SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இன்று சர்வதேச மகளிர் தினம்: பெண்மை போற்றுவோம்...

2018-03-08@ 14:02:28

‘‘சமைக்கின்ற கரங்களும் சரித்திரம் படைக்க வேண்டும்...’’ - என்று ஆசைப்பட்டார் மகாகவி பாரதியார். ஆசைப்பட்டவர் உயிரோடு இல்லை. ஆனால், அதை எல்லாம் மெய்ப்பிக்கும் விதமாக பெண்கள் அணு விஞ்ஞானம் முதல் ஆகாயம் வரை விண்ணளாவிய, சாகா வரம் பெற்ற சாதனைகளை படைத்து வருகின்றனர்.

‘ஆணுக்கு பெண் சரிசமம்’ என்று சொல்வது போல, ஒரு குடும்பத்தில் கணவர், மனைவி இருவருமே கூலி வேலை பார்த்து குடும்பத்தை ஓட்டும் நிலைதான் பரவலாக உள்ளது. என்னதான் ஆண்களுக்கு நிகராக பெண்கள் பல துறைகளில் சாதித்தாலும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையே இந்தியாவில் நிலவுகிறது. காதலிக்க மறுத்ததால் 9ம் வகுப்பு மாணவி எரித்து கொலை, ரயில்வே ஸ்டேஷனில் பெண் வெட்டி கொலை உள்ளிட்ட சம்பவங்கள் அன்றாட நிகழ்வாகவே மாறி விட்டன. இதுபோதாதென்று வேலைக்கு சென்று தனியாக திரும்பும் பெண்களை குறி வைத்து வழிப்பறி, பாலியல் பலாத்காரம் செய்வது உள்ளிட்டவைகளும் தொடர்கதையாக உள்ளன.

தாய், பாட்டி, சகோதரி, மனைவி, தோழி என பல அவதாரம் எடுக்கும் பெண்கள் மதிப்பிற்குரியவர்கள். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் நாம் வலுப்பெற தன் வாழ்நாள் முழுவதும் தியாகம் செய்பவர்கள். அவர்களை இன்றைய சர்வதேச மகளிர் தினத்தில் (மார்ச் 8) மட்டுமல்ல... அன்றாடம் போற்றி பாராட்ட வேண்டும். அவர்கள் முன்னேற நமது கரங்களை கொடுத்து தூக்கி விட வேண்டும். அதையே நாம் இன்றைய தினத்தில் உறுதிமொழியாக கொள்வோம்.

இனி பல்வேறு துறைகளில் சாதித்த பெண்களை பார்ப்போமா?

சவாலாக எடுத்து சாதித்து காட்டுவோம்: மனஉறுதியோடு சொல்கிறார் மாரி

நெல்லை மாவட்டம், சுத்தமல்லியை சேர்ந்த கணபதி மகள் மாரீஸ்வரி (31). திருமணமாகவில்லை. ஒரு சகோதரர், 2 சகோதரிகள் உள்ளனர். டிரைவரான தனது சகோதரரை பார்த்து, மாரீஸ்வரிக்கும் டிரைவிங் பழக வேண்டுமென்ற ஆசை ஏற்பட்டது. உடனே களத்தில் இறங்கி பயிற்சி பெற்று, நுணுக்கங்களையும் கற்று தேர்ந்தார். முதலில் குடும்ப கஷ்டத்திற்காக ஆட்டோ டிரைவரானார். பின்னர் தொழிலாளர் துறையில் டிரைவர் பணியிடத்துக்கு விண்ணப்பித்தார். அப்போது பலரும், ‘‘நீ ஒரு பெண்... உனக்கு எதுக்கு வேண்டாத வேலை...’’ என கூறி உள்ளனர். அதை எல்லாம் பொருட்படுத்தாமல் துணிந்து அந்த பணியில் சேர்ந்தார். சிவகங்கை மாவட்டத்தின் முதல் அரசு பெண் வாகன டிரைவர் என்ற புகழ் மாலை இவரது கழுத்தில் விழுந்தது.

