SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

என்றென்றும் இளமை: சினிமா காதல்!

2018-02-12@ 14:10:18

உலகம் முழுவதும் திரைப் படம் தயாரிக்கிறார்கள். மற்ற நாட்டு திரைப்படங்களுக்கும் தமிழ் படங்களுக்கும் இருக்கிற பெரிய வித்தியாசம் காதல். இங்கு காதல் இல்லாத படங்கள் இல்லை. அனிமேஷன், கார்டூன் படமாக இருந்தாலும் அதில் சிறிதளவாவது காதல் கண்டிப்பாக இருக்கும். இதற்கு காரணம் தமிழர்களின் வாழ்க்கை முறை. அது காதலால் நிறைந்தது. தமி்ழ் நாட்டில் காதலிக்காத இளைஞனே இருக்க முடியாது. சில காதல் நிறைவேறி திருமணத்தில் முடிந்திருக்கும், சில பாதியில் முறிந்திருக்கும், சில ஒருதலை காதலாக இருக்கும், சில காதல்கள் சொல்லப்படாமலேயே கடந்து போயிருக்கும், சில தோல்வி அடைந்திருக்கும், சில மீண்டும் பூத்திருக்கும். இப்படி ஏதோ ஒரு காதலில் தமிழ்நாட்டு இளைஞர்களும், இளைஞிகளும் விழுந்திருப்பார்கள்.

மவுன படங்கள் காலத்தில் பெரும்பாலும் புராண கதைகள்தான் திரைப்படமாக வெளிவந்தது. புராணத்தில் இடம்பெற்றிருந்த காதல்கள் படத்திலும் இடம்பெற்றது. குறிப்பாக முருகன் வள்ளியை கிழவன் வேடமணிந்து காதலித்த கதையை கூறலாம். மவுனப் படங்கள் பேசத் தொடங்கிய காலத்தில் காதலை தொடங்கி வைத்தவர் எம்.கே.தியாகராஜ பாகவதர். பாடல்களில் காதலை உருக உருக சொன்ன பாகவதர், காட்சிகளில் காதலியை அதிக பட்சம் தொட்டு பேசுவதாக மட்டுமே இருந்தது. அதுவும் குறிப்பாக கைகள், தோள்களை மட்டுமே தொட்டுப்பேசுவார். அவர் காலத்து படங்களில் நாயகன் ஒரு மூலைக்கும், நாயகி ஒரு மூலைக்குமாக நிற்பார்கள்.

பாகவதர் காலத்து காதலுக்கு பெரும் வில்லனாக இருந்தது அதிகார முரண்பாடு, மன்னர் மகளை சாதாரண வீரன் காதலிப்பான், அல்லது சக்கரவர்த்தியின் மகளை குறுநில மன்னன் காதலிப்பான். தன் வீரம், விவேகத்தால் காதலை வென்றெடுப்பான் காதலன். காதல் கதைகளிலும், காட்சிகளிலும் அடுத்தக் கட்டத்தை கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். காதலியை இறுக கட்டி அணைப்பதும், கன்னத்தோடு கன்னம் உரசுவதும், கட்டிப்பிடித்து தரையில் உருள்வதுமாக மிகப் பெரிய மாற்றத்தை கொண்டு வந்தார். சிவாஜி, ஜெமினி உள்ளிட்ட அவர் காலத்தைய நடிகர்கள் அதையே பின்பற்றத் தொடங்கினார்கள். ஆனாலும் முத்தக் காட்சிகள் இடம்பெறவில்லை. முத்தக் காட்சியில் பூக்களை வைத்து மறைத்து விடுவார்கள். அல்லது ஹீரோ உதட்டை துடைப்பார், ஹீரோயின் வெட்கத்தால் முகத்தை மூடிக்கொண்டு ஓடுவார்.

இதை வைத்துக் கொண்டு என்ன நடந்திருக்கும் என்பதை ரசிகர்கள் கற்பனைக்கு...

எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் காதலுக்கு வில்லனாக இருந்தது வர்க்க முரண்பாடு. பெரிய பணக்கார வீட்டு பெண்ணை ஏழை இளைஞன் காதலிப்பான். பணக்காரர் தன் பணபலம் ஆள்பலத்தை பயன்படுத்தி ஹீரோவை அழிக்க நினைப்பார். அவரை வென்று ஹீரோ ஹீரோயினை கை பிடிப்பார். பெரும்பான்மையான காதல் கதைகள் இப்படித்தான் இருக்கும்.
தொடர்ந்து 80களில்தான் தமிழ் சினிமாவில் விதவிதமான காதல்கள் வந்தது. அதற்கு மூல காரணமாக இருந்து அப்போதைய காதல் இளவரசன் கமல்ஹாசன். ஒரு தலை காதலுக்கு ஆகச் சிறந்த எடுத்துக்காட்டு 16 வயதினிலே படம்தான். மயிலை சப்பாணி ஒரு தலையாக காதலிப்பதுதான் 16 வயதினிலே படத்தின் ஒன் லைன். அடுத்துதான் ஒருதலை ராகம்.

