SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காதல் மேகம் பொழிந்த கண்ணீர் மழை: இனித்த காதல்... கசந்த கதை (உண்மைக் கதை2)

2018-02-12@ 14:11:28

காதல் எல்லோருக்கும் பொதுவானது... யாருக்கு ... எப்போது... வரும்? யாராலும் சொல்ல முடியாது. ஆனால் நான் சொல்லியிருக்கிறேன் ‘எனக்கு வரவே வராதடி’ என்று...  ஆனால் தோழிகள் சிரிப்பார்கள். காதல் என்றால் என்னவென்று எனக்கு  தெரியாத வயதில், ‘காதல் கடிதம்’ நீட்டியவர்கள் பலர். ‘நீ இல்லாவிட்டால் செத்துப்போவேன்’ என்ற பலரும் குழந்தை குட்டிகளுடன் மகிழ்ச்சியாகவே இருக்கின்றனர். எனக்கு அப்போது எரிச்சலாக இருந்தது. எந்த ஆண் பேசினாலும் கடைசியில் காதல் சொல்வதில்தான் முடிப்பார்கள்.  அதனால் காதல் எனக்கு பிடிக்கவில்லை. ஆறாம் வகுப்பில் ஆரம்பித்த இந்த காதல் வலைகளில்  சிக்காமல்   பன்னிரண்டாம் வகுப்பு முடித்தேன்.

சென்னைக்கு கொஞ்சம் தொலைவில் பசுமையான கிராமம் எங்களுடையது. விடுமுறையில் தோழிகளுடன் பக்கத்து நகரத்திற்கு வேலைக்கு போனேன். கசந்த காதல் இனி இனிக்கும் என்று தெரியாமல் நகரத்தில் காலடி வைத்தேன். அந்த இனிப்பு என் பெயரையும் என் வாழ்க்கையும் திசை மாற்றும் என்று தெரியவில்லை. நான் வேலைக்கு சேர்ந்த இடத்தில்தான் அவரை சந்தித்தேன். சுறுசுறுப்பான, களையான முகம். தேடிச் சென்று உதவும் குணம் ஆகியவை என்னை ஈர்த்தது. பாராட்டத்தான் பேசினேன். நட்பாக பழகினோம். எங்களுக்குள் காதல் எப்போது கனிந்தது எனக்கு இன்று வரை தெரியவில்லை. பார்த்தவர்கள் ‘உங்க ஆளு’ என்று சொல்லும் போது உற்சாகமாக இருந்தது.

ஆனால் எங்கும் ஊர் சுற்றியதில்லை. அலுவலக நேரம் முடிந்ததும் நாங்கள் சந்திப்பதும் முடிவுக்கு வரும். விடுமுறைகள் எரிச்சல் தந்தன. எரிச்சலை அதிகரிப்பது போல் தேர்வு முடிவுகள் வந்தன. கல்லூரியில் சேர ஆசைப்பட்டேன். வீட்டில் ஒத்துக் கொள்ளவில்லை. ‘அஞ்சலில் படி’ என்றபோது வருத்தமாக இருந்தது. அதுவரை சித்திவீட்டில் தங்கி கம்ப்யூட்டர் படி’ என்றதும் உற்சாகமானேன். காரணம் நாங்கள் வேலை செய்த நகரத்தில்தான் சித்தி வீடு இருந்தது.

அதனால் எங்கள் காதல் சாஃப்ட்வேரும், ஹார்டுவேரும் போல இணைந்து கிராபிக்ஸ் ஜாலங்கள் புரிந்தன. கத்தரிக்காய் முற்றினால் கடைத் தெருவுக்கு வரும்’ என்பது போல் முற்றிய காதலும் எங்கள் வீட்டு முற்றத்திற்கு சென்றது. இரண்டு வீட்டிலும் எதிர்ப்பு.  காதல்.... காதல்.... காதல் போயின் சாதல்’ என்பதில் இருவரும் உறுதியாக இருந்தோம்.
அவர்களும் எதிர்ப்பதில் உறுதியாக இருந்தனர். அக்கம், பக்கத்தில் உள்ளவர்களே ‘அவளா குனிந்த தலை நிமிரமாட்டாளே..... இருக்கிற இடமே தெரியாது.... அமைதியான பொண்ணாச்சே’ என்றனர். பாராட்டுகிறார்களா..... குத்திக் காட்டுகிறார்களா என்று புரியாத வேதனை நாட்கள் அவை.

