின்னஆறு, சிறுஆறு, சிறுதோணிஆறு, கட்டப்பனையாறு, இடமலையாறு, முல்லையாறு ஆகியவற்றை தன்னோடு சேர்த்துக்கொண்டு 300 கிமீ வடமேற்கு திசையில் பாய்ந்து, அரபிக்கடலில் கலக்கும் ஆற்றுநீரை தென்தமிழகம் நோக்கி திருப்பி கொண்டுவர முயற்சி செய்தனர்.

நிதி பற்றாக்குறை, சரியான திட்டமிடலின்றி அந்த திட்டம் தோல்வி அடைந்தது. ஆனால், இந்த முயற்சியில் சற்றும் தளராது மன உறுதியுடன் பெரியாற்றில் அணை கட்டி, தென்தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியவர் ஆங்கிலேயரான கர்னல் ஜான் பென்னிகுக்.  தமிழனின் தாகம் தீர்த்த வள்ளல் ஜான் பென்னிகுக்கின் 107 வது நினைவு நாள் இன்று. மறுபிறப்பில் நம்பிக்கை இல்லாத கர்னல் ஜான் பென்னிகுக், தான் உயிரோடு இருந்த காலத்தில் செய்த நற்செயல் தான் இன்று தென்தமிழகத்தை வாழவைத்துக் கொண்டிருக்கிறது.

‘இந்தியாவில்’ பிறந்தவர்

இந்தியாவில் ராணுவ ஜெனரலாக பணியாற்றிய லண்டனை சேர்ந்த பிரிகேடியர் ஜெனரல் ஜான் - சாரா தம்பதிகளின் மகனாக 1841ம் ஆண்டு, ஜன.15ல், இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் பென்னிகுக் பிறந்தார். 1849ல் சில்லியன்வாலா போரில் பென்னிகுக்கின் தந்தையும், மூத்த சகோதரர் அலெக்சாண்டரும் உயிரிழந்தனர்.

ஆரம்ப கல்வியும் இங்குதான்...

ஆரம்ப கல்வியை இந்தியாவில் முடித்த பென்னிகுக், லண்டன் பொறியியல் கல்லூரியில் ராயல் பொறியியல் பட்டப்படிப்பும், ராணுவக்கல்லூரியில் மேற்படிப்பும் முடித்தார். ராணுவ பொறியாளராக 1860ல் இந்தியா வந்த பென்னிகுக், 1864ல் ஆங்கிலேய அரசின் அழைப்பின் பேரில், அபீசினியா யுத்த நடவடிக்கையில் பங்குபெற அங்கு சென்றார். கேப்டன் பொறுப்பேற்று மூன்றாண்டு காலம் யுத்தசேவை செய்தபின் மீண்டும் இந்தியா வந்து பொறியாளராக பணி புரிந்தார்.

பெரியாறு அணை திட்ட அதிகாரி

1872ல் பென்னிகுக் தென்ஆற்காடு மாவட்ட பொறியாளாராக பொறுப்பேற்றார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் பெரியாறு அணை சர்வே திட்ட அதிகாரியாக பதவியேற்றார். முல்லை பெரியாறு அணைக்கட்டு சர்வே வேலைப்பொறுப்பு முழுவதையும் பென்னிகுக் ஏற்றுக்கொண்டார். பெரியாறு அணை கட்ட வேண்டிய இடம், மெயின் அணை கட்டும்போது நீர்வழிந்தோட சிற்றணை (பேபிஅணை), நீரில் மூழ்கும் வனப்பரப்பு, அணையின் உயரம், தண்ணீர் தேங்கும் அளவு, திறந்தவெளி கால்வாய், தமிழகப்பகுதிக்கு தண்ணீர் கொண்டுவர சுரங்கம் தோண்ட வேண்டிய பகுதி, வேலையாட்கள் தங்கும் இடம், அலுவலர்கள் குடியிருப்பு என எல்லாவற்றையும், தனது சக ஊழியர்களுடன் சர்வே செய்தார்.

37 வயதில் திருமணம்

நண்பர்களின் வற்புறுத்தலினால் தனது 37வது வயதில் லண்டனைச் சேர்ந்த கிரேஸ் ஜார்ஜினாவை திருமணம் செய்தார். தான் ஏற்றுக்கொண்ட பணிகள் குறித்து மனைவியிடம் தெரிவித்த பென்னிகுக் உடனே இந்தியாவிற்கு திரும்பினார். திருமணத்திற்கு பின் கண்காணிப்பு பொறியாளராக பதவி உயர்வு பெற்ற பென்னிகுக், பெரியாறு அணை திட்டமதிப்பீடுகளை தயார் செய்தார். 1885ல் சென்னை ராஜதானி மற்றும் திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கிடையே முல்லை பெரியாறு அணை தொடர்பாக 999 ஆண்டுகாலத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதைத்தொடர்ந்து பென்னிகுக்கின் திட்ட மதிப்பீடான ரூ.43 லட்சம் செலவில் பெரியாறு அணைக்கட்டும் பொறுப்பை  ஆங்கிலேய அரசு அவரிடம் ஒப்படைத்தது.

அடர்ந்த காட்டில்...

