SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போகி பண்டிகை கொண்டாட்டத்தால் புகை மண்டலமானது சென்னை

2018-01-14@ 00:32:42

* காற்று மாசு கடந்த ஆண்டை விட பல மடங்கு அதிகம்
* விருகம்பாக்கத்தில் அதிகபட்சமாக 386 மைக்ரோகிராம்

சென்னை: போகி பண்டிகை கொண்டாட்டத்தை ஒட்டி, சென்னையில் காற்று மாசு கடந்தாண்டைவிட பல மடங்கு அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக விருகம்பாக்கத்தில் 386 மைக்ரோகிராம் காற்று மாசு இருந்தது.ஆண்டுதோறும் போகி பண்டிகை அன்று, பழையன கழிதல், புதியன புகுதல் என்ற சொல்லுக்கேற்ப பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள பழைய பொருட்களை எரிப்பது வழக்கம். காற்று மாசு ஏற்படுவதால் பிளாஸ்டிக், டயர்  உள்ளிட்டவற்றை எரிக்க கூடாது என்று அரசு தரப்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இருப்பினும், நேற்று முன்தினம் நள்ளிரவு மக்கள் வழக்கம்போல் வீட்டில் உள்ள பாய், துடைப்பம் உள்ளிட்ட தேவையற்ற பழைய பொருட்களை ரோட்டில் போட்டு எரித்து போகி பண்டிகை கொண்டாடினர். இளைஞர்களும், குழந்தைகளும் குடும்பத்துடன், எரிகிற தீயின் அருகில் நின்று மேளம் அடித்து போகி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். தொடர்ந்து, அருகில் உள்ள பகுதிகளுக்கு தனது நண்பர்களுடன் மேளம்  அடித்தபடியே சந்தோஷமாக வலம் வந்தனர். இதை தொடர்ந்து, பெண்கள் தங்களது வீட்டு வாசலை சுத்தம் செய்து வண்ணக் கோலங்களை போட்டனர்.தேவையற்ற பொருட்களை அதிகமாக தீயிட்டு கொளுத்தியதால் நேற்று நகர்  முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு புகைமூட்டம் இருந்தது. இதனால், காலை 8 மணி வரை வாகனங்களில் சென்றவர்கள் முகப்பு விளக்குகளை  எரியவிட்டபடியும், கார்களில் சென்றவர்கள் பார்க்கிங் விளக்குகளை எரியவிட்டபடியும் சென்றனர்.

பைக்குகளில் சென்றவர்கள் வாகனத்தை ஓட்ட முடியாமல் கடுமையாக அவதிப்பட்டனர். காலை 11 மணி வரை சென்னையில் புகை மூட்டம் காணப்பட்டது.  புகை மூட்டம் அதிகமாக இருந்ததால் பலர் முகத்தில் துணி  கட்டிக்கொண்டே வீட்டை விட்டு வெளியே வந்தனர். இந்நிலையில், போகி பண்டிகையை ஒட்டி நடத்தப்பட்ட காற்று மாசு அறிக்கையை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நேற்று வெளியிட்டது. அதில், அதிகபட்சமாக சென்னை விருகம்பாக்கத்தில் காற்று மாசு 386  மைக்ரோகிராமாக இருந்துள்ளது.
இதுகுறித்து, மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட ஆய்வு விவரம் வருமாறு:சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 15 இடங்களில் காற்றுத்தர ஆய்வு போகிக்கு முன்பும், போகியன்றும் மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது, காற்றில் சல்பர்டை ஆக்ஸைடு மற்றும் நைட்ரஜன் டை ஆன்ஸைடு  ஆகியவை போகிக்கு முன்பும், பின்பும் அனுமதிக்கப்பட்ட அளவான 80 மைக்ரோகிராமை விட குறைவாக இருந்தது.அதேசமயம், அதிக ஈரப்பதம், குறைந்த வெப்பநிலை ஆகிய காரணங்களால் சுவாசிக்கும்போது உட்செல்லக்கூடிய  மிதக்கும் நுண்துகள்கள் 15 இடங்களிலும் அனுமதிக்கப்பட்ட அளவான 100 மைக்ரோகிராமை விட அதிகமாக காணப்பட்டது.

அதன்படி, போகி அன்று திருவொற்றியூரில் 204 மைக்ரோகிராம் (கடந்த ஆண்டு போகிக்கு 184), மணலியில் 263 மைக்ரோகிராம் (237), கொளத்தூரில் 215 மைக்ரோகிராம் (150), தண்டையார்பேட்டை 241 மைக்ரோகிராம் (172), ராயபுரம்  235 மைக்ரோகிராம் (234), திரு.விக.நகர் 353 மைக்ரோகிராம் (276), அம்பத்தூர் 343 மைக்ரோகிராம் (306), அண்ணாநகர் 270 மைக்ரோகிராம் (166), தி.நகர் 169 மைக்ரோகிராம் (133), கோடம்பாக்கம் 339 மைக்ரோகிராம் (150), விருகம்பாக்கம்  386 மைக்ரோகிராம் (234), மீனம்பாக்கம் 135 மைக்ரோகிராம் (186), பெசன்ட் நகர் 172 மைக்ரோகிராம் (70), பெருங்குடி 203 மைக்ரோகிராம் (140), சோழிங்கநல்லூர் 141 (185) மைக்ரோகிராம் காற்று மாசு அதிகரித்திருந்தது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.ஆய்வின் மூலம் கடந்தாண்டை விட இந்த ஆண்டு காற்று மாசு பல மடங்கு அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-10-2018

  21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • dussehraa_11

  நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

 • 20-10-2018

  20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • tirupathivavacha

  திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

 • kulasaidasaraeight

  வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்