SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடம்பூர் மலைப்பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்டு குட்டி யானை அவதி

2018-02-14@ 11:59:51

சத்தியமங்கலம்:  சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட கடம்பூர் மலைப்பகுதியில் உடல்நலம் குன்றிய நிலையில் படுத்துக்கிடக்கும் குட்டி யானையை தாய் யானை சுற்றி வருவதால் வனத்துறையினர் சிகிச்சை அளிக்க முடியாமல் திணறி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ளது கடம்பூர் மலைப்பகுதி. நேற்றுமுன்தினம் இரவு இங்குள்ள கரளியம் கிராமத்திலிருந்து உகினியம் செல்லும் சாலையில் குட்டியானை ஒன்று சோர்வடைந்த நிலையில் சுற்றித்திரிந்துள்ளது. இதைக்கண்ட பொதுமக்கள் சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த சத்தியமங்கலம் வனச்சரகர் ஜான்சன் மற்றும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று யானையை வனத்திற்குள் விரட்ட முயற்சித்தனர். ஆனால் குட்டியானை சோர்வடைந்த நிலையில் இருந்ததால் வனப்பகுதிக்குள் செல்ல மறுத்துவிட்டது.

இந்நிலையில் நேற்று காலை கரளியம் கிராமத்தை சேர்ந்த  விவசாயி ஈஸ்வரன்(48) என்பவருக்கு சொந்தமான மக்காசோளம் அறுவடை செய்யப்பட்ட விவசாய நிலத்தில் குட்டியானை படுத்துக்கிடந்தது. அருகே தாய் யானை சோகத்துடன் நின்றிருந்தது. இதைக்கண்ட வனத்துறையினரும், கிராம மக்களும் இணைந்து பட்டாசுகளை வெடித்து தாய் யானையை விரட்ட முயற்சித்தனர். ஆனால் தாய் யானை குட்டியானையை சுற்றியபடி வனப்பகுதிக்கு செல்லாமல் அடம் பிடித்தது.
யானையை 15 முறை முயற்சித்தும் பட்டா நிலத்திலிருந்து வனப்பகுதிக்கு விரட்டியடிக்க முடியவில்லை. குட்டியானை படுத்திருக்கும் இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் வனப்பகுதி உள்ளதால் தாய் யானை குட்டியை விட்டு பிரிந்து செல்லாமல் அருகே உள்ள வேலி மறைவில் மறைந்து நின்றுகொண்டு படுத்துக்கிடக்கும் குட்டியானையை கண்காணித்து வருகிறது.

நேற்று மாலை 4 மணிக்கு வனத்துறை கால்நடை மருத்துவர் அசோகன் சம்பவ இடத்திற்கு வந்து குட்டியானையை பரிசோதித்து சிகிச்சையளிக்கும் பணியை தொடங்கினார். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது. உடல்நலம் குன்றிய நிலையில் படுத்துக்கிடக்கும் குட்டியானை சுமார் 4 வயது மதிக்கத்தக்க ஆண்குட்டியாகும். தாய் யானை குட்டியானையை பிரியாமல் சுற்றி வருவதால் பொதுமக்கள் யாரும் யானை இருக்கும் இடத்திற்கு வரவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளோம். இரவு, பகலாக குட்டியானையை கண்காணித்து சிகிச்சை அளிக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-02-2019

    17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

  • TitanicReplicaChina

    முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்