அன்றைய சென்னை மாகாண அரசின் கவர்னர் வென்லாக் முன்னிலையில் அணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கின. இதற்கான வேலைகளுக்கான இயந்திரங்கள் வாங்க லண்டன் சென்ற அவர், திரும்ப வரும்போது மனைவியையும், குழந்தைகளையும் உடன் அழைத்து வந்தார். அணைக்கட்டு வேலை நடக்கும் இடத்திற்கு அருகில் கட்டப்பட்ட வீட்டில் குடியிருந்து கொண்டு தனது மேற்பார்வையில் அணைக்கான வேலைகளை தொடங்கினார். பென்னிகுக் தலைமையில் பிரிட்டிஷ் ராணுவத்தின் கட்டுமானத்துறை அடர்ந்த காட்டில் இந்த அணைகட்டும் பணியினை மேற்கொண்டது.

தொழிலாளர்கள் உயிரிழப்பு

காட்டு விலங்குகள் தொல்லை, கடும்குளிர், மழை பொருட்படுத்தாது பணிகள் நடைபெற்று கொண்டிருக்கையில். தொடர் மழை காரணமாக திடீரென உருவான காட்டாற்று வெள்ளம் அடித்தரையிலிருந்து 52 அடி உயரம் வரை கட்டிய அணையை அடித்துச்சென்றது. மேலும் அந்த நேரத்தில் பரவிய காலரா தொற்றுநோயினால் ஏராளமான தொழிலாளர்களும், ஒருசில ஆங்கில பொறியாளர்களும் உயிரிழந்தனர். இதனால் அணை கட்டுமானப்பணியை நிறுத்த உத்தரவிட்ட ஆங்கிலேய அரசு, மீண்டும் இத்திட்டத்திற்கு பணம் ஒதுக்கீடு செய்ய மறுத்தது.

சொத்துக்களை விற்று...

இந்த நிலையில் மனைவியின் அனுமதியோடு இங்கிலாந்து சென்ற பென்னிகுக், தன் குடும்ப சொத்துக்களை விற்று அதன்மூலம் கிடைத்த பணத்தில், விடாமுயற்சியாக 1895ல் முல்லை பெரியாறு அணையையும், சுரங்க வாய்க்காலையும் கட்டி முடித்தார். அதே ஆண்டு அக்.11ல் கவர்னர் வென்லாக் தேக்கடிக்கு வந்து அணையை திறந்து வைத்தார். பெரியாறு அணை தண்ணீர் மூலம் நூற்றாண்டை கடந்தும் தென்தமிழகம் செழித்து வாழ்ந்து வருகிறது. அப்படிப்பட்ட பெரியாறு அணையை கட்டி தென் தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த பென்னிகுக்கின் 107வது நினைவுநாள் இன்று. இன்று தென் தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள், பொதுமக்கள் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துகின்றனர்.

பெரியாறு அணைக்காக அனைத்தையும் இழந்தார்

முதன்மை பொறியாளராக இருந்த பென்னிகுக் பெரியாறு அணை கட்டிமுடித்து  அடுத்த ஒருவருடம் சென்னை மாகாண பொதுப்பணித்துறை செயலாளராக பணியாற்றினார். ஹூப்பர்ஹில்லில் உள்ள ராயல் இந்திய பொறியியல் கல்லூரியின் கடைசி தலைவராகவும் இருந்தார். 1898ல் சென்னை சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். சுகாதார வாரிய தலைவர் பதவி வகித்த அவர், சென்னை பல்கலைக்கழகத்தின் ஆசிரியராகவும் இருந்தார். பிரிஸ்பேன் நதியின் வெள்ளப்பெருக்கில் ஏற்படும் சேதத்தை தவிர்க்க ஆஸ்திரேலிய அரசு 1899ம் ஆண்டு பென்னிகுக்கிடம் ஆலோசனை கேட்டது.

அதன் பின் ஓரிரு ஆண்டுகள் இந்தியாவில் இருந்த பென்னிகுக், தன் குடும்பத்தாருடன் இங்கிலாந்து சென்றார். பிரிட்டனில் பெரும் செல்வந்தர்கள் மட்டுமே வாழும் பகுதியில், சகல வசதியுடன் மாளிகைகளில் வாழ்ந்த பென்னிகுக்கின் குடும்பம், முல்லைப் பெரியாறு அணைக்காக செய்த பொருட்செலவுகளால், கடும் நிதி நெருக்கடிக்கு ஆளானது. இதனால் மாளிகையில் வாழ்ந்த அவர்கள் கடைசியில் அரசாங்கம் அளித்த தொகுப்பு வீடுகளில் வாழ்ந்தனர்.

வள்ளலாக வாழ்ந்த பென்னிகுக் குடும்பம் வறுமையில் வாடியது. அங்கு அவர் 1911ம் ஆண்டு மார்ச் 9ல் காலமானார். பென்னிகுக் காலமானபோது, அவருடைய ஐந்து மகள்களின் மூத்த மகளுக்கு வயது 30. அவருடைய ஒரே மகனுக்கு வயது 11. ஏழ்மை நிலையில் சுற்றத்தார் யாரும் உதவாததால் அவருடைய மூன்று மகள்களுக்கு திருமணமாகாமல், வாரிசுகள் இல்லாமலே காலமானார்கள். ஒரு மகள் ஜெர்மனிக்கு புலம் பெயர்ந்து அங்கேயே ஒருவரை மணந்து நிரந்தரமாக குடியேறினார். பிற்காலத்தில் அவருடைய ஒரே மகன் ஜான் பென்னிகுக் (ஜூனியர்) பிரிட்டனின் உயர்நீதி மன்றத்தில் வக்கீலாக பணியாற்றினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 25-03-2019

  25-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-03-2019

  24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-03-2019

  23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • SuperWormMoon

  2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்

 • sharkpalne

  உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்