தோழிகள் ஆறுதலாக இருந்தனர். சொந்தக்காரங்க சிலர் ‘நல்ல வேளை.... அந்த சாதியோனு பயந்தேன்.... ஆனா நிரந்தர வேலை இல்லையேடி’ என சாதி சங்க நிர்வாகிகள் போல் பேசினர். உண்மையில் அவருக்கு நிரந்தர வேலை இல்லை. ஆனால் அது எனக்கு அப்போது பெரிதாக தெரியவில்லை. என்னால் பெற்றவர்களுக்கு சங்கடம் ஏற்படும், பெயர் கெடும் என்பது குறித்தும் கவலைப்பட வில்லை. நல்ல நாள் அவர் பார்த்தார். சொன்ன நாளில் வீட்டை விட்டு வெளியேறினேன். நண்பர்கள் உதவியுடன் திருமணம்.

பழகிய நகரத்திலேயே வீடு தங்கும் வரை நண்பர்கள் வந்தனர். அவரும் ஏதோ வேலையில் இருந்தார். பற்றாக்குறை வருமானம் பெரிதாக தெரியவில்லை. அம்மா வீட்டில் சொகுசாக இருந்தேன். அதை விட இங்கு மகிழ்ச்சியாக உணர்ந்தேன். இனி மகிழ்ச்சி மட்டுமே மிச்சம் என்று நினைக்கையில்... சின்ன... சின்ன பிரச்னைகள் எட்டிப்பார்த்தன. காதலிக்கும் போது ஆண்களின் நல்ல குணங்கள் மட்டுமே தெரிகிறது. பழகும் போதும் மற்றவை பார்வையில் படுவதில்லை. வாழ ஆரம்பிக்கும் போதுதான் எல்லாம் வந்து சேருகின்றன.

காதலிக்கும் போது எனக்காக எல்லாம் விட்டு கொடுப்பார். நான் விட்டுக் கொடுத்தால் ஏற்றுக் கொள்ளமாட்டார். உன் விருப்பம்தான் என் விருப்பம் என்பார். கல்யாணத்திற்கு பிறகு நியாயமான விருப்பங்களை சொல்ல முடியாமல் போனது. நின்றால் குற்றம், நடந்தால் குற்றம் என்பதே வாழ்க்கையாகி போனது. எல்லாம் சரியாகும் என்று எதிர்பார்ப்பில் வாழ்க்கையை நகர்த்தியபோது மகள் வந்து சேர்ந்தாள். காதலை விட தாய்மை சுகமானது என்று புரிந்துக் கொண்டேன். அவரால் ஏற்பட்ட பிரச்னைகளை கண்டுக் கெள்ளவில்லை. நான் தேர்ந்தெடுத்த வாழ்க்கை அவர் சொன்னபடி நடந்தேன்.

ஆனால் அவரது வாக்குறுதிகள் காற்றில் பறந்தன. குடிப்பழக்கம் தொற்றிக் கொண்டது. தினமும் குடித்து விட்டு வந்து சண்டை போடுவார். தெளிந்ததும் கொஞ்சுவார். அந்த அன்புக்காக அவர் குடியை மன்னித்தேன். அதை அவருக்கு சாதகமாக்கி கொண்டு முழு நேர குடிகாரரானார். வளரும் குழந்தை அவரை கண்டால் அலற ஆரம்பித்தது. அப்பாவின் அன்பு என்னவென்று தெரியாமல் வளர்ந்தாள். தாயன்பு போதுமென நினைத்தேன்.

அதேநேரத்தில் பசித்த குழந்தைக்கு உணவு தர முடியாதநிலை. சம்பாதிப்பதை கொடுக்காமல் ஏமாற்றுவார். வேறு வழியில்லாமல் குழந்தையை என் அம்மாவிடம் கொடுத்தேன். அவள் அங்கு வளர நான் வேலைக்கு போக ஆரம்பித்தேன். அப்போதும் அவர் திருந்தவில்லை. என் உழைப்பும், அவர் குடிக்கு உதவிய கொடுமையும் நடந்தது.
மறுத்தால் அடியும், உதையும் அவருக்கு ஊறுகாயாக மாறிவிடும். என் குழந்தைக்கு அப்பா என்றால், ‘குடிகாரர், சண்டை போடுவார், அடிப்பார்’ என்றுதான் தெரியும். அவர் வீட்டு்க்கு வருவதையே குழந்தை விரும்பவில்லை. ‘அப்பா ஏம்மா நம்ம வீட்டுக்கு வர்றார். வர்ற வேணாம்னு சொல்லுமா’ என்று பல நாட்கள் கேட்டிருக்கிறாள்.