அவரிடம் பேசினோம்...

பெண்கள் பரவலாக பல துறைகளில் இருந்தாலும், டிரைவர் பணியை யாரும் விரும்பி தேர்ந்தெடுப்பதில்லை. காரணம், டிரைவர் பணியில் உணவு, உறக்கம் என எதையும் சரியான நேரத்திற்கு மேற்கொள்ள முடியாது. இப்பணியில் 90 சதவீதத்துக்கும் மேல் ஆண்களே உள்ளனர். இதுவும் நான் இத்துறையை தேர்ந்தெடுத்ததற்கு முக்கிய காரணம். அதிகாரிகளை குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில் விட்டு வருகிறேன். எனது பணி வியூகத்தை பார்த்து, ஆண் டிரைவர்களே அதிசயிக்கின்றனர். நமது உடலைப்போலவே வாகனத்தை பராமரிப்பதிலும் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் வாகனம் நம் கட்டுப்பாட்டில் இருக்கும்.  தைரியமும், தன்னம்பிக்கையும் இருந்தால், எந்த துறையிலும் பெண்கள் சாதிக்கலாம். நம்மால் முடியும் என்று களமிங்குவோம்... சவாலாக எடுத்து சாதித்து காட்டுவோம்... என்று உரக்க சொல்லி விடை பெற்றார் மாரீஸ்வரி.

தடை கண்டு தளராமல் தகர்த்து எறிய வேண்டும்: வழிகாட்டுகிறார் ஆசிரியை

விருதுநகர் மாவட்டம், சாத்தூரை சேர்ந்தவர் ரமாதேவி. அ.இராமலிங்காபுரம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியை. இவர் கடந்த பிப்ரவரி மாதம் மொராக்கோ நாட்டில் நடந்த உலக மகளிர் மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதியாக பங்கேற்றார். இம்மாநாட்டில், இந்தியாவில் கல்வி, வேலைவாய்ப்பு, பெண்களின் தலைமைத்துவம் குறித்து அற்புதமாக பேசி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். மேலும், இவர் கடந்த 2014, 2015ல் ஐ.நா. சபையில், ‘‘பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள்’’ என்ற தலைப்பில் ஆசியாவின் சார்பாக பங்கேற்று பேசியுள்ளார். தற்போது பல்வேறு பள்ளி, கல்லூரிகளில், பாலின  உணர்வாக்கம், பெண்கள் தன் மேம்பாடு பெறுதல் உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி வருகிறார். சர்வதேச பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு (WCCI) என்ற அமைப்பின் இந்தியாவுக்கான தலைவராகவும் உள்ளார்.

அவரிடம் பேசினோம்...

‘‘பெண்ணியம் என்பது ஆண்களை குறை கூறுவதோ, ஆடை சுதந்திரமோ அல்ல என்பதை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். கருத்து மற்றும் பொருளாதார சுதந்திரமே ஒரு பெண்ணை, மனரீதியாக சுதந்திரமாக உணர செய்யும். சுயகவுரவத்துடன் வாழும் தன்னம்பிக்கையை கொடுக்கும். ஒரு பிரச்னை ஏற்பட்டால் உடைந்து போகாமல், சட்டரீதியாக எதிர்த்து போராடும் மன வலிமை பெண்களுக்கு வேண்டும். சட்ட உரிமைகள், போராடி வாழ்வதற்கான வழிகள் குறித்தும் பெண்கள் அறிந்திருக்க வேண்டும். தடைகள் கண்டு மனம் தளராமல் அதை தகர்த்தெறியும் மன வலிமையை நமக்கு நாமே உருவாக்கி கொள்ள வேண்டும்.

