SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது டி20ல் வருண பகவானால் தோற்றோம்: காரணம் சொல்கிறார் கேப்டன் கோஹ்லி

2018-02-23@ 00:51:30

செஞ்சூரியன்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. முதலில் பேட் செய்து 189 ரன் குவித்த போதிலும், வருண பகவான் தங்கள் வெற்றியை பறித்து விட்டதாக கேப்டன் விராட் கோஹ்லி கூறி உள்ளார். தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்தியா வென்ற நிலையில், 2வது போட்டி செஞ்சூரியனில் நேற்று முன்தினம் நடந்தது. இந்திய அணி முதலில் பேட் செய்தது.  டாலா வீசிய ஆட்டத்தின் முதல் பந்திலேயே ரோகித் ஷர்மா கோல்டன் டக் ஆகி வெளியேறினார். ரெய்னா 31, தவான் 24 ரன் எடுத்தனர். கேப்டன் கோஹ்லி 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

90 ரன்னில் 4 விக்கெட் பறிபோன நிலையில், மணீஷ் பாண்டே, டோனி ஜோடி சேர்ந்து, தென் ஆப்ரிக்காவின் பந்துவீச்சை பதம் பார்த்தனர். மணீஷ் பாண்டே 33 பந்தில் அரைசதம் அடித்தார். ஆரம்பத்தில் அமைதியாக ஆடிய டோனி கடைசி கட்டத்தில் பவுண்டரி, சிக்சர்களை விளாசி 27 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 98 ரன் சேர்க்க இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 188 ரன் குவித்தது. மணீஷ் பாண்டே 79 ரன் (48 பந்து, 3 சிக்சர், 6 பவுண்டரி), டோனி 52 ரன் (28 பந்து, 3 சிக்சர், 4 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

கடின இலக்கை சேஸ் செய்த தென் ஆப்ரிக்க அணி 18.4 ஓவரில் 4 இழப்புக்கு  189 ரன் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது பெற்ற கிளாசன் 30 பந்தில் 69 ரன்களை விளாசினார். இதில், 7 சிக்சர், 3 பவுண்டரி அடங்கும். டுமினி 40 பந்தில் 64 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணியின்பந்துவீச்சு மிக மோசமாக இருந்தது. சாஹல் (4 ஓவர், 64 ரன்), உனாத்கட் (3.4 ஓவர், 42 ரன்) அறிமுக வீரர் சர்துல் தாகூர் (4 ஓவர், 31 ரன்), ஹர்திக் பாண்டியா (4 ஓவர், 31 ரன்) என அனைவருமே ரன்களை வாரி வழங்கினர். தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் கோஹ்லி கூறியிருப்பதாவது: ஆரம்பத்தில் விரைவாக விக்கெட் இழந்ததால், அதிகபட்சம் 175 ரன்னை எட்டுவோம் என எதிர்பார்த்தோம்.

ஆனால் மணீஷ் பாண்டே, டோனி மிகச்சிறப்பாக பேட் செய்து, அணியின் ஸ்கோரை 188 ஆக உயர்த்தினர். இது நிச்சயம் வெற்றி பெறக்கூடிய இலக்கு தான். ஆனால் வருண பகவான் எங்களை ஏமாற்றிவிட்டார். தூறல் மழை தொடர்ச்சியாக பெய்தது, நமது பந்துவீச்சாளர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தி விட்டது. தூறல் காரணமாக பந்தின் பிடிமானம் நழுவும். இந்த சூழ்நிலையில் பந்துவீசுவது மிகவும் கடினம். எனவே, வெற்றி பெறக்கூடிய போட்டி கைநழுவிப்போனது. அதே நேரத்தில் தென் ஆப்ரிக்க பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினார்கள்.

கிளாசன், டுமினி நேர்மறை எண்ணத்துடன் விளையாடி வெற்றியை வசப்படுத்தினர். இந்த வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்களே. இவ்வாறு கோஹ்லி கூறினார். இதன் மூலம் தொடர் 1-1 என்ற சமநிலையை அடைந்துள்ளது. தொடரின் வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி கேப்டவுனில் நாளை (இந்திய நேரப்படி இரவு 9.30 மணி) நடக்கிறது.

சாஹலை புரட்டி எடுத்த கிளாசன்
இந்திய அணியின் பிரம்மாஸ்திரமாக மாறிக் கொண்டிருப்பதாக கருதப்படும் சாஹல், செஞ்சூரியனில் ரன்களை வாரி வழங்கும் வள்ளலாக மாறினார். 4 ஓவர் வீசிய இவர் 64 ரன்களை கொடுத்தார். டி20 வரலாற்றில் இந்திய பந்துவீச்சாளர் கொடுத்த அதிகபட்ச ரன் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரராகி உள்ளார். இதற்கு முன் 2007ல் இங்கிலாந்துக்கு எதிராக ஜோகிந்தர் ஷர்மா 57 ரன் கொடுத்துள்ளார். சர்வதேச அளவில் 3வது இடத்தையும் சாஹல் பிடித்துள்ளார்.

இவரது ஓவரில் மட்டும் 7 சிக்சர் அடிக்கப்பட்டுள்ளது. இதுவும், டி20 வரலாற்றில், இந்தியாவின் முதல் பவுலர் ரகம்தான். இதற்கு முன் ரவீந்திர ஜடேஜா 6 சிக்சர்களை அள்ளிக் கொடுத்துள்ளார். குறிப்பாக, சாஹலை தென் ஆப்ரிக்காவின் கிளாசன் புரட்டி எடுத்தார். சாஹலின் 12 பந்தை சந்தித்த கிளாசன் 41 ரன் விளாசி இருக்கிறார். இதுவும் டி20 வரலாற்றில் இந்திய பவுலரின் பந்துவீச்சில் ஒரே பேட்ஸ்மேன் அடித்த அதிகபட்ச ரன்னாகும். இதில் 5 சிக்சர், 1 பவுண்டரியும் அடங்கும்.

டக் அவுட்டில் சாதனை
ஒருநாள் கிரிக்கெட்டில் எதிரணிக்கு மிகவும் டேஞ்சரான பேட்ஸ்மேன்களில் ஒருவரான இந்திய அணி துவக்க வீரர் ரோகித் ஷர்மா, டி20ல் ‘டக்’ அவுட் ஆவதில் சாதனை படைத்திருக்கிறார். தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இவர் முதல் பந்திலேயே டக் அவுட்டானார். டி20ல் ரோகித் டக் அவுட்டாவது இது நான்காவது முறையாகும். இதன் மூலம் அதிக டக் அவுட்டான இந்திய வீரர் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரராகி உள்ளார். முன்னாள் வீரர் ஆசிஷ் நெஹ்ரா, யூசுப் பதான் ஆகியோர் 3 டக் அவுட்டுடன் 2வது இடத்தில் உள்ளனர்.

தென் ஆப்ரிக்க தொடர் முழுவதும் ரோகித்தின் செயல்பாடு சிறப்பாக இல்லை. போர்ட் எலிசபெத்தில் நடந்த 5வது ஒருநாள் போட்டியில் மட்டும் சதம் அடித்துள்ளார். மற்றபடி, எஞ்சிய 5 ஒருநாள் போட்டியில் சேர்த்து 55 ரன் மட்டுமே எடுத்துள்ளார். டெஸ்டில் 4 இன்னிங்சில் 78 ரன் மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-01-2019

  19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • ChillaiKalanKashmir

  கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

 • bombblastcolombia

  கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

 • chinafiredrone

  மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

 • horse_apain12

  விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்