SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இன்று பொங்கல் திருவிழா கவர்னர், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

2018-01-14@ 00:49:19

சென்னை: பொங்கல் திருநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கவர்னர், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.கவர்னர் பன்வாரிலால் புரோகித்: பொங்கல் மற்றும் சங்கராந்தி பண்டிகை தருணத்தில் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பொங்கல் ஒரு அறுவடை திருநாள்.  அது நமது குடும்பங்களுக்கு அளப்பரிய, அபரிமிதமான மகிழ்ச்சியையும், வளத்தையும் அளிக்கிறது. தை மாத தொடக்கம் நமக்கு இயற்கையின் ஆசீர்வாதங்களையும், அறுவடையையும் வாரி வழங்குகிறது. அதற்காக இந்த நல்ல  நாளில் நமது பிரார்த்தனைகளையும், நன்றியையும் தெரிவிப்போம். பொங்கல் பண்டிகையின் மகிழ்ச்சி கொண்டாட்டம் அற்புதமான இயற்கை வழிபாடு பாரம்பரியத்தையும், தொன்று தொட்டுவரும் நமது பழக்க வழக்கங்கள் மற்றும்  மிகப்பெரிய தமிழ் கலாசாரத்தையும், சந்தோசத்துடனும், பெருமையுடன் வழங்கப்படும்.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்: தைப் பொங்கல் திருநாளின் உதயம் தமிழக விவசாயிகளின் துயரங்களை எல்லாம் துடைத்தெறியும் நன்னாளாகவும், மழை வளம் பெருகி, மண் வளம் செழித்து, பயிர் வளம் நிறைந்து  தமிழரின் மனம் நிறைந்த ஆண்டாக இவ்வாண்டு திகழ்வதுடன், பிரதமர் மோடியின் பல்வேறு நலத்திட்டங்கள் நிரம்பப் பெற்ற மாநிலமாக தமிழகம் விளங்க இத் தைத்திருநாளில் வழிகாட்ட வாழ்த்தி, அனைவருக்கும் எனது  பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
திருநாவுக்கரசர் (தமிழக காங்கிரஸ் தலைவர்): உலகெங்கும் வாழும் தமிழர்களாலும், தமிழகத்தில் வாழும் அனைத்து மக்களாலும், சாதி, மதம், மொழி வேறுபாடின்றி உள்ளப் பூரிப்புடன் உவகையோடு கொண்டாடப்படும் விழா  பொங்கல் விழாவாகும். எல்லைக் கோடுகள் அனைத்தையும் கடந்த, எல்லையில்லா மகிழ்வு அளிக்கும் இவ் உவகைத் திருநாளில் மக்கள் அனைவரும் வளமும், நலமும் பெற்று வாழ எனது மனம் நிறைந்த பொங்கல்  நல்வாழ்த்துக்களை எனது சார்பிலும், தமிழக காங்கிரஸ் கட்சி சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ராமதாஸ் (பாமக நிறுவனர்): அனைத்துத் தரப்பு மக்களும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வேண்டும். அனைவரின் துயரங்களும் தீர வேண்டும். நாட்டில் நலம், வளம், அமைதி, மகிழ்ச்சி, சகோதரத்துவம் ஆகியவை   செழிக்க வேண்டும் என்பது தான் விருப்பம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அதேபோல், இந்த தமிழ் புத்தாண்டு தமிழக  மக்களுக்கு  அனைத்து வகையான தீமைகளில் இருந்தும் விடுதலை கிடைக்க வேண்டும்.  அதற்காக உழைக்க அனைவரும் பொங்கல் திருநாளில் உறுதியேற்க வேண்டும்.
வைகோ (மதிமுக பொது செயலாளர்): எத்தனை சோதனைகள், வேதனைகள் சூழ்ந்தாலும் அவற்றை தாங்கிக்கொண்டு தமிழ்நாட்டின் நலன்களைக் காக்கவும், பணநாயகத்திலிருந்து விடுவித்து, ஜனநாயகத்தைக் காக்கவும் தமிழக  மக்கள் உறுதிகொள்ள வேண்டும். இருளுக்குப்பின் வெளிச்சம் வந்தே தீரும் என்ற நம்பிக்கையோடு தமிழக மக்களுக்கும், உலகுவாழ் தமிழர்களுக்கும் மதிமுக சார்பில் தைத் திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள்.

