SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலக மகளிர் தினத்தில் தில்லையாடி வள்ளியம்மையின் தியாகத்தை நினைவு கூர்வோம்

2018-03-08@ 12:57:35

“மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும்” என்று கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை பாடியுள்ளார். பெண்கள் இடம் பெறாத துறைகளே இல்லை என்ற அளவுக்கு  முன்னேற்றம் கண்டுள்ளனர். இதில் பல்வேறு பாதகங்களையும் அனுபவித்து, அவர்களுக்கு பின்வரும் பெண்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்துள்ளனர். இதில் ஜான்சிராணி லட்சுமிபாய், சரோஜினிநாயுடு, விஜயலட்சுமி பண்டிட், கல்பனா சாவ்லா என பட்டியல் நீண்டுகொண்டே போகும். அந்த வகையில், தென் ஆப்பிரிக்காவில் வசித்த இந்தியர்களின் உரிமைக்காக நடைபெற்ற அறப்போராட்டத்தில் காந்திஜியுடன் கலந்துகொண்டு தனது 16 வயதிலே உயிரிழந்த தில்லையாடி வள்ளியம்மையை உலக மகளிர் தினத்தில் நினைவு கூர்வோம்.

தென் ஆப்பிரிக்காவில் நீக்ரோக்களை வைத்து கரும்பு தோட்டங்களில் வேலை வாங்க முடியாத தோட்ட முதலாளிகள் பிரிட்டீஷ் ஆட்சியில் இருந்த இந்தியாவிலிருந்து ஒப்பந்த கூலிகளாக தென் ஆப்பிரிக்காவிற்கு அழைத்து சென்றனர். அதில் தமிழ்நாட்டிலிருந்து அதிகம் பேர் சென்றனர். அவர்கள் தென்ஆப்பிரிக்காவில் இருந்த காலத்தில் தென்ஆப்பிரிக்க நீதிமன்றம் கிறிஸ்துவ சட்டப்படியும் திருமண பதிவாளர்கள் சட்டப்படியும் நடக்காத திருமணங்கள் செல்லாது என்று அங்கு குடியேறிய இந்தியர்களுக்கு எதிராக 1913ல் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு தென்ஆப்பிரிக்காவிற்கு குடியேறிய இந்தியர்களுக்கு எதிராகவும் திருமணமான இந்திய பெண்களின் சட்டப்பூர்வமான மனைவி தகுதி கேள்விக்குறியாகவும் ஆனது. இந்த சட்டத்தை எதிர்த்து இந்திய மக்கள் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையறிந்த காந்திஜி தென்ஆப்பிரிக்காவில் இந்தியர்களின் போராட்டத்திற்கு தலைமை ஏற்று போராட்டத்தை நடத்தினார். அப்போது போராட்டக்களத்தில் தமிழர்கள் அதிகம் இருந்ததால் அவர்களுடன் பேசவும் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும், தமிழ்மொழி தெரியாமல் இருப்பதை ஒரு குறையாக நினைத்த காந்திஜி தமிழை கற்க வேண்டுமென்று விரும்பி அப்போது தென்ஆப்பிரிக்காவில் தொழில் நடத்திக்கொண்டிருந்த தமிழ் வித்வான் வேதியாப்பிள்ளை என்பவரிடமும் தம்பியப்பா செட்டியாரிடமும் தமிழ் பயின்று தமிழை எழுதவும், படிக்கவும் தேர்ச்சி பெற்றார்.

