SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பட்டப்பகல் கொள்ளை

2018-02-18@ 02:02:14

வங்கித் துறையில் எவ்வளவுக்கு எவ்வளவு முன்னேறியுள்ளோமோ அதே அளவுக்கு ஊழல், முறைகேடுகளும் அதிகரித்துள்ளது. அரசியல்வாதிகளின் செல்வாக்கால் பொதுத்துறை வங்கிகளின் பணத்தை சுருட்டிக் கொண்டு வெளிநாடுகளில் தஞ்சம் அடையும் போலி தொழிலதிபர்கள் பட்டியல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கிரிக்கெட் உலகில் கொடிகட்டிப் பறந்த லலித் மோடி கோடிக் கணக்கில் பண மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பினார். அடுத்தது, விஜய் மல்லையா. வாங்கிய தொகை, கொஞ்சம் நஞ்சமல்ல 9,000 கோடி. மக்கள் வரிப்பணத்தை சுருட்டிக் கொண்டு சென்று லண்டனில் குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார். மல்லையா விவகாரம் சூடு ஆறுவதற்கு முன்னதாக, அடுத்ததாக இணைந்துள்ளார், பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி. பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு இவர் கொடுத்த திருநெல்வேலி அல்வா, 12 ஆயிரம் கோடி.

ஒரு காலத்தில், அரசு வங்கிகளால் நாட்டின் பொருளாதார நிலை வலுவான கட்டமைப்பைக் கொண்டதாக இருந்தது. கடந்த 2008ம் ஆண்டில் உலக அளவில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. ஆனால், அதன் தாக்கம் இந்தியாவில் ஓரளவுதான் எதிரொலித்தது. காரணம், வெளிநாட்டவர்கள் போன்று பங்குப்பத்திரங்கள் போன்றவற்றில் முதலீடு செய்யாமல் தங்கம், நிலம் ஆகியவற்றில் மக்கள் முதலீடு செய்ததுதான். மக்களின் பணம் வீடுகளில் முடங்கி கிடப்பதை மாற்றி, வங்கிகளுக்கு கொண்டு வருவதற்காக மத்திய அரசு கூவிக்கூவி அழைத்து வாடிக்கையாளர்களாக சேர்த்தது.
ஆனால், மக்கள் தங்கள் பணத்தை வங்கிகளில் போட்டால், அதை பணமுதலைகள் வாரி சுருட்டிக் கொண்டு தப்பி வருவது வாடிக்கையாகி வருகிறது.இவ்வளவு பணத்தை அவர்களுக்கு வாரிக் கொடுத்துவிட்டு மீண்டும் நஷ்டம் என்று அழுதுக் கொண்டிருக்கும் பொதுத்துறை வங்கிகளின் கடன் சுமையை குறைக்க 2.11 லட்சம் கோடி நிதி வழங்க மத்திய அரசு தாராள மனதுடன் முன்வந்துள்ளது வெட்கக்கேடு. இந்த வாரா கடன் சுமை பொதுத்துறை வங்கிகளில் ஏற்படக் காரணம் வங்கி துறையில் உள்ள உயர் அதிகாரிகள் துணையுடன் அரசியல்வாதிகளின் செல்வாக்கால் பெரும் தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் கடன்களைப் பெற்று திரும்பச் செலுத்துவது இல்லை. சாதாரண மக்களின் வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச பணம் இருப்பில் இல்லை என்றால் 250 வரையில் அபராதம் விதிக்கும் பொதுத்துறை வங்கிகள், இந்த பண முதலைகளுக்கு மட்டும் எப்படி இவ்வளவு கடன்களை கொடுத்து ஏமாந்த பின்னர் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையில் புகார் செய்து தங்களது பொறுப்புகளில் இருந்து ஒதுங்கிக் கொள்கிறது. அரசும் நாடாளுமன்றத்தில் ஓர் அறிக்கையை வெளியிட்டு முந்தைய ஆளுங்கட்சியின் மீது குற்றத்தை சுமத்திவிட்டு நழுவிவிடுகிறது. இது நியாயமா? சாதாரண மக்கள் வங்கியில் கடன் வாங்கினால், ஒரு மாதம் தவணை கட்டவில்லை என்றாலும் நோட்டீஸ் அனுப்புவது, கடனை திரும்ப ெசலுத்தவில்லை என்றால் ஜப்தி உள்ளிட்ட நடவடிக்கைகளுடன் லோக் அதாலத் என்ற சமரச மையம் மூலம் பணத்தை வசூல் செய்து விடுகின்றன. ஆனால், கோடிக்கணக்கில் சுருட்டிக் கொண்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லும் மோசடி பேர்வழிகளை எதுவும் செய்ய முடியாமல் கையை பிசைந்து கொண்டு இருக்கின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் இல்லை என்றால், மக்கள் மீண்டும் தங்கள் உண்டியல்களிலேயே சேமிப்பை கொண்டு செல்லும் நிலைக்கு வந்துவிடுவார்கள்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ramnathgovind

  மியான்மரில் அதிபர் ஆங் சான் சூகியுடன் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

 • GuangxiZhuangcele

  தெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிரதேசத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டம்

 • chinaexpo

  சீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழா: லண்டனில் புகைப்பட கண்காட்சி

 • londonbrexit

  சர்வதேச நாடுகளுடனான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டம்

 • mexicomigrant

  மெக்ஸிகோவின் எல்லையான டிஜூயனா பகுதியில் முகாமிட்டுள்ள அகதிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்