ஆனால் என் ‘காதல்’ கணவன் என்றாவது மாறுவார் என்று ஆவலுடன் காத்திருந்தேன். அதற்கான முயிற்சிகள் தோல்வியில்தான் முடிந்தன. ஒரு ரூபாய்க்கு கூட வருமானம் இல்லாவிட்டாலும் ‘தான் ஆண்... தான் சொல்வது அப்படியே நடக்கணும்’ என்பதில் உறுதியாக என்ன உறுதி அடாவடியாக இருந்தார். வீறாப்பாக வீட்டை விட்டு வெளியில் வந்து வாழ்ந்து காட்ட வேண்டும் என்று நினைத்த நான்...... அவரால் நடுத்தெருவில் நின்றேன். ஆம் காசு தரவில்லை என்றால் வீட்டை பூட்டிவிட்டு எங்காவது சென்று விடுவார். என் மகளுக்கு மட்டுமல்ல எனக்கு அவ்வப்போது அம்மாவீடுதான் அடைக்கலமாக இருந்தது.

பல ஆண்டுகள் பொறுத்தும் ஒருகட்டத்தில் ஒன்றும் சமாளிக்க முடியாமல் போனது. என் வாழ்க்கைதான் வீணானது. எனது மகளுக்காக முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனால் அவரை விட்டு நிரந்தரமாக பிரிய முடிவு செய்தேன். அவரிடம் சொன்ன போது அவர் கேட்கும் நிலையில் இல்லை. அதை கேட்டாவது என் காதல் கணவர் மாறுவார் என்ற சின்ன நப்பாசை இருந்ததை மறுக்கவில்லை. ஆனால் வீட்டை பூட்டிக் கொண்டு சென்றவர் பல நாட்கள் வரவில்லை. நண்பர்கள் மூலம் விவாகரத்து செய்யப்போவதை சொன்னேன். அதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இருந்தேன்.

முயற்சி முடிவதற்குள் செய்தி வந்தது. அவர் குடிபோதை எங்கள் குடும்ப வாழ்க்கையையும் மட்டுமல்ல அவரையும் கொன்றுவிட்டது என்று. வேகமாக ஆரம்பித்த வாழ்க்கை வேகமாக முடிவுக்கு வந்து விட்டது. என் வாழ்வில் இந்த 15 ஆண்டுகளில் என்ன நடந்தது... என்ன நடக்கிறது என்பது இன்று வரை புரியாத புதிராக உள்ளன. காதலை வெறுத்த நான் எப்படி காதலில் விழுந்தேன் இல்லை வீழ்ந்தேன். காதலித்த போது அப்படி நேசித்த என்னை விட அவருக்கு குடி எப்படி முக்கியம் ஆனது. மகள் பிறந்த போது அப்படி கொண்டாடிய அவர், அவள் நலன் குறித்து ஏன் கொஞ்சமும் யோசிக்கவில்லை.
ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது. அது என் மகளின் எதிர்காலம். ஏனென்றால் தூய்மையான காதலின் பரிசல்லவா அவள்.

அதுமட்டுமல்ல என் முதல் காதலுக்கு முன்பு வந்து விழுந்த காதல் அம்புகள் இப்போதும் வந்து விழுகின்றன. ‘நான் வாழ வைப்பேன்’ என்கிறார்கள் பலர். இன்றும் என் இன்ஷியலை மாற்ற துடிக்கின்றனர். ஆனால் எனக்கு ஆர்வமில்லை. சூடுபட்ட பூனை நான் இந்த பால்காரர்களை நம்புவதாக இல்லை. அதுமட்டுமல்ல ‘ஒருமுறைதான் காதல் வரும் தமிழர் பண்பாடு' நம்புகிறேன் நான்.

கே.வி


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 16-02-2019

  16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • BrightBrussels

  ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

 • francelemon

  பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

 • TitanicReplicaChina

  முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

 • train18modi

  டெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்