மேலும் 80களில்தான் முக்கோண காதல், அதனால் வரும் மோதல், காதலுக்காக பழிவாங்கல், காதலியை காப்பாற்ற உயிரைக் கொடுத்தல் என காதலோடு ரத்தத்தை கலந்தது இந்த காலகட்டத்தில்தான். 80களின் காதலுக்கு பெரும்பாலும் காரணமாக இருந்தது ஈகோ. அது பெண்ணுக்கும் இருந்தது, ஆணுக்கும் இருந்தது. காதலனுக்காக காதலி உயிர் விடுவதும், காதலிக்காக காதலன் உயிர்விடுவதும் 80களில் அதிகமாக இருந்தது, குரோதமும், பகையும் காதலில் இருந்தது.

காதலர்களிடையே நேரடியாக முத்தக் காட்சிகள் இடம்பெற்றது இந்த காலத்தில்தான். ‘புன்னகை மன்னன்' படத்தில் கமல் ரேகாவுக்கு கொடுத்ததுதான் தமிழ் சினிமாவின் முதல் லிப்லாக் முத்தம். அதற்கு முன்பு ஜேம்ஸ் பாண்ட் படங்களில் மட்டுமே பார்த்து வந்த காட்சியை தமிழ் சினிமாவுக்கு கொண்டு வந்தார் கமல். காதலியுடன் ஒரே போர்வைக்குள் படுத்து உறங்குவது, காதலனை காதலி பாம்பு போன்று சுற்றிக் கொண்டு ஆடுகிற நெருக்கமெல்லாம் உருவானது.

அரிதாக 90களில் திரைப்பட காதல்களில் ஜாதி நுழைந்தது. காதலுக்கு ஜாதி ரீதியான எதிர்ப்பும் அது தொடர்பாக வரும் பிரச்னைகளும் சொல்லப்பட்டன.  கூடவே காதலர்கள் திருமணத்துக்கு முன்பே திட்டமிட்டோ அல்லது ஏதேச்சையாகவோ தாம்பத்திய உறவு கொண்டு அதன் மூலம் வரும் சிக்கல்கள் அதிகம் பேசப்பட்டது. படுக்கையறை காட்சிகள் துணிச்சலுடன் படமாக்கப்பட்டது.

அடுத்தக்கட்டமாக 2000ல் காதலில் தாம்பத்திய உறவு பெரிய விஷயமே இல்லை. ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கையுடன் இருக்கிறார்களா, அன்புடன் இருக்கிறார்களா என்பதுதான் பிரதானம் என்று ஆக்கப்பட்டது. பெற்றவர்கள் வேறு மாப்பிள்ளைக்கு கட்டாய திருமணம் செய்து வைக்க நினைப்பதால் இதுவரை காதலித்தவனுக்கு பரிசளிக்க நினைக்கும் காதலி ஒரு நாள் இரவு தன்னையே அவனிடம் ஒப்படைக்கிறாள் என்கிற அளவிற்கு கதைகளில் மாற்றம் ஏற்பட்டது.

பார்த்த உடன் காதல், பார்க்காமலேயே காதல், டெலிபோன் காதல், பஸ் பயண காதல், ரெயில் பயண காதல், பள்ளி காதல், கல்லூரி காதல், பணியிடத்து காதல் என விதவிமான காதல்கள் உருவானது 2000ல்தான் தான். காதலுக்கு வில்லனாக காதலர்களே இருந்தார்கள் அல்லது சூழ்நிலைகள் இருந்தது.

பிறகு 2010களில் காதலில் தகவல் தொழில்நுட்பம் மிகப்பெரிய பங்காற்றியது. டுவி்ட்டர், ஃபேஸ்புக் காதலின் தூதர்களானது காதலிப்பவனை தைரியமாக வீட்டுக்கு அழைத்துச் சென்று அறிமுக படுத்துகிற அளவிற்கு காதல் எளிமையானது. அதே நேரத்தில் முன்பை விட ஜாதி உணர்வு அதிகமாகி கவுரவ கொலைகள் பெருகி விட்டதால் அதுவும் திரைப்படங்களில் எதிரொலிக்கத் தொடங்கியது. மேம்பட்ட நாகரீக காதல் ஒரு பக்கம், ஜாதி வேற்றுமையால் ரத்தம் சிந்துகிற காதல் இன்னொரு பக்கம் என இரண்டு விதமான காதல்களில் பயணிக்கிறது இன்றைய சினிமா...

காதல் சென்டிமென்ட்

தமிழ் படங்களில் காதல் இருந்தாலும், ஒரு காலத்தில் படத்தின் பெயரில் காதல் இருந்தால் படம் ஓடாது என்ற சென்டிமென்ட் இருந்தது ஆச்சர்யம். காதல்... காதல்... காதல் என்ற பெயரில் வந்த படம் உட்பட பல உதாரணங்கள் உண்டு. காதல் கோட்டை படம் அந்த சென்டிமென்ட்டை மாற்றியது. அதன்பிறகு எங்கேயும் எப்போதும் காதல்தான்
 
மீரான்


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 16-02-2019

  16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • BrightBrussels

  ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

 • francelemon

  பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

 • TitanicReplicaChina

  முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

 • train18modi

  டெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்