தனது பரந்த அறிவால், புத்திசாலித்தனத்தால், கடின உழைப்பால் இன்று பெண்கள் பல்வேறு துறைகளில்  தன் பணியில் சிறந்து விளங்கினாலும், அது இந்திய மகளிரில் எத்தனை சதவீதம் என்பது கேள்விக்குறிதான். கல்வி மட்டுமே பெண்களின் கைவசமிருக்கும் ஆயுதம். உடலாலும், மனதாலும் வலிமையாக்கி கொள்ளுங்கள். இந்த தேசம் உங்கள் கை வசம்.

பெண்களின் வெற்றிக்கு பின்னால் ஆணும் உண்டு: பாராட்டுகிறார் பாடகி

ராமநாதபுரத்தை சேர்ந்தவர் ஸ்ருதி (20). பிகாம் 3வது வருஷ மாணவி. கடந்த 2014ல் நடந்த பிளஸ் 2 தேர்வில் ராமநாதபுரம் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார். அதிலென்ன விசேஷம் என்கிறீர்களா? அப்போது அவர் பிரபல பின்னணி பாடகியாகவும் இருந்தார். தனது 13வது வயதில், ஒத்த வீடு என்ற படத்தில், ‘‘மன்னிக்க தெரிஞ்ச அம்மா’’ என்ற பாடல் மூலம் இவரது இசைப்பயணம் துவங்கியது. தொடர்ந்து இவர் பாடிய, ‘‘திக்கி திணறுது’’ என்ற பாடல் யூடியூப்பில் 3 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு, இவரது புகழை பட்டிதொட்டி எல்லாம் கொண்டு சேர்த்தது. தொடர்ந்து அகத்திணை படத்தில் 10 வயது சிறுமி குரலில் பாடிய, ‘‘தந்தையும் நீயே.. தாய் மடியும் நீயே...’’ என்ற பாடல் இவருக்கு,  ‘‘ஜானகி பேத்தி’’ என்ற பட்டத்தை பெற்று தந்தது. சர்வதேச அளவில் சிறந்த பாடகர்களை தேர்வு செய்யும், ‘‘ஆன்லைன் ஜட்ஜ்’’ என்ற பெருமையும் இவருக்கு, இந்த இளம் வயதில் கிடைத்துள்ளது.

அவரிடம் பேசினோம்...

பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் எது சரி? எது தவறு? என்பதை வீட்டிலே இருந்து, ஒரு தாய் பெண் குழந்தைகளுக்கு சொல்லி தரணும். இதைப்போலவே ஆண் பிள்ளைகளுக்கும், பெண்களுடன் எப்படி பழகணும், பேசணும், மதிக்கணும் என்பதை கற்றுத்தர வேண்டும். கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலைகளை சொல்லி தரலாம். ஆண், பெண் சமம் என்ற உணர்வை இருவர் மனதிலும் அழுத்தமாக விதைக்க வேண்டும். கிராமப்புறங்களில், ‘‘பெண்களா... இதெல்லாம் செய்யக்கூடாது. இது ஆண்கள் செய்வது’’ என கூறி வருகின்றனர்.

தன்னாலே முடியும் என நினைத்தால், பெண்கள் கண்டிப்பாக சாதிக்கலாம். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் இருப்பார்கள் என்பார்கள். அதுபோல ஒரு பெண்ணின் வெற்றிக்கு பின்னால் ஆண்களும் இருப்பார்கள். அது தந்தை, கணவர், சகோதரர், நண்பராக கூட இருக்கலாம். அப்படிப்பட்ட ஆண்களுக்கு தலைவணங்குகிறேன். எனக்கு இசைத்துறையில் தொடர் வாய்ப்புகள் வந்தாலும், மேலும் முக்கிய மியூசிக் டைரக்டர்கள் இசையில் பாட வேண்டும். அது இந்த மகளிர் தினத்தில் இருந்து கண்டிப்பாக நடக்கணும்...’’ என்று பாடி ஸாரி.. பேசி முடித்தார்.

