SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இன்று உலக மகளிர் தினம்: பெண் இனத்தை கண்ணியத்துடன் போற்றுவோம்

2018-03-08@ 12:37:48

நாடு முழுவதும் இன்று (8ம்தேதி) உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பெண்களுக்கு எதிராக தொடரும் வன்முறைகளை தவிர்த்து, கண்ணியம் காத்து பெண் இனத்தை போற்றுவதே அவலங்களுக்கு தீர்வாகும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். ‘பெண் என்பவள் பிறப்பதில்லை. உருவாக்கப்படுகிறாள்’ என பிரெஞ்சு தத்துவம் சொல்கிறது. ஒரு பெண், குழந்தையாக பிறந்தாலும், இந்த சமூகத்தில் பெண்ணாக வளர முடிவதில்லை. ஒரு தலை காதலால் ஆசிட் வீச்சு, ஆணவக்கொலைகள், வரதட்சணை கொடுமைகள், சட்டத்தில் ஆண்களுக்கு இணையான சமஉரிமை இல்லாமை என்று பிறப்பு முதல் இறப்பு வரை இப்பூமியில் வாழ்வதற்கு, தினம் தினம் ஒரு வேள்வித்தீயில் பெண்கள் எரிந்து கொண்டே தான் இருக்கிறார்கள்.

பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுவது பாலியல் ரீதியாகத்தான் என்றும், அதற்கு அடுத்தபடியாக அவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுதல் இரண்டாவது இடத்தில் இருக்கிறது என்றும், அனைத்து நாடுகளின் கணக்கெடுப்புகளின் முடிவுகளும் சொல்லுகின்றன. பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள், உரிமைகள் ரீதியிலான கொடுமைகள் குறைந்தபாடில்லை. பெண்கள் அனைத்துத் துறைகளிலும் கொடிகட்டிப் பறந்தாலும், அவர்களை போதைப் பொருளாக பார்க்கும் கண்ணோட்டத்தை, பெரும்பாலான ஆண்கள் தவிர்க்கத் தயாராக இல்லாததே இதற்கு காரணம். கவுரவ கொலை எனப்படும் ஆணவக்கொலைகளில் உயிரிழப்பது பெண்களே அதிகம். உலக அளவில் ஆணவக் கொலைகள் அதிகம் நடைபெறும் நாடுகள் பட்டியலில், இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் 73 சதவீத பெண்கள், பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று கருத்து கணிப்புகள் சொல்கிறது.

2015ல் வெளியிடப்பட்ட தேசிய குற்ற ஆவணப் பதிவேடு ஆண்டறிக்கையின்படி, 2014ம் ஆண்டில் சுமார் 34,530 பாலியல் வன்கொடுமை வழக்குகள் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2013ஐ விட இந்த எண்ணிக்கை 7 சதவீதம் அதிகம் ஆகும். இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் 90 சதவீதத்துக்கு மேல் அந்தப் பெண்ணுக்கு அறிமுகம் ஆனவர்கள். இதில் 40 சதவீதம் 19 வயதுக்குக் குறைவான சிறுமிகள். தினமும் 800க்கும் அதிகமான பெண்கள் பாலியல் கொடுமைகளாலும், மற்ற கொடுமைகளாலும் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் ஒவ்வொரு இருபது நிமிடத்துக்கும், ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடக்கிறது என்று அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

கருவில் சுமக்கும் தாயாக, அன்பு காட்டும் சகோதரியாக, நேசம் கூட்டும் தோழியாக, கனவு விதைக்கும் காதலியாக, பெண்மையின் பன்முகங்கள் அனைத்தும் ஒப்பற்ற உறவுகளின் அஸ்திவாரங்கள். தாய்நாடு, தாய்மொழி என தேசம் மற்றும் இனத்தின் அடையாளங்களுக்கு அவர்களே ஆதாரம்.  மண்ணை வளப்படுத்தும் வற்றாத ஜீவநதிகள் அனைத்தும், பெண்மையின் பெயர் தாங்கியே வருகிறது. கருணையின் இலக்கணம் அன்னை தெரசா, நிலவை தொட்டு நினைவுகளில் பதிந்த கல்பனா சாவ்லா, வெள்ளையரை எதிர்த்த வீரமங்கை வேலுநாச்சியார் என்று பெயர்களை சொல்லும் போது கருணையும், துணிச்சலும், வீரமும் மனதிற்குள் ஊடுருவி நிற்கிறது.  

பாரதிக்கு கண்ணம்மா, காந்திக்கு கஸ்தூரிபாய், பெரியாருக்கு மணியம்மை என்று சமுதாய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட அற்புத தலைவர்களுக்கு, பக்கபலமாய் நின்ற ஒப்பற்ற ெபண்மணிகளை காலம் இன்றுவரை கைகூப்பி வணங்குகிறது. தற்ேபாதைய விஞ்ஞான யுகத்தில் கல்வி, நாகரீகம், வேலைவாய்ப்பு என்று அனைத்திலும் நாடு, நொடிக்கு நொடி முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. ஆனால், போற்றி வணங்க வேண்டிய ெபண்மைக்கு பாதுகாப்பு இருக்கிறதா? என்றால் அதற்கான விடை கேள்வியாகவே இருப்பது வேதனைக்குரியது. சட்டமும், சமூகமும், திட்டமும் இறைவனின் ஒப்பற்ற படைப்பான பெண்ணினத்திற்கு துணை நிற்கும் என்பதை நாம் நம்புவோம். ஒவ்வொரு பெண்ணுக்கும் மகனாக, சகோதரனாக, காவலனாக இருந்து கண்ணியம் காத்து, பெண்ணியம் போற்றும் பண்பு, ஒவ்வொரு ஆணின் மனதிலும் பதியவேண்டும். அப்போது தான் தொடரும் துயரங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ramnathgovind

  மியான்மரில் அதிபர் ஆங் சான் சூகியுடன் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

 • GuangxiZhuangcele

  தெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிரதேசத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டம்

 • chinaexpo

  சீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழா: லண்டனில் புகைப்பட கண்காட்சி

 • londonbrexit

  சர்வதேச நாடுகளுடனான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டம்

 • mexicomigrant

  மெக்ஸிகோவின் எல்லையான டிஜூயனா பகுதியில் முகாமிட்டுள்ள அகதிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்