SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்டிரைக் சமயத்தில் பஸ்சை நடுவழியில் நிறுத்தியது யார், யார்? போக்குவரத்து நிர்வாகம் பட்டியல் தயாரிப்பு

2018-01-14@ 00:45:06

சென்னை: பஸ் ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியை போக்குவரத்து நிர்வாகம் தொடங்கியுள்ளது. அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கடந்த 8 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினர். நேற்று முன்தினம் இரவு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து, வேலை நிறுத்த போராட்டம் தொடர்பாக ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியை நிர்வாகம் தொடங்கியுள்ளது. கடந்த 4ம் தேதி குரோம்பேட்டை பணிமனையில் அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டதை தொடர்ந்து அன்று மாலை முதலே சென்னை உள்பட பெரும்பாலான இடங்களில் ஊழியர்கள் பஸ் ஸ்டிரைக்கில் குதித்தனர். சிலர், நடுரோட்டில் தங்களை இறக்கிவிட்டதாகவும் பயணிகள் குற்றம்சாட்டினர்.

இதனால் ஊழியர்கள் மீது நிர்வாகம் கடும் அதிருப்தியில் உள்ளது. இதற்கிடையில், நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர். மொத்தம் உள்ள 8 கோட்டங்களில் சுமார் 53,000 பேருக்கு முதல்கட்டமாக தனித்தனியே நோட்டீஸ் வழங்கப்பட்டன. அதில், பணிக்கு திரும்பாதது ஏன்? என்பது உள்பட சில விளக்கங்கள் கேட்கப்பட்டிருந்தன. இந்நிலையில், ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டு, மறுநாள் காலை முதல் ஊழியர்கள் பணிக்கு திரும்பினர். இதையடுத்து, கடந்த 8 நாட்களாக ஸ்டிரைக்கில் ஈடுபட்ட ஊழியர்கள் யார், யார்? கடந்த 4ம் தேதி அன்று யார், யாரெல்லாம் பஸ்சை பணிமனையில் ஒப்படைக்காமல் நடுவழியில் நிறுத்தி சென்றனர்? என்ற விவரங்களை சேகரிக்கும்படி போக்குவரத்து செயலாளர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, அனைத்து போக்குவரத்து பணிமனை மேலாளர்கள் மூலம் அந்த பட்டியல் சேகரிக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக, சென்னையில் நேற்று காலை முதல் அந்த பணியை அதிகாரிகள் தொடங்கினர். பட்டியல் கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது அதிகபட்சமாக சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அரசு மீது மேலும் கோபம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, ஊழியர்கள் கூறியதாவது: நிர்வாக விதிமுறைகள்படி, ஒரு டிரைவர் தனது வழித்தடத்துக்கான பஸ்சை பெற்றுக் கொண்டால் பணி முடிந்த பின்பு பத்திரமாக அந்த பஸ்சை சம்பந்தப்பட்ட பணிமனையில் ஒப்படைக்க வேண்டும். இடையில் விபத்து ஏற்பட்டாலோ அல்லது பழுது ஏற்பட்டாலோ அதிகாரிகளிடம் தகவல் சொல்ல வேண்டும்.

இதுபோன்று ஸ்டிரைக் நேரங்களில் தொழிற்சங்க முடிவை மீறி பஸ் ஓட்டினால் இடையில் ஏதாவது தகராறு ஏற்படும். எனவே, அதற்கு பயந்து அருகில் உள்ள பணிமனைகளில் நிறுத்திவிடுவோம். ஆனால், பஸ் எடுக்கப்பட்ட பணிமனைகளில் பஸ்சை விடவில்லை என்று காரணம் காட்டி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளனர். பிரச்னைக்கு பயந்துதான் சில டிரைவர்கள் வேறு வழியில்லாமல் நடுவழியில் பயணிகளை இறக்கிவிட்டிருப்பார்கள். பொதுமக்களுக்கு இந்த விவரம் தெரியாததால் அவர்கள் எங்கள் மீது குற்றம்சாட்டுவது வழக்கம்தான். ஆனால், எல்லாம் தெரிந்த அதிகாரிகள் நிலைமையை உணர்ந்து நடவடிக்கை முடிவை கைவிட வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-01-2018

  20-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • LumiereFestivalLondon

  லண்டனில் லூமியர் ஒளி திருவிழா 2018: வண்ண விளக்குகளில் காட்சியளிக்கும் தலைநகரம்

 • bus_fire_kazakhstan

  கஜகஸ்தானில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 52 பேர் கருகி உயிரிழப்பு

 • london_light_festival

  குளிர்கால விளக்குத் திருவிழா: விளக்கின் வெளிச்சத்தில் மின்னும் லண்டன் நகரம்!

 • kalaivanar_arangil11

  கலைவாணர் அரங்கில் நடைபெற்ற இந்திய ராணுவ தளவாட உற்பத்திக்கான புதிய பங்களிப்பு தொடர்பான கண்காட்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்