மனதைரியத்துடன் எதிர்த்து மகளிர் போராட வேண்டும்: சொல்கிறார் கால்நடைகளின் காவலர்

விருதுநகரை சேர்ந்தவர் சுனிதா கிறிஸ்டி (36). பீப்புள் பார் அனிமல் அமைப்பின் மாவட்ட தலைவர். படிக்கும் போதே முதியோர், தெருக்களில் வசிப்போர், பிச்சைகாரர்களுக்காக வீட்டில் இருந்து பணத்தை திருடி உதவி செய்துள்ளார். 8ம் வகுப்பு படிக்கும் போதே பிச்சைகாரர்களுக்கு துணி துவைத்து தருவது, உணவளிப்பதை சேவையாக செய்துள்ளார். மேலும் சாலைகளில் சுற்றித்திரியும் நாய்கள், கால் நடைகள் மீது கொண்ட ஈர்ப்பால் படிப்பை தொடரவில்லை. கட்டிட பொறியாளரான தந்தை சிவகாசிக்கு இடம் பெயர்ந்ததும், 2007ல் பீப்புள் பார் அனிமல் அமைப்பை துவங்கினார். திருமணம் செய்யாமல் தனிமனுஷியாக போராடி வருகிறார்.

சுனிதா கிறிஸ்டி கூறுகையில், ‘‘தெருக்களில் திரியும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாய்கள், இறைச்சிக்காக லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட ஆயிரக்கணக்கான கன்றுகள், மாடுகளை மீட்டுள்ளேன். தற்போது வீட்டில் 40 நாய்கள், 20 மாடுகள், 5 பன்றிகளை யாரின் உதவியுமின்றி காப்பாற்றி வருகிறேன். தனி மனுஷியாக உயிரினங்களுக்காக போராடுவதால் போலீசாரின் ஆதரவு பலமுறை இருந்ததில்லை. பிரச்னை வந்தால் இந்த அமைப்பின் அகில இந்திய தலைவர் மேனகா காந்தியை தொடர்பு கொண்டு, கால்நடைகளுக்காக முடியும் வரை போராடி காப்பாற்றி வருகிறேன். வாழ்வில் தொடக்கம் இருந்தால், அதில் ஒரு முடிவு இருக்கும். நல்லது, கெட்டது எதுவாக இருந்தாலும் பெண்கள் மனதைரியத்துடன் எதிர்த்து போராட கற்றுக்கொள்ள வேண்டும்’’ என்று முடித்தார்.

சாதனை பெண் அல்ல... சரித்திர பெண் இவர்...

தமிழ் சினிமாவில் நாட்டுப்புற பாடலின் இருத்தலை அழுத்தமாக பதிவு செய்தவர்களில் கலைமாமணி கொல்லங்குடி கருப்பாயி (75) முதன்மையானவர். சில படங்களே நடித்திருந்தாலும் தமிழர்கள் வாழும் நாடுகள் முழுவதும் தனது பாடல்களால் அறியப்பட்டவர். கணவரின் மறைவுக்கு பின் அவ்வப்போது கலை இரவு மேடைகளில் மட்டுமே பாடிய இவர், அனைத்து நிகழ்வுகளிலும் இருந்தும் முழுமையாக ஒதுங்கியிருந்தார். தற்போது மீண்டும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பாடி தன் குரலுக்கு ஓய்வில்லை என வலம் வருகிறார். பல்வேறு ஊர்களில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கான அழைப்புடன் பிசியாகவே இருக்கிறார்.

அவரிடம் பேசினோம்...