தென்ஆப்பிரிக்காவிற்கு சென்ற ஒப்பந்த கூலி தொழிலாளர்களில் நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள தில்லையாடியை சேர்ந்த முனுசாமி, மங்களம் தம்பதியும் அடங்குவர். அவர்கள் தென்ஆப்பிரிக்காவில் இருந்தபோது அவர்களுக்கு மகளாக பிறந்தவர்தான் வள்ளியம்மை என்ற பெண். இவர் தனது சிறுவயதிலேயே தென்ஆப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டத்தை எதிர்த்து காந்திஜியுடன் போராட்டக்களத்தில் குதித்தார். போராட்டக்களத்தில் இந்தியர்களின் உரிமைக்காக அவர் பேசிய பேச்சு காந்திஜியை மிகவும் கவர்ந்தது. சிறிய வயதில் வள்ளியம்மையின் விடுதலை வேட்கையை பார்த்து காந்திஜி பூரித்து போனார். போராட்டத்தில் கலந்துகொண்ட வள்ளியம்மை பீட்டர் மாரிஸ்பர்க் சிறையில் காந்திஜியின் துனைவியார் கஸ்தூரிபாய் உடன் சிறையில் அடைக்கப்பட்டார். 3 மாதம் சிறையில் இருந்த வள்ளியம்மை சிறைச்சாலையின் சித்ரவதைக்கு ஆளாகி எழுந்து நடக்க முடியாத அளவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் அவரை தென்ஆப்பிரிக்கா அரசு 1914ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ம் தேதி விடுதலை செய்தது. விடுதலை செய்யப்பட்ட வள்ளியம்மையை   சந்தித்து ஆறுதல் கூறினார் காந்திஜி. அப்போது வள்ளியம்மை காந்திஜியிடம் இந்தியர்களின் உரிமையை மீட்க சிறை சென்றதற்காக அச்சப்படவோ, கலங்கப்படவோ இல்லை. தாய்நாட்டுக்காக மீண்டும் சிறை செல்லவும், சிறை சென்று உயிரை இழந்தால் அதைவிட மகிழ்ச்சி எனக்கு வேறு எதுவும் இல்லை என்று காந்தியிடம் கூறினார். அதை கேட்ட காந்தி நெகிழ்ந்து போனார். ஆனால், அதன்பின் நீண்ட நாட்கள் வள்ளியம்மை உயிருடன் இல்லை. 1914ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி தனது 16 வயதிலே உயிர் துறந்தார்.

அதை தொடர்ந்து காந்திஜி எந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது, வள்ளியம்மையின் தியாகத்தை பற்றி சொல்லிவிட்டுதான் பேச்சை துவங்குவாராம். மேலும் தமிழகம் வந்த காந்திஜி வள்ளியம்மையின் பூர்வீக கிராமமான தில்லையாடிக்கு செல்லவேண்டுமென்று கூறி 1915ம் ஆண்டு மே 1ம் தேதி தில்லையாடி வந்து கிராம மக்களை சந்தித்து உரையாடினார். அவர் அமர்ந்து பேசிய இடத்தில் ஒரு நினைவு சின்னம் எழுப்பப்பட்டுள்ளது.

மேலும் காந்தி நூற்றாண்டு விழா நடந்தபோது 13.8.1971 அன்று அப்போதைய திமுக அரசில் முதல்வராக இருந்த கருணாநிதி, தில்லையாடியில் வள்ளியம்மைக்கு ஒரு நினைவு மண்டபம் அமைத்துள்ளார். அதில் பல அரிய புகைப்படமும், காந்திஜி அவர் நண்பர் தில்லையாடியை சேர்ந்த சுப்பிரமணிய பத்தர் என்பவருக்கு தமிழில் எழுதிய கடித நகலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.தென்ஆப்பிரிக்காவில் பிறந்தாலும் தனது பூர்வீக கிராமம் தில்லையாடி என்பதால் தில்லையாடி வள்ளியம்மை என்றே வரலாற்றில் முத்திரை பதிக்கப்பட்டுள்ளார்.

உலக மகளிர் தினத்தில் ஒவ்வொரு மகளிரும் வள்ளியம்மையின் தியாக வரலாற்றை அறிந்து கொண்டு அவர் புகழை நினைவு கூற வேண்டும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ramnathgovind

  மியான்மரில் அதிபர் ஆங் சான் சூகியுடன் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

 • GuangxiZhuangcele

  தெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிரதேசத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டம்

 • chinaexpo

  சீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழா: லண்டனில் புகைப்பட கண்காட்சி

 • londonbrexit

  சர்வதேச நாடுகளுடனான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டம்

 • mexicomigrant

  மெக்ஸிகோவின் எல்லையான டிஜூயனா பகுதியில் முகாமிட்டுள்ள அகதிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்