SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள மானாவாரி நிலங்களில் பல அடி ஆழத்தில் மணல் கொள்ளை

2018-02-14@ 12:35:44

கூடலூர்: கம்பம் நகரின் மேற்கு பகுதியில் உள்ள மானாவாரிக் காடுகளிலிருந்து, அதிகாரிகளின் ஆதரவோடு நடைபெறும் மண், மணல் திருட்டால் இப்பகுதியில் நிலத்தடி நீர், மற்றும் சுற்று சூழல் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மண் திருட்டுக்கு அதிகாரிகளே உடந்தையாக இருப்பதால் இதுகுறித்து  யாரிடம் முறையிடுவது என விவசாயிகள் புலம்புகின்றனர். கம்பம் நகரின் மேற்கு பகுதியான, மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரப்பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மானாவரி நிலங்கள் உள்ளது. விவசாயிகள் இந்த மானாவாரிக் காடுகளில் சோளம், மொச்சை, நிலக்கடலை, கேழ்வரகு, கம்பு, மற்றும் தட்டை, பாசிப்பயறு உள்ளிட்டவைகளை பயிரிட்டு வந்தனர்.

கடந்த சில ஆண்டுகளாக மழை வளம் குறைந்ததால் இப்பகுதியில் உள்ள, ஏகலூத்து ரோடு, கம்பம்மெட்டு ரோடு, புதுக்குளம் ரோடு, மணிகட்டி ஆலமரம் உள்ளிட்ட மேற்கு மலை தொடர்ச்சி அடிவார பகுதிகளில் உள்ள மானாவாரி நிலங்களில் பயிர் சாகுபடி குறைந்தது.  இதனால் ஒருசில விவசாயிகள், இப்பகுதிகளில் கொட்டை முந்திரி, மற்றும் சொட்டு நீர்பாசனம் மூலமும் விவசாயம் செய்து வருகின்றனர். தரிசாக நிலங்களை வைத்துள்ள சிலர், தங்கள் நிலங்களில் உள்ள கரம்பை மண்ணை செங்கல் சூளைக்கு விற்பனை செய்கின்றனர். ஒருசிலர் விவசாயிகளிடம் நிலங்களை குறைந்த விலைக்கு குத்தகைக்கு பேசி, கனிம வளதுறை மூலம் கிராவல் மண், கரம்பை மண் எடுக்க என அனுமதி பெற்று கரம்பை மண் மற்றும் மணல் எடுத்து லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர்.

விவசாய நிலங்களில் மண் எடுப்பதற்கு அரசு விதிகள் பல இருந்தும் அதை மீறி இப்பகுதிகளிலிருந்து தினந்தோறும் ஏராளமான டிப்பர் லாரிகளில் இரவுபகலாக மண் எடுத்துச்செல்கின்றனர். ஒரு இடத்தில் மண் எடுக்க அனுமதி பெற்ற அனுமதி சீட்டை வைத்துக்கொண்டு பல்வேறு இடங்களிலும் மண் எடுத்து வருகிறார்கள். தொடர்ந்து மண் எடுப்பதால் இந்த விவசாய நிலங்கள் சாதாரண நிலப்பரப்பிலிருந்து சுமார் 20 முதல் 30 அடிவரை பள்ளமாக இருப்பதுடன் மண்ணில் புதையுண்ட நகரம் போல் காட்சி அளிக்கிறது. மண்திருட்டை தடுக்கவேண்டிய உள்ளூர் கிராம நிர்வாக அதிகாரி முதல், ஆர்.ஐ, தாசில்தார், ஆர்.டி.ஓ மற்றும் கனிம வளத்துறை அதிகாரிகள் என அணைவரும் மண் கடத்தல் காரர்களின் கவனிப்பால் இதை கண்டுகொள்வதில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் மண் திருட்டுக்கு அதிகாரிகளே உடந்தையாக இருப்பதால் இதுகுறித்து  யாரிடம் முறையிடுவது என விவசாயிகள் புலம்புகின்றனர்.

எனவே அதிகாரிகளின் ஆதரவோடு நடைபெறும் இந்த மண் திருட்டை தடுக்க அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது பற்றி அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி கழுவன் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை பசுமை நிறைந்த விவசாயநிலமாக இருந்த கம்பம் நகரின் மேற்கு பகுதியான மணிகட்டி ஆலமரம் பகுதி இப்போது அகழ்வாராய்ச்சி நடத்திய இடம்போல் உள்ளது. விவசாயநிலங்களில் மூன்று அடிக்குமேல் மண் எடுக்கக்கூடாது, மண் எடுக்க வாகனங்கள் பயன்படுத்தக்கூடாது என்ற அரசு விதிகள் காற்றில் பறக்கவிட்டு இப்பகுதியில் மண்திருட்டு நடைபெறுகிறது.

அதிகாரிகளின் ஆதரவோடு  ஒரு இடத்தில் மண் எடுக்க அனுமதி பெற்ற அனுமதி சீட்டை வைத்துக்கொண்டு பல்வேறு இடங்களில் மண் எடுத்து வருகிறார்கள். இப்படி அனுமதி இன்றி எடுக்கும் கரம்பை மண்னோடு, ஓடைப்பகுதியில் மணலையும் எடுத்து செல்கின்றனர், இதனால் நிலத்தடிநீர் பாதிக்கும் அபாயம் உள்ளது. மழை வளம் குறைந்த இந்த காலகட்டத்தில் தொடர்ந்து மண், மணல் திருட்டு நடைபெற்றால், மானாவாரி நிலங்கள் பாலைவனம் ஆகும் அபாயம் உள்ளது, இது தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bji

    முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

  • suvami

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

  • mango

    கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

  • earth

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

  • airshow

    பாரிசில் நடைபெற்ற 53 வது சர்வதேச விமான கண்காட்சி: போயிங் போன்ற பல்வேறு விமானங்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்