‘‘சினிமா பாடல்களில் இசையின் சத்தத்தை விட வார்த்தைகளுக்கான முக்கியத்துவத்தை நாட்டுப்புற பாடல்களே அளிக்கும். தற்போது நாட்டுப்புற பாடல்கள் பாடுவோர் எல்லோரும் நல்லா வரணும். நாட்டுப்புற பாடல்களை எப்போதும் அழியாமல் காத்திட வேண்டும். என்னுடைய பாடல்களுக்கு முழுமையான பதிவுகள் இல்லாமல் போனது வருத்தம் அளிக்கிறது’’ என்றார். கணவரின் மரணத்திற்கு பின் இவர் அடிக்கடி பாடும் பாடல் மனதை தொடுவதாக உள்ளது.

அந்த பாடல் வருமாறு:

‘‘அய்யனாரு கோயிலுக்கு அடுத்து ஒரு புளிய மரம்...
அங்கதான் நானிருப்பேன்.. அண்ணாந்து பாத்திருப்பேன்..
அழுக இனி கண்ணீரில்ல.. ஆறுதலா யாருமில்ல..
என்னோட மனசரிய இங்க ஒரு நாதியில்ல..’’

கொல்லங்குடி கருப்பாயி சாதனை பெண் மட்டுமல்ல.. நாட்டுப்புற சரித்திர பெண்ணுங்கூட...!

பல துறைகளில் பெண்களின் பங்கு அதிகரிக்க வேண்டும்: கவிஞரின் கனிவான விருப்பம்

திண்டுக்கல்லை சேர்ந்தவர் பரிமளாதேவி. கவிஞர், சமூக ஆர்வலர். ‘இவள் தாரகை’ என்ற சிற்றிதழ் நடத்தி வருகிறார்.

அவரிடம் பேசினோம்...

தனது முடிவை தானே எடுக்கக்கூடிய அளவிற்கு பெண்ணிற்கு சுதந்திரம் இருக்க வேண்டும்.  திறமையை முன்னிறுத்தி பெண்கள் பார்க்கப்பட வேண்டும். சமத்துவம், நாகரிகம், அரசியல், பொது வாழ்க்கை போன்றவற்றில் பெண்கள் விழிப்புணர்வு பெற வேண்டும். தோற்றத்தையே பிரதானப்படுத்தாமல் பேச்சு, செயல்பாடு, அணுகுமுறை, தனித்திறன்மேம்பாடு  உள்ளிட்டவற்றில் பெண்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சிறுமைப்படுத்தாமல் இருப்பதே சிறப்பு. பல துறைகளிலும் பெண்களின் பங்கு அதிகரிக்க வேண்டும்.

பெண்கள் உயர்வே.. நாட்டின் உயர்வு..

மணிமேகலை (அழகப்பா பல்கலை மகளிர் துறை முதன்மை தலைவர்): இந்த மகளிர் தினத்தில் கிராமப்புற பெண்கள், நகர்புற பெண்களை காட்டிலும் மிகவும் பின் தங்கியுள்ளனர். கிராமப்புற பெண்கள் தங்களை மேம்படுத்த வேண்டும். ஆண்களுக்கு பெண்கள் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் ஆண், பெண் பாலின வேறுபாடு குறைந்து சமத்துவம் கூடும். சமூக நீதி கூடும், அப்போது தான் பெண்கள் மேம்பாடு இருக்கும். நாட்டின் வளர்ச்சிக்கு ஆண், பெண் ஒற்றுமை அவசியம்.

தேவி மாங்குடி(காரைக்குடி): பெண்கள் உயர்வே ஒரு நாட்டின் உயர்வு. இன்று பெண்கள் பல்வேறு இடங்களில் தலைமை பொறுப்பில் உள்ளனர். இன்னும் பெண்களுக்கு நாட்டில் தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும். பெண்கள் சுய உதவிக்குழுக்களை ஊக்குவித்து பெண் தொழில் முனைவோர்களை உருவாக்க வேண்டும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 25-03-2019

  25-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-03-2019

  24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-03-2019

  23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • SuperWormMoon

  2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்

 • sharkpalne

  உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்