SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இடதுசாரிகள் வெற்றி குறைவு

2018-02-14@ 00:57:29

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் கடந்த 1925ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் (சிபிஐ) கட்சி தொடங்கப்பட்டது. கடந்த 1957ம் ஆண்டு கர்நாடகா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் மற்றும் மக்களவைக்கு ஒரே சமயத்தில் தேர்தல் நடந்தது. அத்தேர்தலில் மக்களவையில் பலமான எதிர்க்கட்சியாக சிபிஐ விளங்கியது. அதே சமயத்தில் கேரளாவில் ஆட்சியையும் பிடித்தது. ஆனால் கர்நாடக மாநிலத்தில் இடதுசாரி கொள்கை மீது மக்களிடம் நம்பிக்கை ஏற்படவில்லை. 20 தொகுதியில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. 9 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. போட்டியிட்ட 20 தொகுதிகளில் மொத்தம் 18.9 சதவீதம் வாக்குகள் கிடைத்தது.

1962ல் நடந்த தேர்தலில் 31 தொகுதிகளில் போட்டியிட்டு 3 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 23 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. மொத்த தொகுதிகளில் பதிவான வாக்குகளில் 15.29 சதவீதம் கிடைத்தது. கடந்த 1964ம் ஆண்டு பிளவு ஏற்பட்டு இந்திய கம்யூனிஸ்ட் (சிபிஐ) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஐஎம்) என இரண்டாக உடைந்தது. அதை தொடர்ந்து நடந்த தேர்தல்களில் தங்கவயல், பாகேபள்ளி உள்ளிட்ட சில தொகுதிகளில் ஓரிரு முறை வெற்றி பெற்றது. பிற கட்சிகளை காட்டிலும் இடது சாரி கட்சிகளின் வெற்றி கர்நாடகாவில் மிகவும் குறைவு.

நம்பிக்கை

* ஐதராபாத்-கர்நாடக பகுதியில் ராகுல்காந்தி மேற்கொண்ட நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் அப்பகுதி மக்களின் மனதில் பெரியளவில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வரும் பேரவை தேர்தலில் மிகவும் பின்தங்கியுள்ள  ஐதராபாத்-கர்நாடக பகுதி மக்கள் காங்கிரசுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
 - தினேஷ் குண்டுராவ்.
* நாட்டு மக்களின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் தற்போது பிரதமர் மோடி மட்டுமே. அவரால் மட்டுமே இந்தியாவை அனைத்து துறையிலும் பலமான நாடாக மாற்ற முடியும் என்ற எண்ணம் வளரும் சமூகத்தினரிடம் ஏற்பட்டுள்ளது. அதன் பிரதிபலிப்பு வரும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜவுக்கு ஆதரவாக எதிரொலிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
 - எஸ்.சுரேஷ்குமார்.

செவிவழி செய்தி

* சிக்கநாயகனஹள்ளி தொகுதி மஜத எம்.எல்.ஏ. சுரேஷ்பாபு தனது 48வது பிறந்த நாளை முன்னிட்டு தேசிய வித்யாபீடத்தில் உலக நன்மைக்காக யாகம் நடத்தினார். அதில் பங்கேற்ற சுமார் 1,500 பேருக்கு வேட்டி, சேலை, ரவிக்கை, வளையல், பூஜை பொருட்கள் பரிசாக வழங்கினார்.  அங்கன்வாடி, ஆஷா மற்றும் பள்ளியில் சமையல் செய்யும் சுமார் 700 பேருக்கு குக்கர் பரிசாக வழங்கியுள்ளார். தேர்தல் தேதி அறிவித்தால் இதுபோன்ற பரிசுகள் வழங்க முடியாது என்பதால் பிறந்த நாள் என்ற பெயரில் வாக்காளர்களை கவர்ந்துள்ளதாக பேசப்படுகிறது.

அனிதா போட்டியிடுவாரா?

தேர்தல் என்றாலே முன்னாள் பிரதமர் தேவகவுடா குடும்பத்தில் எத்தனை பேர் களத்தில் குதிப்பார்கள் என்ற விவாதம் அரசியல் வட்டாரத்தில் ஏற்படுவது சகஜம். வரும் தேர்தலில் எச்.டி.குமாரசாமி (ராம்நகரம்), எச்.டி.ரேவண்ணா (ஹோளேநரசிபுரா) ஆகியோர் போட்டியிடுவது உறுதி. அவர்கள் தவிர அனிதாகுமாரசாமி (சென்னபட்டனா), பவானி ரேவண்ணா அல்லது அவரது மகன் பிரஜ்வல்ரேவண்ணா (கே.ஆர்.பேட்டை அல்லது சாமுண்டீஸ்வரி ஆகிய தொகுதிகளி–்ல்) போட்டியிடுவார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

  இந்நிலையில் ஷிவமொக்கா மாவட்டம், தீர்த்தஹள்ளியில் மக்கள் விழிப்புணர்வு யாத்திரையில் நேற்று பங்கேற்ற எச்.டி.குமாரசாமியிடம் வரும் தேர்தலில் சென்னபட்டனா தொகுதியில் அனிதாகுமாரசாமி போட்டியிடுகிறாரா? என்று செய்தியாளர்கள் கேட்தற்கு அனிதாவை தேர்தலில் நிறுத்துவோம் என்று நாங்கள் யாரும் சொல்லவில்லை. நீங்களே கற்பனை செய்துகொண்டால் நான் என்ன சொல்ல முடியும் என்று மழுப்பலாக பதில் கொடுத்தார்.

தினம் ஒரு தகவல்

குடியரசு துணைத்தலைவரான பி.டி.ஜத்தி மாநிலத்தின் பாகல்கோட்டை மாவட்டம், ஜமுகண்டி தாலுகாவில் பிறந்த பி.டி.ஜத்தி, சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றதின் மூலம் சிறைவாசம் அனுபவித்தார். ஜமுகண்டி நகரசபை தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டதின் மூலம் அரசியலில் கால் பதித்த அவர், பின்னர் பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

அமைச்சர், மாநில முதல்வர், புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர், ஒடிஷா மாநில ஆளுநர் என பல பதவிகள் வகித்தார். நாட்டின் குடியரசு துணைத்தலைவராக பொறுப்பு வகித்த முதல் கன்னடர் என்ற பெருமையும் அவருக்குள்ளது. நாட்டின் குடியரசு தலைவராக இருந்த பக்ருதீன் அலி அகமது கடந்த 1977ல் மறைந்தபோது,  6 மாதங்கள் குடியரசு தலைவர் (பொறுப்பு) பதவியும் வகித்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • africaslavarieshouse

    1,700ம் நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்காவில் அடிமைகளுக்காக உருவாக்கப்பட்ட பகுதி: மக்களின் பார்வைக்கு திறப்பு

  • southwestchinaflo

    தென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி!

  • turkeyprotest

    துருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்

  • 21-08-2019

    21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்