விஜயகாந்த் (தேமுதிக தலைவர்): இந்த   பொங்கல் திருநாள் மக்கள் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தி ஒளிமயமான   எதிர்காலம் உருவாக வேண்டும். பழையன கழிதலும், புதியன புகுதலும் இயற்கையின்   நியதி என்பது  போல கடந்த ஆண்டு நடந்தது நடந்தவையாக இருக்கட்டும், இனி   நடப்பது மக்கள் வாழ்வில் நல்லவையாக இருக்கட்டும். இந்த பொங்கல் திருநாளை   பெற்றோர்களுடனும், குழந்தைகளுடனும் உற்றார் உறவினர்களுடனும்,    நண்பர்களுடனும் சேர்ந்து உறவாடி மகிழ்ந்து கொண்டாடவேண்டும் என தேமுதிக   சார்பில் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.தமிழிசை சவுந்தரராஜன் (தமிழக பாஜ தலைவர்): கரும்புக்கட்டோடு கொண்டாடும் இந்த விழாவிற்கு காரணமான விவசாயிகளின் பயிரும் காப்பாற்றப்பட வேண்டும், உயிரும் காப்பாற்றப்பட வேண்டும் என்ற நோக்கில் நதிகள்  இணைத்து நாடு முழுவதும் செழிக்க இந்த பொங்கல் வழிவகை செய்யட்டும். நாடு முழுவதும் செழிக்க தமிழ்நாடும், தமிழ் மொழியும், தமிழர் திருநாளில் செழித்தோங்க வேண்டும்.

அன்புமணி (பாமக இளைஞர் அணி தலைவர்): புல்லின்  மீதுள்ள பனித்துளி வெயில் பட்டதும் மறைவதைப் போல புதிதாக புலரும் தைத்  திங்கள் மக்களின் துன்பத்தையும், வருத்தத்தையும் நீக்கும் என்பதே எனது  நம்பிக்கை.  அது நிஜமாகி அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சியும், வளர்ச்சியும்,  வளமும், நலமும் பொங்க வேண்டும்; நாட்டில் அமைதியும், முன்னேற்றமும் செழிக்க வேண்டும் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் மாநில செயலாளர்): தைத் திருநாள் என்பது உழைப்பை, உழைப்பவரை உற்சாகப்படுத்தும் திருவிழா ஆகும். இந்த உலகம் உழைப்பவருக்கே உரியது என்பதை ஓங்கி உரைக்கும் திருநாளில்  இந்தியாவின் பன்முக பண்பாட்டை பாதுகாக்கவும், தமிழ், தமிழரின் உரிமைகளை காத்து நிற்கவும், விவசாயம், விவசாயிகளை பாதுகாக்கவும் தொடர்ந்து பாடுபடுவோம் என்று கூறி பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை  உரித்தாக்குகிறோம்.

இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): மனித உரிமைகள் பறிப்பு, மத்தியில் அதிகாரகுவியல், மக்கள் நல்லிணக்கத்தை சிதைக்கும், மதவெறி பேச்சுக்கள், அறிவியலுக்கு பொருந்தாத சாதி எனும் தப்பெண்ணம்  ஒருபக்கம் செல்வகுவியல், மறுபக்கம் ஏழ்மை எனும் நிலைமாறி ஒரு சமதர்ம சமூகம் நோக்கி நடைபோட பொங்கல் திருநாளில் சபதமேற்போம். அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்): பொங்கல் திருநாள் முதல் தமிழகத்தில் இனிமேல் நல்லதே நடக்க வேண்டும். தீயவை ஒழிய வேண்டும்; நிச்சயமற்ற தன்மை நீங்க வேண்டும். தமிழர்களின் இல்லம் தோறும் பொங்கல்  பொங்குவது போல், மகிழ்ச்சி பொங்க வேண்டும். மங்கலம் பெருக வேண்டும்; இறைவனும், இயற்கையும் நமக்குத் துணை நிற்க வேண்டும் என்று கூறி தமிழ் மக்களுக்கு தமாகா சார்பில் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.திருமாவளவன் (வி.சி.க.தலைவர்): விவசாயத்தையும்,  விவசாயிகளையும் பாதுகாப்பதற்கு, விவசாயக் குடும்பங்கள்   மட்டுமின்றி  அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து போராடவும் தமிழகம் உள்ளிட்ட   இந்தியா  முழுவதும்  சூழ்ந்து வரும் சாதிய-மதவாத அரசின்  தீங்குகளிலிருந்தும்  மக்களை  பாதுகாத்திடவும் பொங்கல் திருநாளில் அனைத்து  ஜனநாயக சக்திகளும்   உறுதியேற்போம். தமிழர் திருநாள் வெறுமெனக் கூடிக்  கலையும் கொண்டாட்டத்    திருநாளாக இல்லாமல் மண்ணையும் மக்களையும் குறிப்பாக  உழவுத்தொழிலையும்    காப்பதற்கான சூளுரை ஏற்கும்  நாளாக கொண்டாடுவோம்.

கி.வீரமணி (தி.க.தலைவர்): பொங்கல்- தமிழ்ப் புத்தாண்டு மலரும் இந்நாளில் தேவையற்ற பழமைகள் விடைபெறவும், வரவேண்டிய புதுமைகள் பொங்கவும், உழவர் மற்றும் அனைத்து மக்களும் ஜாதி, சமய, சச்சரவுகளின்றி,  மனிதநேயம் பேண, சுயமரியாதையுடன் வாழ வழிவகுக்கும் ஆண்டாக அமையட்டும். அனைவருக்கும் அனைத்தும் கிட்டும் பொங்கல் புத்தாண்டாக அமையட்டும்.டிடிவி.தினகரன்: உலகம் எங்கும் வாழும் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இனிய பொங்கல் திருநாளில் தமிழக மக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.  விவசாயிகளுக்கு தோள் கொடுக்கும் தோழனாக, அவர்களை பாதுகாக்கும் ஒரு கவசமாக அரசு இருக்க வேண்டும். இதற்கு முரணாக தங்களை மட்டுமே பாதுகாத்துக்கொள்ளும் எண்ணம் ஒரு களையை போல ஆட்சி அதிகாரத்தில்  முளைத்துவிட்டது. இதை நீக்கிட இந்த நாளில் உறுதி ஏற்போம்.

மேலும்,  இந்தியன் யூனியன் முஸ்லிம் தேசிய தலைவர் காதர் மொகிதீன், மனித நேய ஜனநாயக கட்சி பொது செயலாளர் தமிமுன் அன்சாரி,  சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்,  பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர்  என்.ஆர்.தனபாலன், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் சேதுராமன், தமிழக காங்கிரஸ் கட்சி துணை தலவைர் எச்.வசந்தகுமார் எம்எல்ஏ, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், மக்கள் தேசிய  கட்சியின் தலைவர் ேசம.நாராயணன், இந்திய தேசிய முஸ்லிம் லீக் தலைவர் ஜவஹர் அலி, ஜனதாதளம் (ஐக்கியம்) தமிழக பொது செயலாளர் டி.ராஜகோபால், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் தலைவர் தி.தேவநாதன்  யாதவ், தமிழக முற்போக்கு மக்கள் கட்சி தலைவர் சக்திவேல் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-10-2018

  23-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • longestseabridge

  உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

 • delhi_strikepetrol18

  டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

 • solarcar_race

  சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

 • hondurans_americatrump

  ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்