SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறப்பு ; எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

2018-02-13@ 00:13:31

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை திமுக, காங்கிரஸ், பாஜ, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் டி.டிவி..தினகரன் புறக்கணித்தனர். தமிழக சட்டப்பேரவையில் காந்தி, பெரியார், அண்ணா, அம்பேத்கர், எம்ஜிஆர் உட்பட 10 தலைவர்களின் படங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. தற்போது 11வது தலைவராக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்திறப்பு விழா 12ம் தேதி (நேற்று) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு திமுக, காங்கிரஸ், பாமக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும் திட்டமிட்டபடி ஜெயலலிதா படம் திறப்பு விழா நிகழ்ச்சி தமிழக அரசு சார்பில் நேற்று நடைபெற்றது.

அதன்படி நேற்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை வளாகத்தில் படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி சட்டப்பேரவை வளாகம் முழுவதும் வண்ண வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.  தலைமை செயலகத்தின் நுழைவு வாயில் பகுதியில் வாழை தோரணங்கள் மற்றும் தலைமை செயலக கட்டிடத்தின் அனைத்து நுழைவு வாயிலிலும் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சட்டப்பேரவை வளாகத்தின் மையப் பகுதியில் ஆளும்கட்சி வரிசைக்குள் உள்ள தூணில் ஜெயலலிதாவின் முழு உருவ படம் வைக்கப்பட்டிருந்தது. அந்த படம் 7 அடி உயரமும், 5 அடி அகலமும் கொண்டது. ஜெயலலிதா படத்திற்கு கீழே “அமைதி, வளம், வளர்ச்சி” ஆகிய வாசகங்கள் இடம்பெற்று இருந்தன. காலை 9 மணி முதலே  எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் சட்டப்பேரவைக்குள் வந்தனர்.இந்த விழாவை திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் எம்எல்ஏக்கள் புறக்கணித்திருந்தனர். அதோடு சுயேச்சை எம்எல்ஏ டி.டி.வி.தினகரன், மனிதநேய ஜனநாயக கட்சி உறுப்பினர் தமிமுன் அன்சாரி ஆகியோரும் புறக்கணித்தனர்.

இதனால் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் இருக்கையில் அதிமுக எம்பிக்கள், அட்வகேட் ஜெனரல் விஜய நாராயண், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் அமர வைக்கப்பட்டிருந்தனர். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இருக்கை மட்டும் காலியாக இருந்தது. ஆனால், எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன் இருக்கையில் மதுசூதனன் அமர்ந்திருந்தார். முன் வரிசையில் கே.பி.முனுசாமி, பொன்னையன், வைத்திலிங்கம், பி.எச்.பாண்டியன், மைத்ரேயன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் அமர்ந்திருந்தனர். முதல்வர் இருக்கையும் காலியாக இருந்தது. சபாநாயகர் இருக்கை அகற்றப்பட்டு அங்கு சிறிய அளவிலான மேடை அமைக்கப்பட்டிருந்தது. சரியாக 9.30 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை, அரசு கொறடா ராஜேந்திரன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சட்டப்பேரவை செயலாளர் பூபதி ஆகியோர் வந்து மேடையில் அமர்ந்தனர். மேடையில் இருந்தவர்களுக்கு சட்டப்பேரவை செயலாளர் பூபதி பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசு வழங்கினார்.

பின்னர் 9.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. சட்டமன்ற பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் வரவேற்றார். இதைத்தொடர்ந்து சரியாக காலை 9.42 மணிக்கு தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் தனபால் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்தை ரிமோட் கன்ட்ரோல் மூலம் திறந்து வைத்தார். அப்போது, ஜெயலலிதா பிரசார மேடைகளில் இசைக்கப்படும், `தங்கத்தாரகையே வருக... வருக...’’ என்ற பாடல் இசைக்கப்பட்டதுடன், பேரவையில் இருந்த அதிமுக எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் வாழ்க கோஷம் எழுப்பி முழக்கமிட்டனர். அதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் ஆகியோர் வாழ்த்தி பேசினர். அரசின் தலைமை கொறடா ராஜேந்திரன் நன்றி கூறினார். பேரவை தலைவரின் சிறப்பு தனி செயலாளர் சீனிவாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

படத்திறப்பு நிகழ்ச்சிக்கு இடையே, சட்டப்பேரவையில் ஜெயலலிதா 16-5-2013 மற்றும் 23-1-2016 அன்று பேசிய பேச்சுக்கள் ஒலிபரப்பப்பட்டது. விழா முடிவில், ஜெயலலிதாவின் படத்தை வரைந்த சென்னை எழும்பூரில் உள்ள அரசு கவீன் கலைக்கல்லூரி முன்னாள் பேராசிரியர் மதியழகனுக்கும் நினைவு பரிசு மற்றும் பொன்னாடை அணிவித்து பாராட்டப்பட்டது. பின்னர் 10.54 மணிக்கு நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவடைந்தது.
இந்த விழாவில் எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்திருந்தனர்.

11வதாக இடம் பெற்ற முதல் பெண் தலைவர் படம் ... 3 மாதத்தில் வரைந்த படம்:

தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் காந்தி, ராஜாஜி, திருவள்ளுவர், அண்ணா, காமராஜர், பெரியார், அம்பேத்கர், முத்துராமலிங்க தேவர், காயிதே மில்லத், எம்ஜிஆர் ஆகிய 10 தலைவர்கள் படம் உள்ளது. தற்போது 11வது தலைவராக, அதுவும் முதல் பெண் தலைவராக ஜெயலலிதா படம் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா முழு உருவ படத்தை, சென்னை எழும்பூரில் உள்ள கவீன் கலைக்கல்லூரியின் முன்னாள் பேராசிரியரும் ஓவியருமான மதியழகன் வரைந்து இருந்தார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது, ஜெயலலிதா படத்தை வரைவதற்கு 3 மாதங்கள் எடுத்துக் கொண்டதாக கூறினார். சட்டப்பேரவை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த 10 படங்களுமே ஓவியர் மூலம் வரையப்பட்ட படங்கள் ஆகும்.மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-02-2019

  18-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 17-02-2019

  17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 16-02-2019

  16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • BrightBrussels

  ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

 • francelemon

  பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்